கேசி பழனிசாமியை ஜெயலலிதாவே நீக்கினார்.. எடப்பாடி வைத்த பரபர வாதம்.. அதிரடியாக ஆர்டர் போட்ட ஐகோர்ட்!
சென்னை: அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமியை அதிமுகவில் இருந்து நீக்கி பிறப்பித்த உத்தரவு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டாலும், ஓபிஎஸ், சசிகலா, கேசி பழனிசாமி என பல தரப்புகளில் இருந்தும் சட்ட ரீதியாக வழக்குகளைச் சந்தித்து வருகிறார். இவற்றில் ஒவ்வொன்றாக வெற்றி பெற்று வருவதால் எடப்பாடி பழனிசாமியின் பலம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவும், எம்.பியுமான கே.சி.பழனிசாமி வழக்கில் ஐகோர்ட், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதிமுகவின் போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலிப்பதாக முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமிக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் தன்னை பற்றி தெரிவித்த கருத்துகள் தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கே.சி.பழனிச்சாமி அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கே.சி.பழனிசாமியின் அவதூறு வழக்கை தள்ளுபடி செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி கே.சி.பழனிசாமி சென்னை உயர் நீதிமனத்தில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்தபோதே, கே.சி.பழனிசாமியை கட்சியிலிருந்து நீக்கியதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, அதிமுகவில் இருந்து கே.சி.பழனிசாமியை நீக்கி பிறப்பித்த உத்தரவு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.












Click it and Unblock the Notifications