கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு!
சென்னை: புதியதாக பொறுப்பேற்று இருக்கக்கூடிய தவெக அரசு, மின்வெட்டு பிரச்சனையை எதிர்கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று சென்னை அம்பத்தூரில் திமுகவின் பொதுக்கூட்டம் நடந்துக்கொண்டிருந்தபோது, திடீரென கரண்ட் கட் ஆனதால், பொதுக்கூட்டம் ஆர்பாட்டமாக மாறியது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.
மின்வெட்டு பிரச்சனை தற்போது தவெக அரசுக்கு தலைவலியாக மாறியிருக்கிறது. குறிப்பாக புறநகர் சென்னையில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் மக்கள் தன் எழுச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டிருக்கின்றனர்.

குறிப்பாக அம்பத்தூர், ஆவடி போன்ற பகுதியில் இரவு நேரங்களில் ஏற்படும் மின்வெட்டு, 4 மணி நேரம் வரை நீடிப்பதாகவும் இதனால் நிம்மதியாக தூங்க முடியவில்லை என்றும் மக்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர். இப்படி இருக்கையில் நேற்று இரவு அம்பத்தூரில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அம்பத்தூர் தெற்கு பகுதி தி.மு.க சார்பில் கலைஞரின் 103வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது.
இதை சற்றும் எதிர்பாராத திமுகவினர், தவெக தலைமையிலான அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். பொதுக்கூட்ட மேடையானது போராட்ட களமாக மாறியது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.
தவெக எதிர்கொள்ளும் விமர்சனம்
மின்வெட்டு பிரச்சனைதான் தற்போது தவெக அரசுக்கு பெரிய சிக்கலாக இருக்கிறது. திமுக ஆட்சிக்காலத்திலும் மின்வெட்டு பிரச்சனை இருந்தது. ஆனால், இந்த அளவுக்கு சீரியஸாக இல்லை.
மின்சார உற்பத்தி போதிய அளவுக்கு இருக்கிறது என்று அமைச்சர்கள் கூறுகிறார்கள். ஆனால், மின்வெட்டு பிரச்சனையால் மக்கள் கொந்தளித்துள்ளார். அப்படியெனில் எங்கு பிரச்சனை என்று மக்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் மின் கம்பங்கள், இணைப்பு பழுதுபார்க்கும் பணிகள் நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு தேர்தல் காரணமாக இப்பணிகள் போதிய அளவு நடைபெறவில்லை என்றும், மின்வாரியத்தில் உள்ள ஆட்கள் பற்றாக்குறையும் இந்த பிரச்சனைக்கு காரணம் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications