விமான நிலையம் போல் மாறும் கிண்டி ரயில் நிலையம்.. மே மாதம் முதல்.. தெற்கு ரயில்வே அப்டேட்
சென்னை: சென்னை பீச் முதல் செங்கல்பட்டு வழித்தடத்தில் மிக முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக உள்ள கிண்டி ரயில் நிலையம் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகிறது. 3 லிப்டுகள், ஒரே நேரத்தில் 64 ஆயிரம் பயணிகள் வந்து செல்லும் வகையில் வசதி என பல்வேறு மேம்பாட்டு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில், வரும் மே மாதத்திற்குள் இந்த பணிகள் முழுவதுமாக முடிந்துவிடும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள பல்வேறு ரயில் நிலையங்களை தற்போதைய காலத்திற்கு ஏற்றவாறு மேம்படுத்தும் பணிகளை துவங்கியது. அந்த வகையில் தமிழகத்திலும் பல்வேறு ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

கிண்டி ரயில் நிலையம்
குறிப்பாக தெற்கு ரயில்வேயில் மட்டும் சென்னை, திருச்சி, சேலம், மதுரை என மொத்தம் 6 கோட்டங்களில் உள்ள 90 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகிறது. சென்னையில், சென்னை எழும்பூர் ரயில் நிலையம், கிண்டி, சென்னை பூங்கா, மாம்பலம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு மற்றும் செயிண்ட் தாமஸ் ஆகிய ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னை எழும்பூர் ரயில் நிலையம் விமான நிலையத்திற்கு நிகரான வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
இதேபோன்று சென்னை பீச் முதல் கடற்கரை வழித்தடங்களில் மிக முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றான கிண்டி ரயில் நிலையமும், 13.50 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. தினமும் 68 ஆயிரம் பயணிகள் வந்து செல்லும் ரயில் நிலையமாக கிண்டி உள்ளது. 200 மின்சார ரயில்களும், 98 விரைவு ரயில்களும் இந்த ரயில் நிலையம் வழியாக இயக்கப்படுகின்றன. கிண்டியை பொறுத்தவரை மெட்ரோ ரயில் நிலையம், பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகியவை அருகிலேயே இருப்பதால் கிண்டி ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும்.
விமான நிலையத்துக்கு நிகரான வசதிகள்
எனவே பயணிகளின் மனதை கவரும் விதமாக கிண்டி ரயில் நிலையத்தின் நுழைவு வாயிற் பகுதியானது நவீன காலத்திற்கு ஏற்ப கிட்டத்தட்ட விமான நிலையத்திற்கு நிகரான தோற்றத்துடன் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் டிக்கெட் கவுண்டர், பார்க்கிங் வசதிகள், டிக்கெட் புக்கிங் அலுவலக கட்டிடம், மேற்கூரைகள் மாற்றும் பணிகள், 3 லிப்டுகள் அமைக்கும் பணி, ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து நடைமேடைகளும் மறு சீரமைப்பு என எல்லா பணிகளும் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.
நுழைவு வாயிற் பகுதியானது விமான நிலையம் போல பிரம்மாண்டாக அமைக்கப்பட்டு வருகிறது. அதாவது இருபுறமும் பயணிகள் வந்து செல்லும் அளவுக்கு மேம்படுத்தப்படுகிறது. பணிகள் முடிந்த பிறகு பயணிகள் நெரிசல் இன்றி வந்து செல்ல ஏதுவாக இருக்கும். ஒரு நாளைக்கு சுமார் 62 ஆயிரம் பயணிகள் வந்து செல்லும் அளவுக்கு இந்த பணிகள் நடந்து வருகிறது. பயணிகளின் பாதுகாப்பிற்காக அதிநவீன சிசிடிவி கேமராக்களும் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகளும் தீவிர படுத்தப்பட உள்ளன.
மே மாதத்திற்குள் பணிகள் நிறைவு
எப்போது முழு பணிகளும் முடியும் என பயணிகள் எதிர்பார்த்து வந்த நிலையில், வரும் மே மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முடிவடைந்து விடும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், "வாகன பார்க்கிங் இடங்கள் அமைக்கும் பணி, 3 லிப்டுகள் அமைக்கும் பணி, மேற்கூரைகள் பணி முடிந்துள்ளது. ஜி எஸ்டி சாலை பகுதியில் பயணச்சீட்டு முன்பதிவு மையம், நடைபாதை அமைக்கும்பணி நடந்து வருகிறது. மொத்தமாக 60 சதவிகிதம் பணிகள் நிறைவடைந்துள்ளது. மே மாதம் இறுதிக்குள் முழு பணிகளையும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications