காலியெல்லாம் நிரம்புதே.. டிஎன்பிஎஸ்சி மூலம் அசரடித்த தமிழக அரசு.. முக்கிய துறைக்கு வந்த பிக் மெசேஜ்
சென்னை: தமிழக பத்திரப்பதிவு துறையில் உள்ள காலிப்பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி (TNPSC) தேர்வாணையம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தனம், ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை வளாகக் கூட்டரங்கில் பதிவுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட பணி சீராய்வுக் கூட்டம் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
வருவாய்த்துறை: இந்த கூட்டத்துக்குப்பிறகு, அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் சொன்னதாவது: "பதிவு துறையின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் முதல்வர் வழங்கிய அறிவுரைகள் அடிப்படையில், தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் கட்டிடங்களுக்கு உரிய விலையை நிர்ணயிக்க வேண்டும். நிலுவையில் உள்ள பத்திரங்களை உடனுக்குடன் முடித்து வருவாய் ஈட்ட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பத்திரங்கள் பதியப்படும்போது பொதுமக்கள் அதிக நேரம் காத்திருக்காத வண்ணம் உடனுக்குடன் பத்திரங்களை பதிவு செய்யும் வகையில் 3.0 மென்பொருளை பயன்படுத்தி குறைபாடுகளை களைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

காலிப்பணியிடம்: நேர்மையான முறையில் பதிவு நடைபெறும் வகையிலும் இடைத்தரகர்கள் பதிவு நடைபெறும் இடத்தில் இருக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பத்திரப்பதிவுத் துறையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்போது காலியாக உள்ள 85 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பாஜக சட்டப்பேரவை கட்சித்தலைவர் நயினார் நாகேந்திரன், அவருடைய மகன் நயினார் பாலாஜி மற்றும் பத்திரப்பதிவு, வருவாய் துறை அலுவலர் சேர்ந்து சென்னை ஆற்காடு சாலையில் உள்ள ரூ.100 கோடி மதிப்பிலான சொத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்ததாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 15 நாட்களில் புகார் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
செயற்பொறியாளர்கள்: இதனிடையே, பத்திரப்பதிவு குறித்து ஒரு முக்கிய தகவல் வெளியாகியிருந்தது.. தமிழகம் முழுதும் ஆய்வுக்கு ஒரே பொறியாளர் உள்ளதால், பல ஆயிரம் ஆவணங்கள் பதிவு செய்தும் உரியவர்களுக்கு வழங்கப்படாமல் தேங்கி உள்ளதாம்.. அதாவது, பத்திரப்பதிவு துறையில், 50 லட்சம் ரூபாய் மதிப்பிற்கும் மேலான கட்டடங்களை பதிவு செய்வதை மதிப்பீடு செய்ய உதவி செயற்பொறியாளர்கள் போதுமான அளவுக்கு இல்லையாம்..
பொதுப்பணித் துறையின் உதவி செயற்பொறியாளர் அந்தஸ்திலான, அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிதான், மதிப்பீட்டுச் சான்றிதழ்களை தர முடியும்.. அதன் அடிப்படையில் தான், பதிவு செய்த பத்திரம் உரிமையாளருக்கு வழங்கப்படும்.. ஆனால், இதற்காக, உதவி செயற்பொறியாளர்கள் பற்றாக்குறையால், சொத்து ஆவணங்கள் தேங்கியுள்ளதாக சொல்கிறார்கள்..
விரைவில் பூர்த்தி: இதையடுத்து, ''உதவி செயற்பொறியாளர் பணியிடம் காலியானது குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.. எனவே, விரைவில் அந்த இடங்கள் பூர்த்தியாகி, பணிகள் அனைத்தும் வேகம் எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படும் நிலையில், பத்திர பதிவு துறை காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்ஸி தேர்வின் மூலம் நிரப்பப்படும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்..
மற்ற துறைகளை தொடர்ந்து பத்திரப்பதிவு துறை காலிப்பணியிடங்களையும் தேர்வின் மூலம் நிரப்ப வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்ததையடுத்து, அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதும், கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications