ஆக்கிரமிப்பு நிலமா? எவ வேலுவின் மனைவி தலைவராக உள்ள கல்லூரி உரிமத்தை ரத்து செய்ய மறுத்த ஹைகோர்ட்
சென்னை: பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுவின் மனைவி தலைவராக உள்ள கல்லூரிக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் மாத்தூரில் சரஸ்வதி அறக்கட்டளை பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் தலைவராக அமைச்சர் எவ வேலுவின் மனைவி ஜீவா உள்ளார்.

இந்நிலையில் தான் அந்த பொறியியல் கல்லூரி அரசு புறம்போக்கு நிலம் மற்றும் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கிடையே தான் திருவண்ணாமலையை சேர்ந்த டிஎஸ் சங்கர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‛‛அரசு புறம்போக்கு நிலம் மற்றும் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் அமைச்சர் எ.வ.வேலுவின் மனைவி ஜீவா தலைவராக உள்ள சரஸ்வதி அம்மாள் கல்வி அறக்கட்டளை பொறியியல் கல்லூரியின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்'' என கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஜெ.சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு புறம்போக்கு மற்றும் நீர்நிலையை ஆக்கிரமித்து கல்லூரி கட்டப்படவில்லை என கல்லூரி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார். இதனை மனுதாரர் ஏற்றுக்கொண்டார்.
இருப்பினும் மனுதாரர் தரப்பு இன்னொரு விஷயத்தை முன்வைத்தது. அதாவது 20 ஏக்கர் பரப்பில் கல்லூரி அமைக்கப்பட வேண்டும். ஆனால் இங்கு கல்லூரி பரப்பளவு என்பது மிகக்குறைவாகவே உள்ளது. ஏழு ஏக்கர் நிலத்தில் மட்டுமே கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. இது விதிமீறலாகும் என்ற விஷயம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனை கேட்ட நீதிபதிகள், ‛‛இந்த விவகாரத்தில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் ( AICTE) தான் நடவடிக்கை எடுக்க முடியும் எனக்கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். இதன்மூலம் அமைச்சர் எவ வேலுவின் மனைவி தலைவராக உள்ள பொறியியல் கல்லூரியின் உரிமத்தை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications