தேர்தல் தகராறு.. கொலை மிரட்டல் வழக்கு.. மாஜி அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு ஹைகோர்ட் முன் ஜாமீன்
சென்னை: உள்ளாட்சி தேர்தல் தகராறு உள்ளிட்ட இரு வழக்குகளில் தமிழக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு வாரத்தில் கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமீனை பெற்றுக்கொள்ள நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த கரூரை சேர்ந்த எம் ஆர் விஜயபாஸ்கர், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடந்த போது ஏற்பட்ட தேர்தல் தகராறில் கொலை மிரட்டல் விடுப்பு முறையில் பேசியது பொது சொத்துக்களை சேதப்படுத்தியது போன்ற பிரிவுகளில் கரூர் மாவட்டம் தாந்தோணி மலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதியின்றி கூடி பொதுமக்கள், அரசு ஊழியர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உட்பட 10 பேர் மீது தாந்தோணி மலை போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர். ஏற்கனவே 6 முறை ஒத்திவைக்கப்பட்ட கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி கரூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் போட்டியிட இருந்த வேட்பாளர் திருவிக என்பவர், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் திண்டுக்கல்லில் இருந்து கரூர் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது, 4 காரில் வந்த மர்ம கும்பல் விஜயபாஸ்கர் காரை வழிமறித்து கண்ணாடியை உடைத்து திருவிக கடத்தப்பட்டார். கடத்தப்பட்ட சில மணிநேரங்களில் கல்வார்பட்டி காவல்நிலைய சோதனைச்சாவடி அருகே அதிமுகவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதனையடுத்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுங்கட்சியான திமுகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சட்டவிரோதமாக அனுமதியின்றி கூட்டம் கூடியது, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட விஜயபாஸ்கர், பொதுமக்களுக்கு இடையூறாகவும் செயல்பட்டதாக கூறி கரூர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது
இந்த இரு வழக்குகளிலும் முன் ஜாமீன் கோரி எம் ஆர் விஜயபாஸ்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், இரண்டு வழக்குகளிலும் விஜயபாஸ்கருக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
ஒரு வாரத்தில் கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமீனை பெற்றுக்கொள்ள உத்தரவிட்ட நீதிபதி, அவ்வாறு ஆஜரானது குறித்து ஜூலை 20ஆம் தேதி தெரிவிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications