சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்படும் டிராபிக் பெண் போலீஸார்! சென்னையில் 5 இடங்களில் பயோ டாய்லெட்கள்
சென்னை: சென்னையில் பெண் காவலர்களுக்காக 5 பயோ கழிப்பறைகளை சென்னை காவல் துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் திறந்து வைத்தார்.
ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி சிறுநீர், மலம் கழிப்பதை அடக்கக் கூடாது என்றும் அவ்வாறு செய்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இன்னும் சிலர் கழிப்பறையை தேடி ஓட வேண்டுமே என்பதற்காக தண்ணீர் கூட குடிக்காமல் இருப்பார்கள். இதனால் அவர்களுக்கு நீர் சத்து குறைபாடு ஏற்படும். ஒரு முறை மோசமான முறையில் நீர் சத்து குறைந்துவிட்டால் அதை உயர்த்துவது சற்று கஷ்டமாகும்.
எனவே கழிப்பறைகளுக்கு செல்வதில் கூச்சம் இல்லாமல் இருங்கள் என்பதுதான் மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கிறது. இருந்தாலும் கழிப்பறை இல்லாத இடங்களாக இருந்தால் என்ன செய்வது, பொதுவாக பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையங்களில் கழிப்பறைகள் இருக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் பெண் காவலர்கள் டூட்டி பார்க்கும் இடங்களில் எப்படி இருக்கும்?
இதற்கு பால்மாறிக் கொண்டே நிறைய பெண் காவலர்கள் தண்ணீர் குடிக்காமல் மணிக்கணக்கில் பணியாற்றி வருகிறார்கள். அதிலும் நீண்ட நேரமாக பணியாற்றும் அவர்கள் தண்ணீர் குடிக்காததால் நீர் சத்து குறைந்து மயக்கமடைய வாய்ப்புகள் உள்ளன. தற்போது வெயில் காலம் நெருங்கி விட்டது. கோடைக்காலத்திற்கு முன்பே வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது.
இதனால் நீர் சத்து மிகுந்த உணவுகளையும் திரவ உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். சென்னை மாநகராட்சியில் போக்குவரத்து துறையில் பணியாற்றும் பெண்கள் நிறைய பேர் சிக்னல்களில் பணியமர்த்தப்படுகிறார்கள்.
அவர்கள் நீண்ட நேரம் பணியாற்றும் போது இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் சென்னையில் முக்கிய 5 சந்திப்புகளில் பயோ கழிப்பறைகளை சென்னை காவல் துறை ஏற்படுத்தியுள்ளது. அதை சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் திறந்து வைத்தார்.

1. உழைப்பாளி சிலை
2. கண்ணகி சிலை
3. விவேகானந்தா இல்லம்
4. பல்லவன் இல்லம்
5. நேப்பியர் பாலம்
ஆகிய 5 இடங்களில் பயோ டாய்லெட் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் முக்கிய நோக்கமே நீண்ட நேரமாக பணியாற்றும் பெண் காவலர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க எந்த சிரமமும் ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான். இந்த முயற்சியை வெற்றிகரமாக நிறைவேற்ற உதவியாக இருந்த Chennai Runners யை கவுரவிக்கும் வகையில் கேடயங்கள் வழங்கப்பட்டன.
பயோ டாய்லெட் என்றால் என்ன: சுற்றுச்சூழலை சுகாதாரமாக பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்டதுதான் இந்த பயோ டாய்லெட்டுகள். இவை காற்றழுத்த முறையில் செயல்படுபவை. இந்த பயோ டாய்லெட்டுகளில் நுண்ணுயிரிகளின் செயல்பாட்டால் மனிதக் கழிவுகள் 99 சதவீதம் மக்கச் செய்து பயோ வாயுவாக வெளியேற்றும். இதில் துர்நாற்றம் இருக்காது. தண்ணீரின் பயன்பாடும் குறையும்.












Click it and Unblock the Notifications