School Leave: தமிழகத்தில் நாளை 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்றிலிருந்து கனமழை கொட்டி வருகிறது. இந்த நிலையில் நாளையும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை திங்கட்கிழமை தென்காசி, நெல்லை மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்று தமிழகத்தில் தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. நேற்று அதிகாலையில் இருந்தே கனமழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரம் விட்டு விட்டு சாரல் மழையாகவும், இடையிடையே கனமழையும் என தொடர்ந்து மழை விடாமல் கொட்டியது.

விடாமல் கொட்டும் கனமழை
இதன் காரணமாக தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்கள் வெள்ள நீர் தேங்கியது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நெல்லை ஊத்து பகுதியில் மட்டும் 26 செமீ மழை பெய்தது. இதேபோல் மாஞ்சோலை, கயத்தார், காயல்பட்டினத்திலும் 10 செமீட்டருக்கும் அதிகமாக மழை பெய்தது. தொடர்ந்து இன்றும் கனமழை விடாமல் பெய்து வருகிறது. காலையில் சிறிது நேரம் பெய்யாமல் இருந்த நிலையில் பின்னர் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் நாளையும் தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசியில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாலும், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாலும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நெல்லை, தென்காசியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் இன்று நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடபட்டுள்ளது. ஏற்கனவே தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாலும், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தென் மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் தான் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், தென்காசியில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இதேபோன்று கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு காரணமாக நெல்லை மாவட்டத்திலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் சுகுமார் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்திலும் கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை ஒரு நாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முன்னதாக வானிலை மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், குமரிக் கடல் பகுதியில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இது காற்றழுத்த தாழ்வு நிலையாக மாற வாய்ப்பு இருக்கிறது.
இதன் காரணமாக தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடப்படுகிறது. கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை. கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை கனமழை பெய்யும் மாவட்டங்கள்
நாளை, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை மையம் கூறியிருந்தது.












Click it and Unblock the Notifications