Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை திருவான்மியூர் - உத்தண்டி உயர்மட்ட சாலை விவகாரத்தில் புதிய பிரச்சனை.. அதிரடியாக தடை விதிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை 14.20 கி.மீ தொலைவுக்கு நான்கு வழி உயர்மட்டச் சாலை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை ஐதராபாத்தை சேர்ந்த கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு வழங்க தமிழக அரசு முடிவு செய்திருந்தது. அந்த ஒப்பந்தத்தை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த ஒப்பந்தம் வழங்குவதில் ரூ.700 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக பாமக, அறப்போர் இயக்கம் போன்றவை குற்றம்சாட்டியுள்ளன.

சென்னையில் திருவான்மியூருக்கும், உத்தண்டிக்கும் இடையே ரூ.2100 கோடியில் உயர்மட்டச் சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் கடந்த டிசம்பர் 24ம் தேதி ஹைதராபாத்தைச் சேர்ந்த கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. ஆனால் உயர்மட்டச் சாலை அமைக்கும் பணியை கே.என்.ஆர் நிறுவனம் குறிப்பிட்டிருந்த தொகையை விட ரூ.700 கோடி குறைவான செலவில் முடித்துத் தருவதாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த திலிப் பில்ட்காப் என்ற நிறுவனம் ஒப்பந்தப்புள்ளி அளித்திருந்ததாம். ஆனால் அந்த நிறுவனம் நிராகரிக்கப்பட்டதுடன் கே.என்.ஆர் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை அரசு வழங்கியுள்ளதாக புகார் எழுந்தது.

HC stays Thiruvanmiyur-ECR elevated road tender over KNR s bid and blacklisting


திலிப் பில்ட்காப் நிறுவனம் வழக்கு

இதை எதிர்த்து திலிப் பில்ட்காப் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அதில் கேன்ஆர் நிறுவனத்தை விடத் தங்களது நிறுவனம் சுமார் ₹600 கோடி முதல் ₹700 கோடி வரை குறைவான விலையை குறிப்பிட்டிருந்தும், தங்களது டெண்டர் நிராகரிக்கப்பட்டதாகக் கூறியுள்ளது. மேலும் தங்களது தொழில்நுட்பத் தகுதியை எந்த அடிப்படையில் நிராகரித்தார்கள் என்ற காரணத்தை அதிகாரிகள் முறையாக அறிவிக்கவில்லை என்றும் மனுவில் திலிப் பில்ட்காப் நிறுவனம் கூறியுள்ளது.


கருப்பு பட்டியலில் உள்ள நிறுவனம்

அத்துடன், NH-66 சாலையில் ஏற்பட்ட ஒரு சாலை சரிவு விபத்தின் காரணமாக, மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் 2025 மே மாதம் கேஎன்ஆர் நிறுவனத்தைக் கருப்புப் பட்டியலில் சேர்த்திருந்தது. கருப்புப் பட்டியலில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு டெண்டர் வழங்குவது விதிகளுக்கு எதிரானது என்று திலிப் பில்ட்கான் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்தது.


தடை விதித்து உயர்நீதிமன்றம்

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, திருவான்மியூர் & உத்தண்டி உயர்மட்டச் சாலை அமைப்பதற்கான பணி ஆணை வழங்கத் தடை விதித்துள்ளது. KNR நிறுவனத்தின் டெண்டரை ஏற்றுக்கொண்டது மற்றும் திலிப் பில்ட்கான் நிறுவனத்தின் டெண்டரை நிராகரித்தது ஆகிய இரண்டையும் நீதிமன்றம் ஆய்வு செய்ய முன்வந்திருக்கிறது. இதையடுத்தே வழக்கு விசாரணை முடியும் வரை இந்தத் திட்டப் பணிகளைத் தொடங்க இடைக்காலத் தடை விதித்துள்ளது நீதிமன்றம்.

வாகன ஓட்டிகள் கவலை

சென்னையில் திருவான்மியூருக்கும், உத்தண்டிக்கும் இடையே நான்கு வழிச்சாலை அமைப்பது என்பது 2012ம் ஆண்டில் ஆரம்பித்த திட்டம் ஆகும். இன்று வரை முடியாத காரணத்தால் நெரிசல் ஈசிஆர் சாலையில் அதிகமாக உள்ளது.இப்போது ஏற்பட்ட டெண்டர் பிரச்சனை காரணமாக தற்காலிமாக தடை ஏற்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகளை கவலையில் ஆழ்த்தி உள்ளது.

அன்புமணி குற்றச்சாட்டு

இது ஒருபுறம் எனில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட பதிவில், "சென்னையில் திருவான்மியூருக்கும், உத்தண்டிக்கும் இடையே ரூ.2100 கோடி மதிப்புள்ள உயர்மட்டச் சாலை ஒப்பந்தம் கே.என்.ஆர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதன் பின்னணியை ஆராய்ந்தால் அதில் நடந்த கூட்டுச்சதிகளும், தில்லுமுல்லுகளும் அம்பலமாகும். கே.என்.ஆர் நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் தகுதியின் அடிப்படையில் வழங்கப்படவில்லை. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி தொடங்கிய உயர்மட்டச் சாலைக்கான ஒப்பந்த நடைமுறையில் மொத்தம் 5 நிறுவனங்கள் பங்கேற்றன.

கேஎன்ஆர் நிறுவனம் தேர்வானது எப்படி

அவற்றில் கே.என்.ஆர் நிறுவனம் தவிர மீதமுள்ள 4 நிறுவனங்களும் அரசால் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்திருந்தன. கே.என்.ஆர் நிறுவனம் மட்டும் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என்பதால், அவற்றை அந்த நிறுவனம் பூர்த்தி செய்வதற்கு வசதியாக கடந்த ஆண்டு அக்டோபர் 23 ஆம் நாள் நடைபெறுவதாக இருந்த தொழில்நுட்ப ஒப்பந்தப் புள்ளிகள் திறப்பு முதலில் நவம்பர் ஆறாம் நாளுக்கும், பின்னர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு இறுதியாக நவம்பர் 17 ஆம் நாள் திறக்கப்பட்டது. அதில் திலிப் பில்ட்காப் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஒப்பந்தப்புள்ளி நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

காரணம் தெரியவில்லை

அதன்பின் கடந்த ஆண்டு நவம்பர் 24-ஆம் நாள் நிதி ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்டு, தகுதி பெற்ற நான்கு ஒப்பந்ததாரர்களில் கே.என்.ஆர் நிறுவனம் தான் குறைந்த தொகைக்கு உயர்மட்டச் சாலையை அமைத்துத் தருவதாக குறிப்பிட்டிருந்ததால் அந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவு அந்த நிறுவனத்திற்கு நவம்பர் 29 ஆம் தேதி தெரிவிக்கப்பட்டது. இதில் கொடுமை என்னவெனில், திலிப் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஒப்பந்தப் புள்ளியில் எந்தக்குறையும் இல்லாத நிலையில், அது தள்ளுபடி செய்யப் பட்டதற்கான காரணம் இதுவரை தங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்று அந்நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது.

700 கோடி குறைவு

திலிப் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஒப்பந்தப்புள்ளி தள்ளுபடி செய்யப்பட்டிருக்காவிட்டால், நிதி ஒப்பந்தப்புள்ளி ஆய்வின் போது, திலிப் நிறுவனத்தின் நிதி ஒப்பந்தப்புள்ளியும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு நடந்திருந்தால், கே.என்.ஆர் நிறுவனத்தை விட ரூ.700 கோடி குறைவாக குறிப்பிட்டிருந்த திலிப் நிறுவனத்திற்கு தான் இந்த ஒப்பந்தத்தை வழங்க வேண்டிய நிலை உருவாகியிருக்கும். அப்படி ஒரு சூழல் உருவாவதைத் தடுத்து கே.என்.ஆர் நிறுவனத்திற்கு ரூ.2100 கோடி ஒப்பந்தத்தை வழங்குவதற்காகவே திலிப் பில்ட்காப் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஒப்பந்தப்புள்ளியை திமுக அரசு திட்டமிட்டு தள்ளுபடி செய்திருக்கிறது.

கே.என்.ஆர் நிறுவனத்திற்கு தகுதி கிடையாது

இவை அனைத்திற்கும் மேலாக திருவான்மியூர் & உத்தண்டி உயர்மட்டச் சாலை அமைப்பதற்கான ஒப்பந்த நடைமுறையில் பங்கேற்பதற்கான தகுதியே கே.என்.ஆர் நிறுவனத்திற்கு கிடையாது. கன்னியாகுமரி முதல் மகாராஷ்டிரா மாநிலம் பன்வெல் வரை செல்லும் 66 ஆம் எண் கொண்ட தேசிய நெடுஞ்சாலையை மறுசீரமைக்கும் பணியை கே.என்.ஆர் நிறுவனம் தான் மேற்கொண்டது.

கருப்பு பட்டியல் நிறுவனம் எப்படி

கேரளத்தின் பல பகுதிகளில் இந்த நெடுஞ்சாலையில் விரிசல்களும், சேதங்களும் ஏற்பட்டதால் தேசிய நெடுஞ்சாலை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தகுதி பெற்ற நிறுவனங்கள் பட்டியலிலிருந்து கே.என்.ஆர் நிறுவனத்தை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நீக்கி விட்டது. இவ்வாறு தடை செய்யப்பட்ட நிறுவனம் திருவான்மியூர் & உத்தண்டி உயர்மட்டச் சாலை அமைப்பதற்கான ஒப்பந்த நடைமுறையில் பங்கேற்கவே முடியாது. ஆனால், அந்த நிறுவனத்தை இந்த ஒப்பந்த நடைமுறையில் பங்கேற்கச் செய்ததுடன், அதற்கு வசதியாக திலிப் நிறுவனத்தை போட்டியிலிருந்து நீக்கியிருக்கிறது என்றால் அதன் பின்னணியில் நடந்த சதித்திட்டங்களை எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

பல கோடி ஒப்பந்தம்

திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து இப்போது வரை நூற்றுக்கணக்கான கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட நெடுஞ்சாலை பணிகளில் பெரும்பாலானவை கே.என்.ஆர் நிறுவனத்திற்கே வழங்கப்பட்டுள்ளன. இதிலிருந்தே அந்த நிறுவனத்திற்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான தொடர்புகள் தெளிவாகத் தெரியும். திருவான்மியூர் & உத்தண்டி உயர்மட்டச் சாலை திட்டம் அமைப்பது குறித்த பேச்சுகள் எழுந்த நாளில் இருந்தே அதற்கான ஒப்பந்தம் கே.என்.ஆர் நிறுவனத்திற்கு தான் வழங்கப்படவுள்ளது என்று கூறப்பட்டது. இப்போது அது உண்மையாகி இருப்பதிலிருந்தே இத்திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகள் வழங்கியதில் ஊழல் நடந்திருப்பதை யூகிக்க முடியும்.

ஊழல் நடந்திருக்கிறது

உயர்மட்டச் சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் எவ்வளவு தொகைக்கு கே.என்.ஆர் நிறுவனத்திற்கு வழங்கப்பட உள்ளது என்பது இன்னும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், அந்த நிறுவனம் குறிப்பிட்ட தொகைக்கும், திலிப் நிறுவனம் குறிப்பிட்ட தொகைக்கும் இடையே ரூ.700 கோடி வரை வித்தியாசம் இருப்பதால் கிட்டத்தட்ட அதே தொகைக்கு ஊழல் நடைபெற்றிருக்கலாம் என்று நெடுஞ்சாலைத்துறையின் முன்னாள் அதிகாரிகளும், மூத்த பொறியாளர்களும் குற்றஞ்சாட்டியிருப்பதை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.

உயர்மட்ட சாலை முடியாது

திருவான்மியூர் & உத்தண்டி உயர்மட்டச் சாலை அமைப்பதற்கான நிதி இன்னும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதற்கான கட்டுமானப் பணிகளும் திமுக ஆட்சிக்காலத்தில் தொடங்குவதற்கு வாய்ப்பு இல்லை. ஆனாலும் அதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்யத் துடிப்பதற்குக் காரணம் அதன் மூலம் ஆட்சியாளர்களுக்கு கிடைக்கும் பெருந்தொகையும், அதை தேர்தல் செலவுக்கு பயன்படுத்தலாம் என்ற துடிப்பும் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சிறப்பு அனுமதி

ஏற்கனவே, 312.48 கி.மீ நீளத்திற்கான 80 சாலைப் பணிகளை ரூ.2000 கோடி செலவில் மேற்கொள்வதற்கும், அதற்கான நிதியை அடுத்த நிதியாண்டிற்கான பட்ஜெட் ஒதுக்கீட்டிலிருந்து எடுத்துக் கொள்ள சிறப்பு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டிருப்பதையும் ஆதாரங்களுடன் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் குற்றஞ்சாட்டியிருந்தேன். இப்படியாக ஆட்சிக்காலத்தின் கடைசி நிமிடம் வரை மட்டுமின்றி, அடுத்த ஆட்சியில் நடைபெற வேண்டிய பணிகளுக்கும் இப்போதே ஒப்பந்தம் விட்டு, அதற்கான கமிஷன், கலக்ஷன், கரப்ஷன்களை வசூலித்துக் குவிப்பதில் தான் திமுக அரசு அதிக ஆர்வம் காட்டி வருகிறது.

சிபிஐ விசாரணை தேவை

திமுக அரசின் இந்த ஊழல்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இந்த பின்னணியை முழுமையாக வெளிக்கொண்டு வரும் வகையில் திருவான்மியூர் & உத்தண்டி உயர்மட்டச் சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் வழங்குவதில் நடந்த ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும்" இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+