சென்னையில் யூரின் பாயிண்டாக மாறும் தெரு முனைகள்.. இனி பொதுவெளியில் சிறுநீர் கழித்தால் ரூ.50 அபராதம்!
சென்னையில் பெரும்பாலான இடங்கள் யூரின் பாயிண்ட்டாக மாறியுள்ளன. எனவே இதனை தடுக்கவும் பொதுக்கழிப்பறை பயன்பாட்டை அதிகரிக்கவும் இந்த அபராத தொகை வசூலிக்கப்படுகிறது.
சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் ரூ.50 அபராதம் செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இந்த விதிமுறையை நீண்ட காலமாக மாநகராட்சி அதிகாரிகள் கிடப்பில் போட்டு வைத்திருந்தனர். இந்நிலையில் இதனை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.
சென்னையின் மக்கள் தொகை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்றவாறு சுகாதார சீர்கேடுகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் பொதுக்கழிப்பிடம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சுகாதார சீர்கேடுகள் தொடர்ந்து நீடித்துதான் வருகின்றது. குறிப்பாக மழை நாட்களில் சென்னை தெருக்களில் நடப்பது என்பது சவாலான விஷயமாக இருக்கும். மனித கழிவுகளுக்கும் நாய்களின் கழிவுகளுக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டிருக்கும்.

இப்படியான நிலையில் இது குறித்து தொடர்ந்து புகார்கள் வந்துக்கொண்டே இருக்கிறது. சென்னை மாநகராட்சிக்குள் ஏதாவது ஒரு வீடு சில நாட்கள் காலியாக இருந்தால் போதும் அது தானாகவே 'யுரின் பாயிண்டாக' மாறிவிடும். அந்த அளவுக்கு மாநகராட்சி சீரழிந்துள்ளது. இப்படி இருக்கையில் இந்த சீர்கேட்டை தடுக்க மாநகராட்சி பல யோசனைகளை நடைமுறைப்படுத்தியது. அப்படி வந்ததுதான் பொதுக்கழிப்பிடங்கள்.
ஆனால் மோசமான பராமரிப்பு காரணமாக பலர் இதனை பயன்படுத்துவதை தவிர்த்து பொதுவெளியை பயன்படுத்துகின்றனர். எனவே பொதுவெளியில் சிறுநீர் கழிப்பதை தடுக்கும் நோக்கில் சென்னை மாநகராட்சி சட்டம் 1919ன் படி பொதுவெளியில் சிறுநீர் கழிப்பவர்களிடம் ரூ.50 அபராதம் வசூலிக்கப்பட வேண்டும் என்று ஆணையர் ககன்தீப் சிங் பேடி மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின்படி மாநகராட்சியின் தூய்மைப்பணி ஆய்வாளர்கள் அபராத தொகையை வசூலிப்பார்கள் என்றும், இதற்காக குற்றம்சாட்டப்பட்ட நபரின் பெயருடன் கூடிய ரசீது வழங்கப்படும் என்றும் மாநகராட்சி கூறியுள்ளது.
சென்னையை பொறுத்த அளவில் தற்போது 800க்கும் அதிகமான கழிப்பறைகள் இருக்கின்றன. 2021ம் ஆண்டுக்கு முன்னர் இதைவிட குறைவாக இருந்த நிலையில், ஸ்வட்ச் பாரத் 2.0 மிஷன் 2021ல் சென்னையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் வழிகாட்டுதலின் படி 500மீ சுற்றளவில் ஒரு பொதுக்கழிப்பிடம் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. எனவே கழிப்பறைகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்த்தப்பட்டது. இருப்பினும் மோசமான பராமரிப்பு பணி காரணமாகவே மக்கள் இதனை சரியாக பயன்படுத்துவதில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications