அனல் பறக்கும் கனல் கண்ணன் மேட்டர்.. ஆதரவாக குதித்த எச்.ராஜா - பெரியார் சிலை வாசங்களை நீக்கனுமாம்
சென்னை: கடவுளை கற்பித்தவன் காட்டுமிராண்டி என்ற வாசகங்களை நீக்க வேண்டும் என்றும் கனல் கண்ணனின் கருத்துரிமை போற்றப்பட வேண்டும் எனவும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்து உள்ளார்.
Recommended Video
தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சாரப் பயணம் என்ற பெயரில் இந்து முன்னணி அமைப்பு சுற்றுப்பயணம் மற்றும் பிரச்சார பொதுக் கூட்டங்களை நடத்தி வருகிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு இடங்களில் இந்த பிரச்சாரம் நடைபெற்று வந்தது.
சென்னை மதுரவாயலில் நேற்று இதற்கான நிறைவு விழா நடைபெற்றது. இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டரும் இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய மாநில செயலாளர் கனல் கண்ணன் கலந்து கொண்டார்.

பெரியார் சிலை
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகரும், சினிமா சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் பேசுகையில், "நாளொன்றுக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அவர்கள் தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும்போது கோவிலின் முன்பாக கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை இருக்கிறது. அந்த சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள் என கூறியிருந்தார்.

கடும் எதிர்ப்பு
பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்ற கனல் கண்ணனின் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்தன. இரு தரப்பினருக்கிடையே கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசியுள்ள கனல் கண்ணனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனவும் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

போலீசில் புகார்
இந்த நிலையில் கனல் கண்ணனை கைது செய்ய வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழத்தை சேர்ந்தவர்கள் புகாரளித்து உள்ளனர். அதன் பின்னர் பேட்டியளித்த அந்த அமைப்பின் மாவட்ட செயலாளர் குமரன், "2006-ம் ஆண்டு ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலையை சில சமூக விரோதிகள் சேதப்படுத்தியதால்தான் கலவரம் உண்டானது. திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் கலவரத்தை ஏற்படுத்த சிலர் முனைகின்றனர். கனல் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

எச்.ராஜா ஆதரவு
இதுகுறித்து பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது, "கடவுளை கற்பித்தவன் காட்டுமிராண்டி, நம்புபவன் முட்டாள். பரப்புபவன் அயோக்கியன் என்பது இறை நம்பிக்கை உள்ளவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் திட்டமிட்ட செயல். எனவே தமிழக அரசு இந்த வாசகங்கள் எங்கிறுப்பினும் அதை உடனடியாக நீக்க வேண்டும். திரு.கனல் கண்ணனின் கருத்துரிமை போற்றப்பட வேண்டும்." என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications