அடிக்குது குளிரு... 2 நாட்களுக்கு பனி மூட்டம் - மழைக்கு வாய்ப்பில்லை வறண்ட வானிலைதான்
இன்றும் நாளையும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பனிமூட்டம் காணப்படும் என்று வானிலை ஆய்வுமையம் கணித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் எனவும் இரண்டு நாட்களுக்கு உள் மாவட்டங்களில் பனி மூட்டம் காணப்படும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கி நவம்பர் மாதம் முழுவதும் கொட்டித்தீர்த்தது. நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. அணைகள் நிரம்பி ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது.

கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவுகிறது. இன்று முதல் 29ஆம் தேதி வரைக்கும் தமிழகத்தில் வானிலை நிலவரம் பற்றி சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
வட இந்தியாவில் குளிர் வாட்டி வதைக்கிறது. உத்தரப்பிரதேசம், டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விடியற்காலை நேரத்தில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. பனிமூட்டம் காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குளிரில் இருந்து தப்பிக்க மக்கள், வீடுகளிலும், பொது இடங்களிலும் நெருப்பு மூட்டி குளிர்காய தொடங்கியுள்ளனர்.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பெரிய புல்வெளி மைதானம், பெரணி இல்லம் அருகே புல்வெளியில் பனி படர்ந்து காணப்படுகிறது. 2 நாட்களாக குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் பதிவானது. இந்த நிலையில் நேற்று காலை உறைபனி தாக்கம் மேலும் அதிகரித்தது. இதனால் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகி இருந்தது. அதிக பட்ச வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸ் நிலவியது. தொடர் உறைபனியால் பூங்காவில் புல்வெளிகள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உதகையில் பகலில் வெயில் அடித்தாலும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே வெயிலின் தாக்கம் இருக்கிறது. மற்ற நேரங்களில் வெயில் அடித்தாலும் குளிர்தான் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் சூடான தண்ணீர், உணவுகளை எடுத்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டு உள்ளது.
ஊட்டி ஏரியில் அதிகாலையில் உறைபனி தாக்கம் காரணமாக காலநிலை மாற்றத்தால் தண்ணீர் ஆவியாகிறது. அவலாஞ்சி வனப்பகுதியில் நேற்று குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 3 டிகிரி செல்சியஸ் பதிவானது. வருகிற நாட்களில் உறைபனி தாக்கம் மேலும் அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பனிமூட்டம் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 25.12.2021 முதல் 27.12.2021 வரை: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
28.12.2021, 29.12.2021: கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான/மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாகவும், புறநகர் பகுதிகளில் லேசான பனிமூட்டமும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது.மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications