"தித்திப்பு" தகவல்.. "ஸ்கைவாக்" நடைமேம்பாலம் திறக்கப்படுகிறது.. நிம்மதியில் சென்னை.. எங்கே தெரியுமா?
: தி.நகரில் இரும்பு நடை மேம்பாலம் அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது
சென்னை: தி.நகரில் விரைவில் பொதுமக்களின் வசதிக்காக, நடைமேம்பாலம் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தி.நகர் ரெயில் நிலையம் - பஸ் நிலையம் இணைக்கும் வகையில் பயணிகள் நடை மேம்பால பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
சென்னையில் மிகப்பெரிய வர்த்தக மையம் தி.நகர்.. இங்கு ஜவுளி, நகை, வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்காக ஏராளமான மக்கள் தினமும் வருவது வாடிக்கை.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெரிய ஷாப்பிங் மால்கள் பல வந்தாலும், தி.நகரின் மவுசு இன்னமும் சென்னைவாசிகளிடம் குறையவில்லை.. அந்தவகையில், மாம்பலம் ரெயில் நிலையம் வழியாக தினமும் பல லட்சம் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

மாம்பலம் - மேம்பாலம்
இதனால், ரெங்கநாதன் தெரு, மேட்லி சாலை, உஸ்மான் ரோடு மார்க்கெட் தெரு என எல்லா இடங்களிலும் கூட்ட நெரிசல் தினமும் ஏற்படும்.. இதைதவிர, புறநகர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தி.நகருக்கு ஏராளமானோர் வருகின்றனர்... இந்நிலையில், கடந்த 3 வருடங்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சியானது, தி.நகரில் "ஸ்மார்ட் சிட்டி" திட்டத்தின் கீழ் புதிய திட்டம் ஒன்றை ஆரம்பித்தது.. அதன்படி, மாம்பலம் ரெயில் நிலையம் தியாகராய நகர் பேருந்து நிலையம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் நடை மேம்பாலம் கட்ட முடிவானது.

ஆகாய நடைமேம்பாலம்
இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும், பொதுமக்கள் எளிதாக நடந்து செல்லும் வகையிலும் ஆகாய நடை மேம்பாலம் அமைக்கும் பணி ஆரம்பமானது.. இதைதவிர, நகரும் படிக்கட்டு வசதிகளுடன் கூடிய ஸ்கைவாக் எனப்படும் ஆகாயநடை மேம்பாலம் அமைக்கும் பணிகளும் துவங்கப்பட்டன.. அதாவது, தி.நகர் ரெயில்நிலையம் - பஸ் நிலையத்தை இந்த நடைபாலம் இணைக்கும் வகையில் உள்ளதாம்.. அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு பிரமாண்ட பயணிகள் நடைமேம்பாலம் ரூ. 30 கோடி செலவில் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன...

இரும்பு கூண்டு
30 அடி உயரத்தில், 14 அடி அகலத்தில் இரும்பு நடை மேம்பாலம் துரிதமாக நடந்தது.. ஆனால், நடுவில் கொரோனாவால் லாக்டவுடன் போடப்படவும், இந்த பணிகள் சிறிது தடைபட்டன.. அதற்கு பிறகு மறுபடியும் முழுவீச்சில் பணிகள் தொடங்கப்பட்டன. இப்போது, இரும்பு நடை மேம்பாலம் அமைக்கப்பட்டு முடித்துள்ளதுடன், மேற்கூரைக்கான இரும்பு கூண்டு அமைப்பு பணிகளும் இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டன..

பூரிப்பு - நிம்மதி
ரெயில் நிலையத்தில் பாலம் இணைப்பு பணியும், பஸ் நிலையத்தில் பயணிகள் இறங்கி செல்லும் படிக்கட்டுகள் பணியும் மட்டும் நிறைவடையாமல் இன்னும் உள்ளன.. எப்படியும் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு, இந்த நடைமேம்பாலம் திறக்கப் போவதாக கூறப்படுகிறது.. இந்த நடை மேம்பாலம் திறக்கப்படும் போது தி.நகரில் ஏற்பட்டு வரும் பெரும் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்பதுடன் சென்னைவாசிகளுக்கும் தி.நகர் வந்து செல்வதற்கு, வசதியையும், நிம்மதியையும் ஏற்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications