மாத சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. விவசாயிகளுக்கும் மகிழ்ச்சி.. கூட்டுறவு துறை சபாஷ்
சென்னை: கூட்டுறவு வங்கிகள் மிக முக்கிய உத்தரவு ஒன்றினை வங்கி அதிகாரிகளுக்கு வழங்கியிருக்கிறது.. இது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், மாநில தலைமை கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், பயிர் கடன், நகை கடன் என பல பிரிவுகளில் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன..
இதில், விவசாயிகளின் பயிர்க்கடன் மிகுந்த முக்கியத்துவம் பெற்ற ஒன்றாகும்.. லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு இந்த கடனுதவிகள் உறுதுணையாக இருந்து வருகின்றன.

விவசாயிகள்: கடந்த வாரம்கூட, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன், அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியிருந்தார்...
அதில் தமிழகத்தில் நடப்பாண்டு கூட்டுறவு அமைப்புகள் மூலம், ரூ.16,500 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், பயிர்க்கடனில் 30 சதவீதம் புதிய உறுப்பினர்களுக்கும், 20 சதவீதம் பட்டியலின வகுப்பு விவசாயிகளுக்கும் வழங்குவதை உறுதி செய்யவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
அதுமட்டுமல்லாமல், பட்டியலின வகுப்பு, பழங்குடியினரின் நில உடமையின் அடிப்படையில், 20 சதவீதம் குறியீட்டினை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு நிர்ணயம் செய்யவேண்டும். நிர்ணயிக்கப்பட்ட குறியீட்டிற்கு மேலாகவும் தேவைப்படும் நிலையில், தகுதியான விவசாயிகளுக்கு வங்கிகள் ஒழுங்குமுறை விதிகளை பின்பற்றி பயிர்க்கடன் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.
நகைக்கடன்: இந்நிலையில், இன்னொரு குட்நியூஸ் வெளியாகியிருக்கிறது.. நடப்பு நிதியாண்டில் அனைத்து பிரிவுகளிலும் சேர்த்து, 1.03 லட்சம் கோடி ரூபாய்க்கு கடன் வழங்குமாறு, வங்கிகளின் மேலாண் இயக்குனர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டிருக்கிறது. இதில் அதிகபட்சமாக 57,562 கோடி ரூபாய்க்கு நகை கடனும், 16,000 கோடி ரூபாய்க்கு பயிர் கடனும், சுய உதவி குழுக்களுக்கு, 5,505 கோடி ரூபாய் கடனும் வழங்கப்பட உள்ளதாம்.
இதில், முதன்முறையாக, கார், மோட்டார் பைக் போன்ற வாகனங்கள் வாங்கவும், அடுக்குமாடி குடியிருப்பு வாங்கவும் கடன்கள் வழங்குமாறும் உத்தரவிட்டிருக்கிறதாம்.. இது தவிர, ஓய்வூதியதாரர்களுக்கும் வீடு உட்பட அடமானத்தின் பேரில் கடன் வழங்கப்பட உள்ளது.
அரசு ஊழியர்கள்: ஆகமொத்தம், வாகன கடன், ஓய்வூதியதாரர் கடன், அடுக்குமாடி குடியிருப்பு கடன் தலா, 23 கோடி ரூபாய் வழங்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.. முதல் கட்டமாக, அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு வாகன கடன் வழங்கப்பட உள்ளது... இதையடுத்து, மாத ஊதியம் பெறுவோருக்கு வாகன கடனிலும் விரிவாக்கம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. கூட்டுறவு துறையின் இந்த அறிவிப்பானது, மிகுந்த மகிழ்ச்சியையும் தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications