இன்று முதல்.. இந்த பொருட்கள் வாங்கினால்.. இனி ஜிஎஸ்டியே கிடையாது.. ஜீரோ வரி.. முழு லிஸ்ட்!
சென்னை: சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில், அத்தியாவசியப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்கியும், வரி விதிப்புப் பிரிவுகளை மறுசீரமைத்தும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
முன்னதாக 5% முதல் 12% வரை வரி விதிக்கப்பட்ட பல பொருட்கள், இனி ஜீரோ ஜிஎஸ்டி வரிப் பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் நீண்டநாள் கோரிக்கையை பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது.

ஜிஎஸ்டி வரியில் இருந்து முழுமையாக விலக்கு
உயர்ந்த வெப்பநிலையில் பதப்படுத்தப்பட்ட பால் (UHT Milk) இனி ஜிஎஸ்டி வரியில் இருந்து முழுமையாக விலக்கு பெறுகிறது. இது நாடு முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஓர் அத்தியாவசியப் பொருளாகும்.
முன்பே பேக்கிங் செய்யப்பட்ட மற்றும் லேபிளிடப்பட்ட பன்னீர் (சேனா) இனி வரி விலக்குடன் கிடைக்கும். ஏற்கனவே சில்லறையாக விற்பனை செய்யப்படும் பன்னீர் வரி விலக்குடன் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
ரொட்டி, சப்பாத்தி, பராத்தா, புரோட்டா உள்ளிட்ட அனைத்து இந்திய ரொட்டி வகைகளும் இனி ஜிஎஸ்டி வரி இல்லாமல் விற்பனை செய்யப்படும். இது இந்த உணவுப் பொருட்களின் விலையை கணிசமாகக் குறைக்கும்.
உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள் இனி ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு பெற்றுள்ளன. குறிப்பாக புற்றுநோய் சிகிச்சைகள் மற்றும் அரிய மரபணு நோய்களுக்கான மருந்துகள் ஜிஎஸ்டி வரம்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
அகாலசிடேஸ் பீட்டா, இமிக்ளுசெரேஸ் மற்றும் எப்டாகோக் ஆல்ஃபா ஆக்டிவேட்டட் ரிகம்பினன்ட் கோகுலேஷன் ஃபேக்டர் VIIa ஆகிய மூன்று மருந்துகளுக்கு, முன்பு 5% வரி விதிக்கப்பட்ட நிலையில், தற்போது அவை வரி விலக்கு பெற்றுள்ளன.
ஜிஎஸ்டி வரி விலக்கு
ஓனாசெம்னோஜென் அபெபார்வோவெக், அசிமினிப், மெபோலிசுமாப், டாராட்டுமுமாப், ரிஸ்டிப்லாம், போலடுசுமாப் வேடோடின், எமிசிசுமாப் போன்ற 33 விலையுயர்ந்த மருந்துகளுக்கும் தற்போது வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 12% ஜிஎஸ்டி வரி செலுத்தப்பட்டது.
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் முக்கியமான மருந்துகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் செலவுகள் கணிசமாகக் குறையும். இது நடுத்தர குடும்பங்களுக்கு நிதிச் சுமையைக் குறைக்கும்.
பெரும்பாலான மருந்துகள் ஏற்கனவே மானியத்துடன் இறக்குமதி செய்யப்படுவதால், அரசின் வருவாயில் பெரிய தாக்கம் இருக்காது என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜிஎஸ்டி வரி குறைப்பு
இந்த வரி மாற்றங்கள் இன்று நடைமுறைக்கு வரும். உற்பத்தியாளர்கள், சில்லறை வணிகர்கள் மற்றும் மருத்துவமனைகள் புதிய வரி விதிப்புக்கு ஏற்ப தங்கள் விலை நிர்ணயம் மற்றும் பில்லிங் முறைகளை மாற்றியமைக்க ஏற்கனவே அவகாசம் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம், பஞ்சு, காஸ், பேண்டேஜ்கள், நோயறிதல் கருவிகள், ரத்த குளுக்கோஸ் கண்காணிப்பு கருவி (குளுக்கோமீட்டர்) போன்ற பல்வேறு மருத்துவ உபகரணங்கள் மற்றும் சாதனங்கள் மீதான ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
பஞ்சு, காஸ், பேண்டேஜ்கள் மற்றும் அதுபோன்ற பொருட்கள் (உதாரணமாக, ஆடைகள், பிசின் பிளாஸ்டர்கள், பவுல்டிஸ்கள்), மருந்துப் பொருட்களுடன் செறிவூட்டப்பட்ட அல்லது மருத்துவ, அறுவை சிகிச்சை, பல் அல்லது கால்நடை நோக்கங்களுக்காக சில்லறை விற்பனைக்கு ஏற்ற வடிவங்களில் அல்லது பேக்கிங்கில் உள்ளவை 5 சதவீத வரிக்கு உட்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications