பாஜக ஆர்.கே.சுரேஷ் கஷ்டத்துல இருக்காராம்.. ஆருத்ரா வழக்கில் வாதம்! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நடிகர் ஆர்.கே.சுரேஷின் வங்கி கணக்கின் முடக்கத்தை எதிர்த்து, தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தை நாட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 2.91 லட்சத்திற்கும் அதிகமான முதலீட்டாளர்களிடம் இருந்து ஆருத்ரா கோல்டு, ஹிஜாவு உள்ளிட்ட 8 நிதி நிறுவனங்களின் பணத்தை வசூலித்து ரூ.14,168 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிறுவனங்கள் பாஜக நிர்வாகிகளால் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஹரீஷ், சந்திர கண்ணன், மாலதி, மைக்கேல்ராஜ், செந்தாமரை, ரூசோ உள்ளிட்டோர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இதில் கைதான காஞ்சிபுரத்தை சேர்ந்த ரூசோ அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தமிழ்நாடு பாஜக ஓபிசி பிரிவு துணைத் தலைவர் நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. பாஜகவில் தனக்கு செல்வாக்கு இருப்பதால் இந்த வழக்கில் சிக்கிய குற்றவாளிகளை காப்பாற்றுவதாக கூறி ரூ.12.50 கோடியை அவர் பெற்றதாக ரூசோ வாக்குமூலம் அளித்து இருந்தார்.
ரூசோவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆர்.கே.சுரேஷுக்கும் பாஜகவின் நிர்வாகி ஹரீஷுக்கும் தொடர்பிருப்பதும் தெரியவந்தது. அதேபோல் ஆருத்ராவை தொடர்ந்து எல்பின் நிறுவனருக்கும் ஆர்.கே. சுரேஷ் உதவி செய்தது உறுதியானது. ஆனால், ஆர்.கே.சுரேஷோ கடந்த 10 மாதங்களாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வருகிறார். அவர் துபாயில் தற்போது இருப்பதாக கூறப்படுகிறது.
பலமுறை சம்மன் அனுப்பியும் ஆர்.கே.சுரேஷ் இதுவரை விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல் விளக்கம் அளிக்காமல் இருந்து வருகிறார். அவரை பிடிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இது தொடர்பாக துபாய் அரசுக்கு கடிதமும் எழுதப்பட்டு உள்ளது. மேலும் சென்னையில் இருக்கும் ஆர்.கே.சுரேஷின் சொத்துக்களை முடக்கவும் போலீஸ் திட்டமிட்டு உள்ளது.
இந்நிலையில், ஆர்.கே.சுரேசுக்கு சொந்தமான வங்கி கணக்கு முடக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஆர்.கே.சுரேஷ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.கே.சுரேஷ் சார்பில் வழக்கறிஞர் எஸ்.வீரராகவன் ஆஜரானார்.
அவர், "ஆரூத்ரா மோசடி விவகாரத்திற்கும் மனுதாரருக்கும் எந்த தொடர்புமில்லை. வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதால் மனுதாரர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்." என அவர் வாதிட்டார். காவல்துறை சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாமோதரன் ஆஜராகி வாதிட்டார்.
அவர், ஆர்.கே.சுரேஷின் வங்கி கணக்கு முடக்கம் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாக குறிப்பிட்டார். இதனை அடுத்து, வங்கி கணக்கு முடக்கம் தொடர்பாக தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தை நாட ஆர்.கே.சுரேஷுக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.












Click it and Unblock the Notifications