காரில் சிக்கிய துப்பாக்கிகள்.. “சிபிஐக்கு தகவல் சொன்னீங்களா?” தமிழக போலீசாருக்கு ஐகோர்ட் கேள்வி!
சென்னை: திருப்போரூர் அருகில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து சிபிஐ-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா என பதிலளிக்கும்படி, தமிழக காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரை அடுத்த இளலூர் அருகில், திருப்போரூர் போலீசார், 2023ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று பேசிக் கொண்டிருந்த பிருத்விராஜ், கார்த்திகேயன், வசந்தன் ஆகிய மூவரை விசாரித்தனர்.

அவர்கள் வந்த இரு கார்களை சோதித்த போது, அதில் மூன்று துப்பாக்கிகள் மற்றும் 163 தோட்டாக்கள், 57 வெளிநாட்டு மதுபாட்டில்கள், 250 கிராம் கஞ்சா ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், பிருத்திவிராஜ் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக பதியப்பட்ட வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி வாராகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், உரிமம் இல்லாத ஆயுதங்கள் வைத்திருந்த இந்த வழக்கில் முக்கிய நபரான ராடியன்ஸ் குரூப் நிறுவன நிர்வாக இயக்குனரை வழக்கில் சேர்க்காமல் காவல் துறையினர் விட்டு விட்டதாகவும், இந்த வழக்கில் முறையாக விசாரணை நடத்தவில்லை என்பதால் விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, துப்பாக்கி பறிமுதல் தொடர்பான வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கின் புலன் விசாரணையில் முன்னேற்றம் இல்லாவிட்டாலோ, விசாரணையே நடைபெறாவிட்டாலோ விசாரணையை மாற்றலாம் எனத் தெரிவித்த நீதிபதிகள், துப்பாக்கிகள் பறிமுதல் குறித்து சிபிஐ-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா என விளக்கம் அளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications