இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ஐகோர்ட் குட்டு! கணக்கை முடக்க நீங்க போலீஸா? ஐஓபி க்கு ரூ.50000 அபராதம்
சென்னை: வங்கிக் கணக்குகளைத் தன்னிச்சையாக முடக்கும் வங்கிகளின் அதிகாரப்போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அலகாபாத் உயர் நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. விசாரணை அமைப்புகளை போல செயல்பட வங்கிகளுக்கு அதிகாரம் இல்லை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு அபராதம் விதித்து அதிரடி காட்டினார்கள்.. கஸ்டமர்களின் உரிமையைப் பாதுகாக்கும் இந்த வழக்கின் முழு விவரங்களை இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
வங்கி கணக்குகளை தன்னிச்சையாக முடக்கும் வங்கிகளின் போக்கு சமீபகாலமாகவே அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வாடிக்கையாளர் ஒருவரின் கணக்கை முறையான காரணமின்றி முடக்கிய இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு (ஐ.ஓ.பி) அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளை 50,000 ரூபாய் அபராதம் விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தீர்ப்பு வங்கித் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம், லக்னோவில் உள்ள அலகாபாத் உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.
அந்த மனுவில், கடந்த ஜனவரி 16ம் தேதி தங்கள் நிறுவனத்தின் வங்கிக் கணக்கிற்கு ஆர்.டி.ஜி.எஸ் முறைப்படி 23 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தது. ஆனால், இந்த பணப் பரிவர்த்தனை சந்தேகத்திற்கு இடமானதாக இருக்கிறது என்று கூறி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அந்த நிறுவனத்தின் கணக்கை உடனடியாக முடக்கியது. நிறுவனம் தரப்பில் நியாயம் கேட்டும் வங்கி நிர்வாகம் செவிசாய்க்காத நிலையில், பாதிக்கப்பட்ட நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது.
இந்த மனு நீதிபதிகள் சேகர் பி.ஷரப் மற்றும் அவதேஷ் குமார் சவுத்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "வங்கி கணக்கு தொடங்கிய போதே 5.76 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது, ஒரு பெரிய தொகை பரிமாற்றம் நடந்தால் அது வணிக ரீதியானதாக இருக்காது என வங்கி தன்னிச்சையாக முடிவு செய்வது தவறு" என்று வாதிட்டார்.
ஐஓபி - வங்கிக் கணக்கு முடக்கம்
2 தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வங்கி நிர்வாகத்தின் செயல்பாட்டை கடுமையாகக் கண்டித்தனர்... நீதிபதிகள் தங்கள் உத்தரவில், "வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஒரு வாடிக்கையாளர் சந்தேகத்திற்கு இடமானவர் என்று முத்திரை குத்துவதற்கு வங்கி நிர்வாகம் ஒன்றும் சி.பி.ஐ அல்லது அமலாக்கத்துறை போன்ற புலனாய்வு அமைப்பு கிடையாது. முறையான முகாந்திரம் அல்லது தகுந்த காரணங்கள் இல்லாமல் ஒருவரது வங்கிக் கணக்கை முடக்குவது என்பது அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும்.
காவல்துறையோ அல்லது பிற அரசு விசாரணை அமைப்புகளோ உத்தரவிடாத வரை, வங்கி நிர்வாகம் தானாக முன்வந்து கணக்குகளை முடக்குவதற்கு எந்த அதிகாரமும் இல்லை" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
மேலும், தகுந்த காரணமின்றி வங்கி கணக்குகளை முடக்கும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினார்கள்.. இத்தகைய தன்னிச்சையான நடவடிக்கைகளால் ஒரு நிறுவனத்தின் வணிக நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கிவிடும் என்றும், நீண்ட காலமாக நற்பெயர் பெற்ற வர்த்தக நிறுவனங்களின் நிதி நிலைத்தன்மை சீர்குலையும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.
50000 ரூபாய் இழப்பீடு
இறுதியாக, கஸ்டமரை அலைக்கழித்ததற்காகவும், சட்டவிரோதமாக கணக்கை முடக்கியதற்காகவும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளருக்கு 50,000 ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
வங்கிகள் வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்யும் அமைப்புகளாக இருக்க வேண்டுமே தவிர, அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு விசாரணை அமைப்புகளைப் போலச் செயல்படக் கூடாது என்பதை இந்த தீர்ப்பு உரக்கச் சொல்லியுள்ளது. இனி வரும் காலங்களில் வங்கிகள் வாடிக்கையாளர் கணக்குகளைக் கையாள்வதில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதற்கு இது ஒரு பாடமாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications