விடிய விடிய "டிராபிக் ஜாம்".. பெருங்களத்தூர் டூ செங்கல்பட்டு வரை.. வாகன நெரிசலால் மக்கள் அப்செட்
சென்னை: தொடர்ந்து பண்டிகை விடுமுறைகள் வருவதால் சென்னையில் இருந்து ஆயிரக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்வதால் பெருங்களத்தூர் முதல் செங்கல்பட்டு வரை கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
இதனால் ஜிஎஸ்டி சாலையில் நேற்று இரவு முதல் இன்று மதியம் வரை விடிய விடிய வாகனங்கள் ஆமை போல மெதுவாக ஊர்ந்து செல்கின்றன.
ஒவ்வொரு பண்டிகை தினத்தன்றும் ஜிஎஸ்டி சாலையில் பல மணிநேரமாக போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பது வாடிக்கையாகி விட்டதாகவும், இதற்கு தீர்வு காணும் வகையில் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை அரசு விரைவில் திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தெற்கை நோக்கி படையெடுக்கும் மக்கள்
கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகள் வருவதாலும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமறை அளிக்கப்பட்டதாலும் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல ரயில், பேருந்து நிலையங்களில் நேற்று மதியம் முதலாகவே மக்கள் குவிந்து வருகின்றனர். தென் மாவட்டங்களை நோக்கியே அதிக அளவிலான மக்கள் செல்கின்றனர். ரயில்களில் இருக்கைகள் நிரம்பிவிட்டதால், அனைவரின் தேர்வாகவும் பேருந்துகள் மாறியுள்ளன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் தங்கள் இஷ்டத்துக்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளதால், பெரும்பாலானோர் அரசு பேருந்துகளில் பயணிக்க விரும்புகின்றனர்.

சிறப்பு பேருந்துகள் இருந்தாலும்..
இதனிடையே, சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக 2 நாட்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் தலா 300 பேருந்துகள் வீதம் கூடுதலாக 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி, நேற்று காலை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. நேற்றைக்கு மட்டும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகளும், இன்று 300 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. ஆனால், இத்தனை சிறப்பு பேருந்துகள் உள்ள போதிலும் பயணிகளின் கூட்டத்துக்கு அவற்றால் ஈடுகொடுக்க முடியவில்லை.

திணறும் ஜிஎஸ்டி சாலை
பேருந்துகள், ரயில்களில் பயணிப்போர் ஒருபுறம் இருக்க, அதிக அளவிலான மக்கள் கார்களிலும், சிலர் மோட்டார் சைக்கிள்களில் சொந்த ஊர் செல்கிறார்கள். இவர்கள் அனைவரும் சந்திக்கும் புள்ளியாக பெருங்களத்தூர் இருக்கிறது. இதனால் நேற்று இரவு 7 மணி முதலாகவே பெருங்களத்தூர் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்து வருகிறது. உதாரணமாக, நேற்று இரவு தாம்பரத்தில் இருந்து பெருங்களத்தூரை கடக்க இரண்டரை மணிநேரத்துக்கும் மேல் ஆகியுள்ளது. மற்ற நேரங்களில் 15 நிமிடங்களில் இந்தப் பகுதியை கடந்துவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எப்போது?
கஷ்டப்பட்டு பெருங்களத்தூரையும், ஊரப்பாக்கத்தையும் கடந்துவிட்டாலும் கூட, கூடுவாஞ்சேரியில் இருந்து செங்கல்பட்டு வரை மீண்டும் கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. இதனால் ஜிஎஸ்டி சாலை முழுவதும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வரிசைக் கட்டி நிற்கின்றன. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், "ஒவ்வொரு பண்டிகையின் போதும் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பது எங்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டால் மட்டுமே இதற்கு விடிவுகாலம் பிறகும். ஆனால், அரசோ பேருந்து நிலையத்தை திறக்க காலம் தாழ்த்திக் கொண்டே செல்கிறது. மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு விரைவில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறக்க வேண்டும்" என்றனர்.












Click it and Unblock the Notifications