கூடுவாஞ்சேரி ஏசி மெக்கானிக்.. 150 சிசிடிவி.. தட்டித் தூக்கிய மறைமலைநகர் போலீஸ்!
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் ரயில் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து இருசக்கர வாகனங்களைத் திருடி வந்த நபரை, 150 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் கைது செய்தனர்.
மறைமலைநகர் ரயில் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் மாயமாகி வந்தன. இதனால் அப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்தனர். இது தொடர்பாக மறைமலைநகர் காவல் நிலையத்தில் அடுத்தடுத்து புகார்கள் குவிந்தன. பொதுமக்களின் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு, இந்தத் திருட்டுச் சம்பவங்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க மறைமலைநகர் காவல் துறை தீவிர நடவடிக்கையில் இறங்கியது.

புகார்களின் தீவிரத்தை உணர்ந்த மறைமலைநகர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில், காவலர்கள் பெருமாள், ராஜா மற்றும் ஜாம்ஷீட் ஆகியோர் அடங்கிய சிறப்புத் தனிப்படை உடனடியாக அமைக்கப்பட்டது.
சம்பவ இடங்களை நேரில் பார்வையிட்ட தனிப்படை போலீசார், குற்றவாளியைப் பிடிக்கத் திட்டமிட்டனர். இதற்காக அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த 150-க்கும் மேற்பட்ட CCTV கேமராக்களின் பதிவுகளை இரவு பகலாக அணுவணுவாக அலசி ஆராய்ந்தனர். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், துப்பறியும் பாணியில் அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் தனிப்படை போலீசார் நடத்திய இந்தத் தீவிர தேடுதல் வேட்டை விரைவிலேயே பலன் அளித்தது.
CCTV காட்சிகளில் சந்தேகத்திற்கிடமான நகர்வுகளைப் பின்தொடர்ந்த போலீசார், குற்றவாளி கூடுவாஞ்சேரி தமிழ்நாடு ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மறைந்திருப்பதை லாவகமாகக் கண்டுபிடித்தனர். அதிரடியாக அந்த வீட்டிற்குள் நுழைந்த தனிப்படை போலீசார், சந்தேக நபரை மடக்கிப் பிடித்துக் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் தீவிர விசாரணையில், கைதான நபர் கேசவன் (41) என்பதும், அவர் ஏசி மெக்கானிக்காகப் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம் காவல்துறையினரையே வியப்பில் ஆழ்த்தியது.
"இருசக்கர வாகனங்களை அப்படியே முழுமையாக விற்றால் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில், திருடிய பைக்குகளை உடனடியாகத் தனித்தனி பாகங்களாகக் கழற்றிப் பிரித்து விடுவேன். பின்னர் அந்தப் பாகங்களைச் சென்னை புதுப்பேட்டையில் கொண்டு போய் விற்றுப் பணம் சம்பாதிப்பேன்" என்று கேசவன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து, கேசவன் மீது வழக்குப் பதிவு செய்த மறைமலைநகர் போலீசார், அவரைச் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். மேலும், அவரிடமிருந்து 6 இருசக்கர வாகனங்கள் மற்றும் 1 செல்போன் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
மறைமலைநகர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த நபரை, 150-க்கும் மேற்பட்ட CCTV கேமராக்களைச் சளைக்காமல் ஆய்வு செய்து, மிகக் குறுகிய காலத்தில் கையும் களவுமாகத் தட்டித் தூக்கிய காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசாரின் இந்தச் சாமர்த்தியமான நடவடிக்கையைப் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்


Click it and Unblock the Notifications
