"நம்பர் 3".. திமுக ஓட்டு சிதறுதா? பாஜக ரூட்டை பிடித்த சீமான்.. கவனிக்கும் அதிமுக.. "தம்பிகள்" படுபிஸி
சென்னை: ஆளும் திமுக அரசுக்கு எதிராக, போராட்டங்களை எதிர்க்கட்சிகள் அறிவித்தும், அவைகளை நடத்திக்காட்டியும் வருகின்றன.. இந்த வரிசையில் சீமானும் இணைந்துள்ளார்.. என்ன காரணம்?
கடந்த 2 வருட காலமாகவே அதிமுகவில் சூழல் சரியில்லை.. உட்கட்சிபூசல் தலைதூக்கவும் இது தொடர்பான செயல்பாடுகளிலேயே கவனத்தை அக்கட்சி செலுத்த வேண்டியதாக இருந்தது..

உட்கட்சி பூசல்: ஓபிஎஸ் விவகாரம், வழக்கு விசாரணைகளில் மூழ்க வேண்டியதாயிற்று.. இடைத்தேர்தலிலும் பெருத்த நன்மையை பெற முடியவில்லை.. தங்கள் விவகாரத்திலேயே பெரும்பாலான கவனத்தை அதிமுக தரப்பு செலுத்திக் கொண்டிருக்க, சைலண்ட்டாக மேலே எழுந்து வந்தது தமிழக பாஜக.. அதிமுகவின் பலவீனங்கள் அத்தனையும் பாஜகவுக்கு பலமாகி கொண்டே போனது.
தாங்கள்தான் உண்மையான எதிர்க்கட்சி என்ற வாதத்தையும், வலுவாக முன்வைத்தது. ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களையும் முன்னெடுத்தது.. அந்தவகையில், பாஜகவின் எழுச்சி கடந்த ஒரு வருடத்தில் அபரிமிதமாகவே வளர்ந்தது என்பதை மறுக்க முடியாது.. இது அதிமுகவுக்கே கொஞ்சம் ஷாக்தான்.. இப்போது கூட்டணி உறுதி செய்யப்பட்டாலும்கூட, தாங்கள்தான் தமிழகத்தின் எதிர்க்கட்சி என்பதை அதிமுக அழுத்தமாக நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது..
எம்பி தேர்தல்: விரைவில் எம்பி தேர்தலும் வரப்போகிறது. இப்போதைக்கு ஒட்டுமொத்த அதிமுகவும் கையில் கிடைத்துள்ள நிலையில், முழு அதிகாரமும் எடப்பாடி வசம் சென்றுள்ளது.. எனவே, அதிமுகவின் செல்வாக்கையும், எதிர்க்கட்சி அந்தஸ்தையும் திமுகவுக்கு மட்டுமல்லாமல், பாஜகவுக்கும் சேர்த்தே நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அதிமுக உள்ளது.. அதனால்தான், திமுகவை சரமாரியாக விமர்சித்து கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி..
மற்றொருபுறம் ஆளுநரிடம் புகார் மனு அளிக்கும் போராட்டத்தை அறிவிக்க, பின்னாடியே திமுகவுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தது தமிழக பாஜக.

நாம் தமிழர் கட்சி: ஆக, திமுக அரசை எதிர்ப்பதிலேயே முழு கவனத்தை தமிழக கட்சிகள் செலுத்தி வருகின்றன.. இந்த வியூகத்தைதான் சீமானும் கையில் எடுக்கிறார்.. சீமான் இதுவரை தேர்தல்களில் பெற்றுவரும் வாக்குகள், பாஜகவின் எதிர்ப்பு ஓட்டுக்கள் மற்றும் திமுகவின் அதிருப்தி ஓட்டுக்கள் ஆகும்.. தற்போது திமுக அரசை அதிமுக, பாஜக எதிர்த்து வரும்நிலையில், சீமானும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.. அந்தவகையில், நாம் தமிழர் கட்சியும், பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் போராட்டத்தை இப்போது அறிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் புதிய விமான நிலையம் அமைக்க தமிழக அரசு இடம் தேர்வு செய்தது. சென்னையில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தமிழக அரசு இந்த முடிவை எடுத்தது... விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.. ஆனால் விவசாய நிலங்களை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் அந்த பகுதி கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம் 300வது நாளை எட்டியுள்ள நிலையில், தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தந்துள்ளார்.
வலிமிகுந்த சொற்கள்: இதுதொடர்பாக சீமான் ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அதில், "புதிய வானூர்தி நிலையத்திற்கு எதிராக காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரம் மற்றும் பரந்தூர் உள்ளிட்ட 13 கிராம மக்கள் 300-வது நாளாகத் தொடர் போராட்டம் மேற்கொண்டுள்ளது. உழைக்கும் மக்களை, வளர்ச்சி எனும் பெயரில் ஒடுக்கி, பன்னாட்டுப் பெரு முதலாளிகளுக்காக மட்டுமே ஆளும் அரசுகள் பணிபுரிகின்றன.. அரசுகள் மக்களின் வலிமிகுந்த சொற்களை ஒருபொழுதும் மதிப்பதில்லை.
இது ஏகனாபுரத்தின் சிக்கல் மட்டுமல்ல என்றும் இத்திட்டம் நிறைவேறினால் குடிநீர் தட்டுப்பாடும், வெள்ளநீர் அபாயமும், சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களையும் பாதிக்கும், பெரும் சூழலியல் அழிவும் நிகழும்.. ஆகையால், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தினை ஆளும் திமுக, பாஜக அரசுகள் முழுவதுமாகக் கைவிடும் வரை நாம் தமிழர் கட்சி மக்கள் போராட்டத்திற்கு தொடர்ந்து வலு சேர்க்கும்..
அதிரடி சீமான்: இதன் துவக்கமாக வரும் ஜூன் 10ம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்ட வடிவில் காந்தி சாலை, காஞ்சியில் களம் காண இருக்கிறது.. சூழலியல் அக்கறை மற்றும் மக்கள் நலம் கருத்தில் கொண்ட உறவுகள் இந்த போராட்டத்திற்கு வலு சேர்க்கலாம்" என்று சீமான் அழைப்பு விடுத்துள்ளார்.. ஒருபக்கம் அதிமுக, மறுபக்கம் பாஜக, இதற்கு நடுவில் சீமான் என போராட்டங்களை நடத்தியவாறே, திமுகவுக்கு நெருக்கடியை தர துவங்கி உள்ளனர்..!!












Click it and Unblock the Notifications