பீகார் தொழிலாளர்கள் குறித்து வதந்தி.. பிரபல பத்திரிக்கைக்கு சிக்கல்.. சென்னை ஹைகோர்ட் அதிரடி கேள்வி
சென்னை: தமிழகத்தில் பீகார் தொழிலாளர்கள் கொலை செய்யப்படுவதாக போலி வீடியோவை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாக தைனிக் பாஸ்கர் என்ற இந்தி பத்திரிகைக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
தைனிக் பாஸ்கர் என்ற இந்தி பத்திரிகையின் டிவிட்டர் பக்கத்தில் கடந்த மார்ச் 2ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோவில், தமிழகத்தில் பீகார் தொழிலாளர்கள் கொலை செய்யப்படுவதாக பதிவிடப்பட்டு இருந்தது. இந்த வீடியோ போலியானது என கூறி திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும், வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தைனிக் பாஸ்கர் பத்திரிகை தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, பத்திரிகை நிருபர் ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் வந்த வீடியோவை டிவிட்டரில் வெளியிட்டதாகவும், அந்த வீடியோ போலியானது என தமிழக டிஜிபி அறிவித்த அன்றே, வீடியோவை நீக்கிவிட்டதால், வழக்கை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் சந்தோஷ் ஆஜராகி இந்தி பேசும் பிகார் தொழிலாளர்களை தமிழக தாலிபான்கள் தண்டிக்கிறார்கள் என அந்த வீடியோவில் ஆட்சேபத்துக்குரிய வாசகங்கள் இருந்தாலும் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து, ஒரு பொறுப்பான ஊடக நிறுவனம், சரிபார்க்கப்படாத வீடியோவை எப்படி வெளியிடலாம் என்றும், அதனால் ஏற்படக்கூடிய சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு அந்த நிறுவனம் எப்படி பதிலளிக்கப்போகிறது என கேள்வி எழுப்பிய நீதிபதி, சமீபகாலமாக சமூக வலைதளங்களில் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என மக்கள் நினைத்து கொண்டிருப்பதாக அதிருப்தி தெரிவித்தார்.
மேலும், காவல்துறை தரப்பு விளக்கத்தை கேட்ட பிறகு இடைக்காலத் தடை விதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்த நீதிபதி, வழக்கு குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை கோடை விடுமுறைக்கு பின் தள்ளிவைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications