புதிய டிஜிபி நியமன விவகாரம்.. உயர்நீதிமன்ற கிளையில் அரசு சொன்ன தகவல்! உடனே நீதிபதிகள் போட்ட உத்தரவு!
மதுரை: தமிழக காவல்துறையின் புதிய டிஜிபி நியமனம் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை, வழக்கு பைசல் செய்யப்படுகிறது என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் பதவிக் காலம் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான நடைமுறைகளை துவக்க வேண்டும். எனினும், இன்னும் அந்த நடைமுறைகள் துவங்கவில்லை என்றும், பொறுப்பு டிஜிபி நியமிக்கப்படக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்நிலையில், ராமநாதபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் யாசர் அராபத், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் ஆகஸ்ட் 31 ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கவும் அல்லது பொறுப்பு டிஜிபியாக நியமிக்கவும் வாய்ப்புள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் தங்களுக்கு சாதகமான அதிகாரிகளை உயர் பொறுப்புகளில் வைத்திருக்க ஆளும் திமுக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. காதல் விவகார படுகொலைகள் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் டிஜிபி பணியிடம் முறையாக நிரப்பப்பட வேண்டும். டிஜிபி நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே வழிகாட்டுதல்கள் பிறப்பித்துள்ளன. அந்த வழிகாட்டுதலின்படி புதிய டிஜிபிக்கு தகுதியான ஐபிஎஸ் அதிகாரிகளை தேர்வு செய்யும் பணியை தொடங்க வேண்டும்.
அவ்வாறு எந்தப் பணியும் தமிழகத்தில் இன்னும் தொடங்கப்படவில்லை. இதனால் தற்போதைய டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வுக்கு பிறகு அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கவோ, பொறுப்பு டிஜிபியாக நியமிக்கவோ தடை விதித்து உத்தரவிட வேண்டும்." எனக் கோரி இருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது எனத் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், "டிஜிபி நியமனம் தொடர்பாக கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அது முறையாக பின்பற்றப்படுகிறதா?" எனக் கேள்வி எழுப்பினர். அரசு தரப்பில், பதிலளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், ஏற்கெனவே 2 வாரம் கால அவகாசம் வழங்கியாகிவிட்டது. இதற்குப் பிறகும் கால அவகாசம் கேட்பது சரியல்ல. தமிழக உள்துறை முதன்மைச் செயலரிடம் உரிய விளக்கம் பெற்று பிற்பகலுக்குள் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.
இதையடுத்து, பிற்பகல் 2:15 மணிக்கு மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் அஜ்மல் கான், "உள்துறை செயலரிடம் விபரம் பெற்றோம். புதிய டிஜிபி நியமன நடைமுறைகள் தற்போது தொடங்கி நடந்து வருகிறது" எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, "இந்தச் சூழலில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. வழக்கு பைசல் செய்யப்படுகிறது" என கூறி ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் வழக்கு விசாரணையை முடித்து வைத்தனர்.












Click it and Unblock the Notifications