இனி டோட்டலா மாற போகுது சென்னை சாலைகள்! அதிரடியில் இறங்கிய மாநகராட்சி! படுவேகமாக நடக்க போகும் மாற்றம்
சென்னை: தலைநகர் சென்னையில் பல இடங்களில் சாலைகள் மோசமாக உள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
சென்னையில் வாகன நெரிசல் எந்தளவுக்கு மோசமாக இருக்கும் எனத் தனியாகச் சொல்ல வேண்டியது இல்லை. அதிலும் பீக் வஹர்களில் வேகமாகச் செல்ல முடியாத அளவுக்குச் சாலைகளில் வாகனங்களே நிரம்பி இருக்கும்.

போக்குவரத்து நெரிசல் அந்தளவுக்கு இருந்தாலும் கூட சாலைகளின் தரம் மிக மோசமாகவே இருக்கும். குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளில் கொஞ்ச நேரம் பயணித்தாலேயே எப்போதுதான் முடியும் என்ற ரேஞ்சுக்கு டயர்ட் ஆகிவிடுவோம்.
சென்னை சாலைகள்: சமீப காலங்களில் சமூக வலைத்தளங்களைக் கவனித்திருந்தால் தெரிந்திருக்கும். சென்னையில் சாலைகள் மோசமாக இருப்பதாக வரும் புகார்கள் பல மடங்கு அதிகரித்து இருக்கிறது. புகார்கள் அதிகரித்த நிலையில், மோசமான நிலையில் உள்ள சாலைகளை அடையாளம் காணும் பணிகளில் சென்னை மாநகராட்சி இறங்கியது. அதன்படி 10,000க்கும் மேற்பட்ட சாலைகள் ரிலே செய்ய வேண்டும் என்று மாநகராட்சி அடையாளம் கண்டது.
அதிலும் குறிப்பாக அவற்றில் 2,000 சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளதாகப் பட்டியலிடப்பட்டது. இதையடுத்து சாலையை ரிலே செய்யும் பணிகள் ஒப்பந்ததாரர்கள் மூலம் ஆரம்பிக்கப்பட்டது. இருப்பினும், பல இடங்களில் பணிகள் அமை வேகத்தில் நடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். மிக விரைவில் பருவமழை தொடங்கும் நிலையில், சாலை மேலும் மோசமாகுமோ என மக்கள் கவலையடைந்துள்ளனர்.
அதிரடி ஆக்ஷன்: 10 ஆயிரம் சாலைகளில் 2500 சாலைகளில் மட்டும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதற்கிடையே இந்த நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. சாலைப் பணிகளில் இருக்கும் பிரச்சினைகளைக் கண்டறியும் நடவடிக்கையை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆரம்பித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து அனைத்து ஒப்பந்ததாரர்களையும் மீட்டிங்கிற்கும் அழைத்துள்ளார்.
இது குறித்து ஜெ. ராதாகிருஷ்ணன் கூறுகையில், "பல்வேறு பகுதிகளில் சாலைப் பணிகள் மிகவும் மந்தமாக நடந்து வருகிறது. தினமும் 3 முதல் 4 கி.மீ. மட்டுமே சாலை போடுகிறார்கள். இது குறித்து நாங்கள் அவர்களிடம் மீட்டிங் நடத்துகிறோம். அதன் பிறகும் அவர்கள் செயல்திறன் திருப்திகரமாக இல்லை என்றால், ஒப்பந்ததாரரை பிளாக் லிஸ்டில் சேர்க்க உள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.
என்ன காரணம்: சென்னையில் 1,493 கி.மீ., நீளத்திற்குச் சாலைகள் ரிலே செய்ய 908 கோடி ரூபாயைச் சென்னை மாநகராட்சி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாகவே சென்னையில் தினசரி தொடர்ந்து மழை பெய்யும் நிலையில், சாலை அமைக்கும் பணிகளில் தாமதம் ஏற்பட அதுவே காரணம் என சில ஒப்பந்ததாரர்கள் கூறுகின்றனர். மற்ற பணிகளால் சாலைப் பணிகளைத் தொடங்க முடியவில்லை என சில ஒப்பந்ததாரர்கள் கூறுகின்றனர்..
அதாவது மழைநீர் வடிகால் பணிகள் ஒரு பக்கம் நடந்து வரும் நிலையில், இதனால் சுமார் 1,000 சாலைகளில் பணிகள் ஆரம்பிக்கவே இல்லையாம். இதையடுத்து சாலைப் பணியை எளிதாக்கும் வகையில் வரும் செப். 30ஆம் தேதிக்குள் இந்த பணிகளை முடிக்குமாறு மாநகராட்சி வடிகால் வாரியத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது. வடிகால் வாரிய பணிகளை அடுத்த 15 நாட்களில் முடிக்காத ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாகப் பெய்த தொடர் மழையும் சாலைப் பணிகளைத் தாமதப்படுத்தியுள்ளது. சுமார் 500க்கும் மேற்பட்ட சாலைகள் பழைய சாலை நீக்கப்பட்டு மில்லிங் பணிகள் முடிவடைந்த போதிலும், மழை காரணமாகச் சாலை அமைக்கும் பணிகளைத் தொடங்க முடியவில்லை.












Click it and Unblock the Notifications