தலைவரான நீங்கள் தான் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்.. தவெக விஜய்க்கு சென்னை ஐகோர்ட் காட்டம்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொள்ளும் பிரச்சாரத்துக்கு காவல்துறை அனுமதி வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. "திருச்சி தவெக கூட்டத்தின்போது சேதப்படுத்திய பொது சொத்துக்களுக்கான இழப்பீட்டை வசூலிக்காவிட்டால் நீதிமன்றம் தலையிடும்." என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் இறங்கியுள்ளன. அந்தவகையில் தவெக தலைவர் விஜய்யும் அண்மையில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். ஏற்கனவே விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் மாநாடுகளை நடத்தி முடித்துள்ள தவகெ தலைவர் விஜய், தற்போது மக்கள் சந்திப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

விஜய் பிரச்சாரம்
தவெக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க போவதாகவும் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அறிவிப்பு முன்தாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி சனிக்கிழமை திருச்சி மற்றும் அரியலூர் பகுதிகளில் விஜய் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி திருச்சி மற்றும் அரியலூரில் மட்டும் தான் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். தொண்டர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் திட்டமிட்டபடி பெரம்பலூர் மக்களை சந்திக்க முடியாமல் போனது. இனி நாளை மறுநாள், நகை, மயிலாடுதுறையில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார் விஜய்.
ஐகோர்ட்டில் வழக்கு
தவெக பிரச்சாரம் மற்றும் மாநாடுகளுக்கு மட்டும் காவல்துறை பல்வேறு கடுமையான நிபந்தனைகளையும், கட்டுப்பாடுகளையும் விதிப்பதாக தவெக கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், இதுதொடர்பாக தவெக துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், "தவெக தலைவர் விஜய்யின் திருச்சி பிரச்சாரக் கூட்டத்திற்கு கடுமையான நிபந்தனைகளுக்கு பிறகே காவல்துறை அனுமதி வழங்கியது. மற்ற அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம், பேரணிகளுக்கு கடுமையான நிபந்தனைகள் ஏதும் விதிக்கப்படுவதில்லை. தமிழக வெற்றி கழகத்திற்கு மட்டுமே பாரபட்சமான நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. கடைசி நேரத்தில் கடும் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது.
போலீசாருக்கு உத்தரவிட கோரிக்கை
சிறை மரணத்துக்கு எதிராக சென்னையில் தவெக சார்பில் நடந்த தர்ணா, கோவையில் நடைபெற்ற வாக்குச்சாவடி பூத் ஏஜெண்ட் கூட்டம், விக்கிரவாண்டி, மதுரையில் நடைபெற்ற மாநில மாநாடுகள் என எதிலும் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை. மேலும், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் அமைதியான முறையிலும் அவை நடத்தப்பட்டன.
டிசம்பர் 20 ஆம் வரை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் விஜய் அரசியல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்கு அனுமதி வழங்க காவல்துறையிடம் மனு அளித்துள்ளோம். மற்ற அரசியல் கட்சிகளுக்கு அளிக்கும் நிபந்தனைகளை போலவே, தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சார கூட்டத்துக்கும் தமிழகம் முழுவதும் அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்.
இன்று விசாரணை
இதுதொடர்பாக செப்டம்பர் 9 மற்றும் 15ஆம் தேதிகளில் காவல்துறை இயக்குநருக்கு தவெக சார்பில் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. ஆனால், அதன் மீது எந்தவொரு பதிலும் இதுவரை வரவில்லை. எனவே, எங்கள் மனுவை பரிசீலித்து உரிய அறிவுறுத்தலை போலீசாருக்கு வழங்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை அவசர வழக்காக நேற்று மதியம் விசாரிக்கும்படி நீதிபதி என் சதீஷ்குமார் முன்பு முறையிடப்பட்டது. ஆனால் நீதிபதி, அவசரமாக விசாரிக்க மறுத்துவிட்டார். இந்த வழக்கை நாளை, அதாவது இன்று விசாரிப்பதாகத் தெரிவித்தார். அதன்படி, தவெக தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
நீதிமன்றம் காட்டம்
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், "தலைவராக இருக்கும் நீங்கள் தான் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். உயரமான இடங்களில் ஏறி நின்று அசம்பாவிதம் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது? தொண்டர்களை கட்சி தலைவர் ஒழுங்குபடுத்த வேண்டாமா? திருச்சி தவெக கூட்டத்தின்போது சேதப்படுத்திய பொது சொத்துக்களுக்கான இழப்பீட்டை வசூலிக்காவிட்டால் நீதிமன்றம் தலையிடும்." என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும் வகையில் விதிகளை வகுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் பொதுச் சொத்தை சேதப்படுத்தினால் அதற்கான இழப்பீட்டை வசூலிக்க விதிகளை வகுக்க உத்தரவிடப்பட்டது. பின்னர் வழக்கு விசாரணை வரும் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications