மாறிய வானிலை! சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை! தரையிறங்க முடியாமல் வட்டமடித்த 10 விமானம்-பரபரப்பு
சென்னை: சென்னையில் பல இடங்களில் தற்போது பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதுமட்டுமின்றி அடுத்த 3 மணிநேரம் சென்னையில் இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே கனமழையின் காரணமாக 10 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தபடி சுற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் பல இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களிலும் இன்று காலை முதல் சில இடங்களில் சாரல் மழை பெய்தது.
இந்த நிலையில் தான் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த சில நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி தற்போது சென்னையில் பல இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை என்பது கொட்டித்தீர்த்து வருகிறது. சென்னை மாநகர் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி பட்டினப்பாக்கம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, எழும்பூர், சென்ட்ரல், சிந்தாதிரிப்பேட்டை, மயிலாப்பூர் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் தற்போது கனமழை என்பது விட்டு விட்டு பெய்து வருகிறது.
இந்த மழையால் மாலையில் அலுவலகம் முடித்து டூவீலர்களில் வீடு திரும்புவோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த திடீர் வானிலை மாற்றத்தால் சென்னை, மும்பை, ஹைதராபாத், கோவா உள்பட பல இடங்களில் இருந்து சென்னை வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் தவித்தன. இந்த விமானங்கள் வானத்தில் சுமார் 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை வட்டமடித்தபடி சுற்றி வந்தன.
அதன்பிறகு அந்த விமானங்கள் தரையிறங்கின. இதனால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கனமழையின் காரணமாக சென்னையில் இருந்து டெல்லி உள்பட பிற இடங்களுக்கு செல்ல வேண்டிய 6 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் விமான பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதுஒருபுறம் இருக்க இரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரை சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி இரவு 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகப்பட்ச வெப்பநிலை 35- 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25- 26 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்க வாய்ப்பு இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications