அமலாக்கத்துறை லுக் அவுட் நோட்டீஸ்.. செந்தில் பாலாஜி தம்பி அசோக் குமார் வழக்கில் ஐகோர்ட் உத்தரவு!
சென்னை: அமலாக்கத்துறையின் லுக் அவுட் நோட்டீஸை எதிர்த்து திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
அரசு வேலைக்கு பணம் பெற்றதாக கூறி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு, செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில், அசோக் குமாருக்கு எதிராக அமலாக்கத் துறை, கடந்த ஆண்டு லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது. இந்த லுக்-அவுட் நோட்டீஸை திரும்பப் பெற அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக்கோரி அசோக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அசோக்குமாரின் மனு மீதான விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.
இதற்கிடையே, தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக கூறப்படும் வழக்கில் செந்தில் பாலாஜி, அசோக்குமார் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் இன்று நேரில் ஆஜராக சம்மன் வழங்கப்பட்ட நிலையில் இருவரும் இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை.
மேலும், இருவரும் வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில், நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் திருவல்லிக்கேணி போலீசார் லுக் அவுட் நோட்டீஸையும் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அனைத்து விமான நிலையங்களும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.














Click it and Unblock the Notifications