ஹெர்குலஸ் சைக்கிள் டூ இனோவா கார்! நெல்லை மேயராகும் சாமானியர்! யார் இந்தக் கிட்டு?
சென்னை: கடந்த 35 வருடங்களாக ஹெர்குலஸ் சைக்கிளில் வலம் வந்த திமுக தொண்டரான கிட்டு ராமகிருஷ்ணன் திருநெல்வேலி மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதை அந்த ஊர் மக்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்று மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
திருநெல்வேலி மாநகராட்சியின் மேயராக வேட்பாளராகக் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். 1980இல் ஒரு சாதாரண தொண்டனாகத் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்ட இந்தக் கிட்டு இன்றுவரை அரசியல்வாதிகளுக்காக எந்தவித ஆடம்பர வாழ்க்கையும் இல்லாமல் மிக எளிமையாகச் சைக்கிளில் நெல்லையை வலம் வந்து கொண்டிருக்கிறார். கடைக்கோடி தொண்டனாக இவர் கட்சியில் சேரும் போது இவருக்கு வயது 17 கூட முழுதாக நிறையவில்லை. சுமார் 40 ஆண்டுகளாக திமுகவிலிருந்து வரும் கிட்டுவின் மீது இப்போதுதான் தலைமையின் கண் பார்வை விழுந்துள்ளது.

நெல்லை டவுனில் உள்ள வேணுவன குமாரர் தெருவில்தான் பல ஆண்டுகளாக புதிய மேயராக போகும் கிட்டுவின் வீடு உள்ளது. இந்த வீடே கட்டப்பட்டு பல ஆண்டுகள் இருக்கும்போல. அந்தளவுக்கு நெல்லை மண்ணின் அடையாளத்தைப் பேசும் அளவுக்குப் பழமையாகக் காட்சி தருகிறது. வீட்டில் பல இடங்களில் கீறல் விழுந்து இருப்பதை முதல் பார்வையிலேயே கண்டுபிடித்துவிட முடிகிறது. கிட்டுவின் மனைவி பெயர் காந்தீஸ்வரி. மகனின் பெயர் மகாராஜன்.
கிட்டு அதிகம் படிக்கவில்லை. குடும்பச் சூழல், கட்சியில் அதிக ஈடுபாடு காரணமாக 6 ஆம் வகுப்புடன் தனது படிப்பை மூட்டைக் கட்டி வைத்துவிட்டார் கிட்டு. அதன்பின்னர் 1984இல் நெல்லையில் உள்ள 16 ஆவது வார்டுக்கு திமுக துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அதனை அடுத்து 87இல் வட்டச் செயலாளராக இவருக்குப் பதவி கிடைத்தது. சொல்லப் போனால் நெல்லை டவுன் நகராட்சியாக இருந்த காலத்தில் கட்சியில் இணைந்த கிட்டு, இன்று அதே டவுன் மாநகராட்சியாக வளர்ந்து நிற்கும் காலத்தில் மேயராக பதவியேற்க இருக்கிறார். இந்த நகரம் எப்படிப் படிப்படியாக வளர்ந்து வந்ததோ அதேபோல கிட்டுவும் படிப்படியாக திமுகவில் வளர்ந்து வந்துள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் 52 ஆம் வார்டு சார்பில் போட்டியிட்டு மாமன்ற உறுப்பினராக முதன்முறையாகத் தேர்வு செய்யப்பட்டார். இரண்டு முறை மாமன்ற உறுப்பினராகப் பதவி வகித்துள்ள கிட்டு, இதுவரை கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய ஹெர்குலஸ் சைக்கிளில்தான் இந்த மாநகராட்சியை வலம் வந்து கொண்டுள்ளார். பொதுமக்கள் குறைகளைக் கேட்கவும், வார்டில் நடைபெறும் நலத்திட்டப் பணிகளைப் பார்வையிடவும் என எங்குப்போனாலும் இந்த ஹெர்குலஸ் தான் அவரது வாகனமாக இருந்து வருகிறது.
அந்த சைக்கிளின் இருக்கை கூட திமுக கட்சிக் கொடியைப் பிரதிபலிக்கும்படி கருப்பு சிகப்பில்தான் உள்ளது. தினம் இந்த சைக்கிளில் 5 கிமீட்டர் வரை பயணித்து வருவதாகச் சொல்கிறார் கிட்டு. அவர் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல் இந்த சைக்கிள் ராஜாவை ஊர்மக்கள் பலரும் சூழ்ந்து நின்று வாழ்த்தி வருகின்றனர். பலரும் எங்களோடு இருந்து வந்த ஒரு சாதாரண மனிதர் இன்று மாநகராட்சிக்கு மேயராக பதவியேற்றிருப்பது மிகப்பெரிய சந்தோஷம் என்றும் கூறுகின்றனர்.
"காலையில் ஆறு மணிக்கே சைக்கிளில் ஏரியாவை சுற்றிப் பார்க்க ஆரம்பித்துவிடுவார். என்ன குறை உள்ளது என்று தேடித் தேடிப் போய் கேட்பார். அவரிடம் ஒரு குறையைச் சொல்லிவிட்டால், அடுத்த நாளே சரி செய்து தந்துவிடுவார். அவர்தான் எங்கள் ஏரியாவுக்கு லைட் வசதி, தண்ணீர் பைப் வசதி, சாலை வசதி என அனைத்தையும் செய்து கொடுத்தவர். அவர் எங்களில் ஒருவர். அவரை மேயராக நிறுத்தி இருக்கிறார்கள். ஒரு சாதாரண தொண்டர் இன்று மேயராக பதவியேற்க இருக்கிறார். எங்கள் வார்டுக்கே அது பெருமை" என்கிறார்கள் கிட்டுவின் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள்.

சுமாரான உயரம், வெள்ளை வேஷ்டி மற்றும் சட்டை, சாதாரண செருப்பு என அக்மார்க் நெல்லை மனிதராகவே தோற்றம் அளித்து வருகிறார். திமுகவுக்கு நெல்லை மாநகராட்சியில் திமுகவுக்கு அதிக பெரும்பான்மை இருப்பதால் கிட்டு மேயர் நாற்காலியில் அமரப் போவது உறுதியாகியுள்ளது.
கடந்த 35 ஆண்டுகளாக ஹெர்குலஸ் சைக்கிளில் பெடலை மிதித்து மிதித்து வலம் வந்துகொண்டிருந்த இந்தக் கிட்டு ராமகிருஷ்ணன் மேயராக பதவியேற்ற அடுத்த நொடி முதல் அரசு சார்பில் மேயருக்கு வழங்கப்படும் இனோவா காரில் வலம் வர இருக்கிறார். இனி அவரது கால்கள் சைக்கிள் மிதிப்பதிலிருந்தும் வேகாத வெயிலில் வெந்து தணிவதிலிருந்தும் கொஞ்சக் காலம் ஓய்வு எடுத்துக் கொள்ளும். இந்த வசதி அவருக்கு சும்மா வந்துவிடவில்லை. அவரின் ஓயாத உழைப்புக்குக் கிடைத்த மிகப்பெரிய மரியாதை என்றே சொல்ல வேண்டும்.












Click it and Unblock the Notifications