மொத்தம் 10 மாவட்டங்கள்.. செம மழை, அதுவும் கன மழை பெய்யும்.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வெள்ளிக்கிழமை வட கடலோர மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன மழை
மேலும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

சென்னை நிலவரம்
சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் விட்டு விட்டு மழை தொடரும். அவ்வப்போது ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சென்னை மழை
நேற்று விடியவிடிய சென்னையில் நல்ல மழை பெய்து வெள்ள நீர் சாலைகளில் ஓடியது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில், சென்னை போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் 18 செ.மீ., அண்ணா பல்கலைக்கழகம் 14 செ.மீ., வடசென்னை, செங்குன்றம் தலா 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

தமிழக மழை
தமிழகத்தின் பிற பகுதிகளான, சூரங்குடி 11 செ.மீ., வைப்பார், ராமேஸ்வரம் தலா 10 செ.மீ., அம்பத்தூர், பாம்பன் தலா 9 செ.மீ., சென்னையின், ஆலந்தூர், சோழிங்கநல்லூர் தலா 8 செ.மீ., எண்ணூர், சென்னை விமானநிலையம், சத்யபாமா பல்கலைக்கழகம் பெரம்பூர், ஆர்.எஸ்.மங்களம், கமுதி தலா 6 செ.மீ, கோவில்பட்டி, எட்டயாபுரம் தலா 3 செ.மீ. மழை பெய்தது.


Click it and Unblock the Notifications
