திமுக அரசின் சின்ன புத்தி.. உள்துறை அமைச்சருக்கே இந்த நிலைமை.. சீறிய எச்.ராஜா!
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை விமான நிலைய வெளியேறும் பகுதிக்கு வந்தபோது திடீரென மின் தடை ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் எச்.ராஜா.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த 9 ஆண்டுகால மத்திய அரசின் சாதனையை விளக்கும் வகையில் மே 30ஆம் தேதி முதல் ஜூன் 30 வரை நாடு முழுவதும் பொதுக்கூட்டங்களை பாஜகநடத்தி வருகிறது.

தமிழ்நாட்டிலும் பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்த பாஜக நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்கும் பொதுக் கூட்டம் இன்று நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக நேற்று இரவு அமித் ஷா சென்னை வந்தடைந்தார்.
சென்னை விமான நிலையம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகள் எச்.ராஜா, கரு.நாகராஜன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் பகுதிக்கு அமித் ஷா கார் வந்ததும், அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது. அமித் ஷா, விமான நிலையத்திற்கு வெளியே சாலையில் நடந்து சென்று, தொண்டர்களின் வரவேற்பை ஏற்ற சமயத்தில் திடீரென சாலையில் இருந்த எல்லா மின் விளக்குகளும் அணைந்தன.
இந்த மின்தடை சில நிமிடங்களுக்கு மேல் நீடித்ததால் அங்கு கூடியிருந்த பாஜக தொண்டர்கள் கோபமடைந்தனர். தமிழ்நாடு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய, அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பு நீடித்தது.
அமித் ஷாவின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் மின்தடை நிகழ்த்தப்பட்டதாக பாஜக தொண்டர்கள் குற்றம்சாட்டினர். அதேசமயம், மின்தடைக்கு விளக்கம் அளித்துள்ள மின்வாரியம், போரூர், பரங்கிமலை மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்தடை ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகையின்போது மின் தடை ஏற்பட்டது குறித்து, பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, "மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இசட் பிளஸ் பாதுகாப்பில் இருப்பவர். அமித்ஷா வருகைக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும்.
உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாததற்கு தமிழ்நாடு அரசே காரணம். அமித்ஷா வந்த போது, மின் வெட்டு நேரிட்டது தமிழ்நாடு அரசின் சின்ன புத்தியை காட்டுகிறது." என காட்டமாக விமர்சித்துள்ளார் எச்.ராஜா.












Click it and Unblock the Notifications