தமிழகத்தில் அதிக நிலச்சரிவு ஆபத்தில் நீலகிரி! புவியியல் ஆய்வில் பகீர் தகவல்! ஊட்டி இருக்கே!
சென்னை: தமிழகத்தில் சுமார் 1000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நிலப்பகுதிகள் நிலச்சரிவு அபாயத்திற்கு உள்ளாகியுள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் (ஜிஎஸ்ஐ) கண்டறிந்துள்ளது. இந்த விவரங்களை மத்திய புவி அறிவியல் அமைச்சகம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இதில், நீலகிரி மாவட்டம் அதிக நிலச்சரிவு அபாயம் உள்ள மாவட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
புவி அறிவியல் அமைச்சகத்தின் சார்பில் தமிழகத்தில் 11,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 10,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் நிலச்சரிவு ஏற்படும் ஆபத்து உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலப்பகுதிகளில், 8,000 சதுர கிலோமீட்டர் பகுதிகள் குறைந்த ஆபத்துள்ளவையாகவும், 2,000 சதுர கிலோமீட்டர் பகுதிகள் மிதமான ஆபத்துள்ளவையாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் அதிக நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் தமிழகத்தின் நீலகிரி மாவட்டமும் ஒன்றாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதேபோல், இமயமலை, வடகிழக்கு மலைகள், மேற்குத் தொடர்ச்சி மலைகள் உட்பட 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 4.3 லட்சம் சதுர கிலோமீட்டர் மலைப்பகுதிகளையும் ஜிஎஸ்ஐ ஆய்வு செய்துள்ளது.
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், "மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு குறித்த முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை இந்திய புவியியல் ஆய்வு மையம், மாநிலங்களுக்கு வழங்கத் தொடங்கியுள்ளது. தற்போது, 8 மாநிலங்களில் உள்ள 21 மாவட்டங்களில் இந்த முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன" என்றார்.
இந்த மாவட்டங்களில் நீலகிரி, மேற்கு வங்கம், சிக்கிம், கேரளா, கர்நாடகா, உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம் மற்றும் நாகாலாந்து ஆகியவை அடங்கும். உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம், நாகாலாந்து, கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சில பகுதிகள் அதிக அபாயத்தில் உள்ளதாகவும், அதே சமயம் அசாம், திரிபுரா மற்றும் மேகாலயா ஆகியவை பெரும்பாலும் குறைந்த அபாயமுள்ள பகுதிகளாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிரபல சுற்றுலா தலமாக விளங்கும் நீலகிரியில் அழகிய மலைகள் உள்ளன. இங்குள்ள ஊட்டியை மலைகளின் அரசி என அழைப்பதுண்டு. இங்கு பெருமழை காலங்களில் நிலச்சரிவுகள் மிகவும் ஆபத்தானவையாகும்.
இது ஏன் என்பது குறித்து மண், நீர் வள ஆராய்ச்சி நிறுவனத்தினர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் நீலகிரியில் வடிகால்கள் அமைக்காமல் வீடுகளை கட்டியதாலும் விவசாய நிலங்களில் படிமட்டங்களை மேற்கொள்ளாததாலும் நிலச்சரிவு மற்றும் பல்வேறு அபாயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனை தடுக்க மேலும் சில ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications