திருவண்ணாமலையில் ஹிஜாப் அணியத் தடை! திமுக அரசுக்கு அவப்பெயர் உருவாக்க முயற்சி! -மக்கள் ஒற்றுமை மேடை
சென்னை: திருவண்ணாமலையில் ஹிஜாப் அணிந்த மாணவியை தேர்வெழுத விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் திமுக அரசுக்கு கெட்ட பெயரை உருவாக்க வேண்டும் என்று இப்படிச் சில தனியார் பள்ளி நிர்வாகிகள் நடக்க கூடும் என்றும் அவர்களைக் கண்டித்து வைப்பது அரசின் கடமை எனவும் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அருணன் விடுத்துள்ள பதிவு வருமாறு;

''திருவண்ணாமலையை அடுத்த சோமாசிபாடி கிராமத்தில் உள்ள அண்ணாமலையார் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் தட்ஷின் பாரத் ஹிந்தி பிரச்சார சபாவின் ஹிந்தி தேர்வுகள் நடந்தன. தமிழ்நாட்டில் ஹிந்தி படிக்கத் தடையுள்ளது எனும் ஒன்றிய நிதி அமைச்சரின் பேச்சு பச்சைப் பொய் என்பதை இதன் மூலம் உணரலாம். விரும்புகிறவர்கள் ஹிந்தி படிக்க இங்கு வசதி உள்ளது என்பதே உண்மை.
அப்படி ஹிந்தி படித்து தேர்வு எழுதச் சென்ற பெண்ணை அந்தப் பள்ளி நிர்வாகம் தடுத்த அநியாயம் நடந்துள்ளது. அதற்கான காரணம் அந்த முஸ்லிம் பெண் ஹிஜாப் அணிந்திருந்தார் என்பது. கேள்வித்தாள் பெற்று தேர்வு எழுதிக் கொண்டிருந்த ஷபானா எனும் அந்தப் பெண்ணை ஹிஜாபை கழட்டிவிட்டு வருமாறு தேர்வு கண்காணிப்பாளரும், பள்ளி முதல்வரும் கட்டாயப் படுத்தியிருக்கிறார்கள்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளானவர் தேர்வு எழுதாமல் சென்றிருக்கிறார். அந்தப் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வன்மையாகக் கண்டிக்கிறது. எத்தகைய உடை அணிய வேண்டும் என்பது அவரவர் விருப்பம். இதில் பள்ளி நிர்வாகம் தலையிட எவ்வித உரிமையும் கிடையாது. ஆர்எஸ்எஸ் பரிவாரத்தின் மதவெறுப்புச் சிந்தனை இந்தப் பள்ளி நிர்வாகத்தின் சிந்தனைக்குள் புகுந்திருக்கிறது. அதன் காரணமாகவே இத்தகைய நடவடிக்கையை அது எடுத்திருக்கிறது. இந்த அடாவடிச் செயலுக்காக அதன் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேடை வலியுறுத்துகிறது.
வகுப்புகளில் மட்டுமல்லாது தேர்வுகளிலும் ஹிஜாப் அணிவதைத் தடுக்க கூடாது என்று அனைத்துப் பள்ளிகளுக்கும் தமிழ்நாடு அரசு கறாரான சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்; அதை மீறுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் முஸ்லிம் பெண்களின் கல்வி மோசமாக பாதிக்கப்படும். கர்நாடகாவில் பாஜக ஆட்சி இருந்தபோது என்ன நடந்தது என்பதை அறிவோம். தமிழ்நாட்டில் திமுக அரசுக்கு கெட்ட பெயரை உருவாக்க வேண்டும் என்று இப்படிச் சில தனியார் பள்ளி நிர்வாகிகள் நடக்க கூடும். அவர்களைக் கண்டித்து வைப்பது அரசின் கடமை என்பதைச் சுட்டிக்காட்டுகிறது மக்கள் ஒற்றுமை மேடை.''












Click it and Unblock the Notifications