தேர்தலுக்கு பிறகு மொத்தமாக சென்னை திரும்பும் பொதுமக்கள்.. திணறும் பரனூர்! அப்போ பெருங்களத்தூர் நிலை?
சென்னை: வாக்களிக்கச் சொந்த ஊர் சென்ற மக்கள் இன்று தங்கள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவதால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்பட்டுள்ளது.
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டமாக இந்த முறை லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்துவிட்ட நிலையில், இன்னும் 6 கட்ட தேர்தல் நடக்க உள்ளது.

இதில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு ஜூன் 4ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் நாடு முழுக்க கோடை வெப்பத்திற்கு இணையாக அரசியலிலும் அனல் பறக்கிறது.
வாக்குப்பதிவு: இதில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்டத்திலேயே அனைத்து தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் மொத்தம் 102 தொகுதிகளில் ஏப்ரல் 19இல் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. வெள்ளிக்கிழமை தேர்தல் நடந்த நிலையில், பொதுமக்கள் பலரும் வாக்களிக்க தங்கள் சொந்த ஊர் சென்றனர்.
இதனால் தேர்தலுக்கு முந்தைய நாள் ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் கூட்டநெரிசல் அதிகமாக இருந்தது.. இப்போது லாங் வீக் எண்ட் முடிந்துவிட்ட நிலையில், பொதுமக்கள் பலரும் தங்கள் சொந்த ஊர் திரும்புகின்றனர்.
சென்னை திரும்பும் மக்கள்: குறிப்பாக மாநிலத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் சென்ற மக்கள் பலரும் சென்னையை நோக்கிப் படையெடுத்துள்ளனர். இதனால் பல்வேறு இடங்களிலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாகச் சென்னை அடுத்துள்ள பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகக் காணப்படுகிறது. இதனால் அங்குச் சாலைகளில் வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றன. வாகனங்கள் அமை வேகத்திலேயே நகர்கின்றன.
டிராபிக் அதிகம்: மேலும், நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி வழியாகச் சென்னை செல்லும் அந்தியோதயா முன்பதிவு இல்லாத ரயிலில் ஏற பொதுமக்கள் முண்டியடிக்கிறார்கள். இதனால் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பொருட்கள் வைக்கும் இடம், கழிவறை அருகே என அனைத்து பகுதிகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.. திருநெல்வேலி ரயில் நிலையத்தில் மக்களின் கூட்டம் மோதுகிறது.
மாலை நேரத்திலேயே இப்படி சாலை, ரயில் நிலையங்கள் என அனைத்திலும் கூட்டம் அதிகரித்துக் காணப்படும் நிலையில், நேரம் செல்ல செல்ல இரவில் பெருங்களத்தூர் உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதிகளில் டிராபிக் கூட்டம் மேலும் அதிகரிக்கவே செய்யும் என்று அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications