ஆபாச வீடியோ இருக்கு.. தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கில் பாஜக தலைவரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்திற்கு மிரட்டல் விடுத்த வழக்கில் பாஜக பிரமுகர் அகோரத்தின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது
மிகவும் பழமையான மயிலாடுதுறை தர்மபுரம் ஆதினத்தின் 27 வது தலைமை மடாதிபதி இருப்பவர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார். இவரது சகோதரரும் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவஸ்தானத்தின் கணக்காளருமான விருத்தகிரி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் சில நாட்களுக்கு முன்பு பரபரப்பான புகார் அளித்தார்.

இந்த புகார் என்பது கடந்த பிப்ரவரி 21 ம் தேதி அளிக்கப்பட்டது. அதில் தலைமை மடாதிபதி தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாக கூறி பணம் கேட்டு மிரட்டுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தருமபுரம் ஆதீனத்தை வினோத், செந்தில், விக்னேஷ் ஆகியோர் மிரட்டினர். அதற்கு செம்பனார்கோவிலை சேர்ந்த தனியார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ க தலைவர் அகோரம், மதுரையை சேர்ந்த வக்கீல் ஜெயச்சந்திரன், செம்பனார்கோவில் ஆகியோர் தூண்டுதலாக இருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் ஆடுதுறை வினோத்(32), சீர்காழி ஒன்றிய பாஜக முன்னாள் தலைவர் திருவெண்காடு விக்னேஷ், செம்பனார்கோவில் கலைமகள் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு(39), தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா நெய்குப்பை கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் (28) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ள மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரத்தையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் தான் அகோரம் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் காவல்துறை, அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கில் தன்னை சேர்த்துள்ளாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதுவரை தான் எங்கும் தலைமறைவாகவில்லை என்றும் முன் ஜாமீன் அளித்தால் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை பின்பற்ற தயாராக இருப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி கார்த்திகேயன், கட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியும், விசாரணை நிலையில் இருப்பதையும் சுட்டிக்காட்டி மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரத்தின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications