கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. உதவி மையம் செயல்பட தொடங்கியது.. என்னென்ன சேவைகள் கிடைக்கும்?
சென்னை: மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்களுக்காக உதவி மையமானது செயல்பட தொடங்கியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு 2 ஆண்டுகளாகியும் செயல்படுத்தப்படாமல் வெறும் அறிவிப்பாக இருப்பதாக பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் திமுக அரசை விமர்சித்திருந்தன.

பெண்களும் இந்த திட்டம் எப்போது தொடங்கப்படும் என காத்திருந்தார்கள். மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த திட்டத்தை செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி செயல்படுத்துவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால் எல்லா பெண்களுக்கும் இந்த உரிமைத் தொகை வழங்கப்படவில்லை.
இதற்காக சில விதிகள் வைக்கப்பட்டன. அதாவது உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கும் பெண்கள் வருமான வரி செலுத்தக் கூடாது, ஆண்டு வருமானம் ரூ 2.50 லட்சத்துக்கு மேல் இருக்கக் கூடாது, அது போல் ஆண்டுக்கு 3600 யூனிட்கள் மின்கட்டணம் செலுத்தக் கூடாது. கார், வேன், லாரி உள்ளிட்ட வாகனங்களை வைத்திருக்கக் கூடாது.
குறிப்பாக அவர்கள் அரசு ஊழியர்களாக இருக்கவே கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதற்காக வீடுதோறும் ரேஷன் கடை ஊழியர்கள் கலைஞர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்களை கொடுத்திருந்தனர். அதன்படி 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 1.06 கோடி பேரே தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த திட்டத்தை அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் தேதி அவருடைய பிறந்த மாவட்டமான காஞ்சிபுரத்தில் வைத்து முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்கு ஏடிஎம் கார்டும் வழங்கப்பட்டது. முதல்வருடன் அந்தந்த வங்கிகளின் உயரதிகாரிகளும் இருந்தனர். இந்த தொகை இனி மாதாமாதம் வரவு வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த திட்டத்தில் நிராகரிக்கப்பட்டோர் நேற்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்திருந்தது. அதன் படி இன்று முதல் உதவி மையம் செயல்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த உதவி மையங்கள் செயல்பட தொடங்கியது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் இன்று முதல் உதவி மையம் செயல்பட தொடங்கியது. வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பயனாளிகள் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்.
நிராகரிக்கப்பட்ட 56.60 லட்சம் பேருக்கு நிராகரித்ததற்கான காரணங்கள் இன்று முதல் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது எனவும் நிராகரிக்கப்பட்டதன் காரணங்களை அறிந்து கொள்ள முடியாதவர்கள் கோட்டாட்சியர் அலுவலகங்களை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் நிராகரிப்பு, விண்ணப்பம் ஏற்கப்பட்டும் ரூ 1000 உதவித்தொகை கிடைக்காதவர்களும் இந்த உதவி மையத்தை நாடி சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications