ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கிடுகிடு! கடல் போல் காட்சியளிக்கும் கேஆர்எஸ், கபினி அணைகள்
சென்னை: ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதுவரை வினாடி்கு 14 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அது உயர்ந்துள்ளது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல ஆற்றில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெஞ்சல் புயலால் தருமபுரி மாவட்டத்தில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்துள்ளது.

இதனால் நீர் நிலைகள் நிரம்பி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் எல்லாம் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல், சிறுவாணி அணை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கனமழை கொட்டியது.
இதனால் எங்குத் திரும்பினாலும் ஒரே வெள்ளமாக காட்சியளிக்கிறது. தரைப்பாலங்கள் மூழ்கி ஊருக்குள் தண்ணீர் வரும் அளவுக்கு பல இடங்களில் நிலைமை மோசமாகியுள்ளது. இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 7414 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர் மட்டம் 111.39 அடியாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் ஒகேனக்கல் நீர் வீழ்ச்சிக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 21 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் மெயினருவி, சினி பால்ஸ், ஐந்தருவில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மக்கள் குளிக்கவும், பரிசல் பயணம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கர்நாடகாவிலும் தற்போது மழை பெய்து வருகிறது. கர்நாடகாவில் கபினியில் 16,617 கன அடி தண்ணீர் உள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 19516 கனஅடியாகும். அது போல் கிருஷ்ணராஜ சாகர் அணையில் 49145 கனஅடி நீர் உள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 49,452 கன அடி ஆகும். அதாவது கிருஷ்ணராஜ சாகர் அணை கிட்டத்தட்ட 99 சதவீதத்திற்கு மேல் நிரம்பிவிட்டது.
இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்தும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் தமிழக - கர்நாடகா எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாிரகள் தொடர்ந்து கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். அதுபோல் ஒகேனக்கல், சிறுவாணி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications