விடாது வெளுத்த மழை..மளமளவென நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி..சென்னைவாசிகள் மகிழ்ச்சி
சென்னை: தொடர் மழையின் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 80 சதவிகிதம் உயர்ந்துள்ளது. கடல் போல அலையடிப்பதால் இந்த ஆண்டு குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் நீர் இருப்பு உயர்ந்து வருவதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. மழையின்காரணமாக, நீர்பிடிப்பு பகுதிகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். கோடை காலத்தில் வெப்பம் சுட்டெரித்த காரணத்தாலும் குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்பட்டதாலும் கடந்த மாத இறுதியில் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 60 சதவிகிதம் மட்டுமே இருந்தது.

குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு குறைந்து வந்தாலும் தற்போது கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி ஆந்திரமாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே இரு தினங்களாக சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக பூண்டி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 35 அடி கொள்ளளவு கொண்ட பூண்டி அணையின் தற்போதைய நீர்மட்டம் 27.66 அடியாக உள்ளது. பூண்டி அணை 46% நிரம்பியுள்ள நிலையில் அணையின் மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில் 1,257 கன அடி நீர் இருப்பு உள்ளது. மேலும் அணையிலிருந்து பேபி கால்வாய் மற்றும் இணைப்பு கால்வாய்களுக்கு வினாடிக்கு 289 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
செம்பரம்பாக்கம் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையின் காரணமாக ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. 24 அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தற்போது 80 சதவிகிதம் நிறைந்து 19.17 கன அடியாக உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியாக உள்ள நிலையில் தற்போது நீர் இருப்பு 2,403 மில்லியன் கன அடியாக உள்ளது. ஏரியின் நீர் வரத்து 1,146 கன அடியாக உள்ள நிலையில் ஏரியிலிருந்து வினாடிக்கு 174 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கோடை காலத்திலும் கடல் போல காட்சியளிக்கிறது செம்பரம்பாக்கம் ஏரி.
புழல், சோழவரம் நீர்பிடிப்பு பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழையால் ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. புழல் ஏரிக்கு வினாடிக்கு 58 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் எரியின் நீர்மட்டம் 15.76 அடியாக உள்ளது. இதேபோல சோழவரம் ஏரியில் நீர்வரத்து வினாடிக்கு 12 கன அடியாக உள்ள நிலையில் ஏரியின் தற்போதைய நீர்மட்டம் 10.57 அடியாக உள்ளது.கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளவான 500 மி.கனஅடியில் 460 மி.கன அடி தண்ணீர் இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications