90 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் தொடங்கிய முதலாவது இந்தி திணிப்பு எதிர்ப்பு போர்-எச்சரித்த ஸ்டாலின்!
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற அலுவல் ஆய்வுக் குழுவானது இந்தியை திணிக்கும் வகையிலான பல்வேறு பரிந்துரைகளை வழங்கி உள்ளது. இந்தி பேசாத மாநிலங்களில் இது கடும் எதிர்ப்பை உருவாக்கி உள்ளது.
அமித்ஷா குழுவின் பரிந்துரையை கடுமையாக எதிர்த்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தியத் துணைக் கண்டத்தின் பெருமையும் வலிமையும் பன்முகத்தன்மைதான். பலவித மதங்கள், மொழிகள், பண்பாடுகள் கொண்ட மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருவதை எப்படியாவது சிதைத்துவிட்டு 'ஒரே நாடு' என்ற பெயரில் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணவு, ஒரே கலாசாரம் என நிறுவிட வேண்டும் என்று ஒன்றிய பா.ஜ.க அரசு தொடர்ந்து செயல்படுவது, இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிக்கக் கூடியதாகும் என கூறியிருந்தார்.

இன்னொரு மொழிப் போரா?
மேலும் வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மை கொண்ட இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளைச் சரிசமமாக நடத்திட வேண்டும். அனைத்து மொழிகளும் ஒன்றிய அரசின் அலுவல் மொழி என்ற நிலையை எட்டிட வேண்டும். அதற்கு நேர் எதிரான மூர்க்கத்தனமான நிலைப்பாட்டை எடுத்து, இந்தியைக் கட்டாயமாக்க முயன்று, இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம். எங்கள் தாய்மொழி உணர்வு எனும் நெருப்பை உரசிப் பார்த்திட வேண்டாம். இந்தியைக் கட்டாயமாக்குவதைக் கைவிட்டு, இந்திய ஒற்றுமைச் சுடரைக் காத்திட வேண்டும் என மாண்புமிகு பிரதமர் அவர்கள் தலைமையிலான ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் எனவும் முதல்வர் ஸ்டாலின் அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.

முதல் இந்தி எதிர்ப்பு போர்
இன்றைக்குத்தான் என்றில்லை... 90 ஆண்டுகளுக்கு முன்னரே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே இந்தியை திணிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போதே தமிழர்கள் பெருங்கோபம் கொண்டு இந்தி திணிப்பு நடவடிக்கையை தடுத்தனர்.வரலாற்றின் பக்கங்களில் முதலாவது இந்தி ஆதிக்க எதிர்ப்பு போர் என இடம்பெற்ற 1938-வது ஆண்டைய தாய்மொழி பாதுகாப்புக்காக தமிழர்கள் நடத்திய யுத்தத்தின் வரலாறு இது: 1930களின் தொடக்கத்தில் இருந்தே இந்தி திணிப்பு முயற்சிகள் அன்றைய சென்னை மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டன. அப்போது தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சியின் தலைவர்கள் மற்றும் தமிழாய்ந்த தமிழறிஞர்கள் மறைமலை அடிகள், கி.ஆ.பெ.விசுவநாதம் என பலரும் இந்தி திணிப்புக்கு எதிராக எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.

பெருந்திரளாக திரண்ட பெண்கள்- தாளமுத்து நடராசன்
இந்தி ஆதிக்க எதிர்ப்பு மாநாடுகள் நடத்தப்பட்டன. 1938-ம் ஆண்டு ஏப்ரல் 21-ல் 125 உயர்நிலைப் பள்ளிகளில் இந்தி கட்டாயப்பாடம் என அரசாணையை வெளியிட்டார் அப்போதைய முதலமைச்சர் ராஜாஜி. இதுதான் முதலாவது இந்தி எதிர்ப்பு போர் வெடிக்கவும் அடிப்படையாக அமைந்தது. ராஜாஜியின் உத்தரவால் தமிழகமே கொந்தளித்தது. இப்போராட்டத்தில் பெண்களும் சமளவில் பங்கேற்று சிறைக்கு சென்றனர். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் என எண்ணற்ற பெண்கள் கைது செய்யப்பட்டனர். இந்திக்கு எதிரான மகளிர் மாநாடுகள் நடத்தப்பட்டன.இந்த யுத்த களத்தில்தான் சிறையிலேயே தாளமுத்து, நடராசன் என்கிற போராளிகள் மாண்டு போயினர். தாய்மொழி காக்க தன்னுயிரையே ஈந்த முதலாவது மொழிப்போர் மறவர்கள் இவர்கள்தான்.

தமிழர் பெரும் படை
திருச்சியில் இருந்து 1938-ம் ஆண்டு 100க்கும் அதிகமானாரோர் தமிழர் பெரும்படை என்ற பெயரில் நகரதூதன் இதழாசிரியர் மணவை ரெ. திருமலைசாமி தலைமையில் சென்னையை நோக்கி இந்தி திணிப்புக்கு எதிரான பிரசாரமாக நடைபயணம் மேற்கொண்டனர். மொத்தம் 42 நாட்கள் நடைபயணமாக 234 ஊர்கள் வழியாக சென்னையை இந்த தமிழர் பெரும் படை வந்தடைந்தது.இந்த தமிழர் பெரும்படையில் பங்கேற்ற சிலர் நோயால் வழியிலேயே மாண்டு போயினர். காட்டாறுகளை கடந்துதான் இந்த பெரும்படை சென்னைக்கு நோக்கி பயணித்தது. அப்போது சென்னையில் தமிழர் பெரும்படைக்கு ஆதரவாக மீனாம்பால் சிவராஜ் தலைமையில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. சென்னைக்குள் நுழைந்த தமிழர் பெரும்படையை மறைமலை அடிகளார் வரவேற்றார். இப்பெரும்படையின் பயணத்தின் முடிவாக சென்னை மெரினா கடற்கரையில் பிர்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு தமிழருக்கே முழக்கம்!
அந்த பொதுக்கூட்டத்தில்தான் தந்தை பெரியார் தமிழ்நாடு தமிழருக்கே என்கிற தனித்தமிழ்நாடு முழக்கத்தை எழுப்பினார். இதையடுத்து பெரும் யுத்தமாகவே மாறிப் போனது இந்தி எதிர்ப்பு போராட்டங்கள். இதனால் இந்தியை திணிக்கும் நடவடிக்கைகள் கைவிடப்பட்டன. இதுதான் தமிழர்கள் தொடுத்த முதலாவது தாய்மொழிக்கான யுத்தம்! இதன் பின்னர் 1940களில் 1950களில் 1960களில் என மொழிப்போர் எனும் மொழி காக்கும் யுத்தம் இன்று வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதையே முதல்வர் ஸ்டாலின் அறிக்கை சுட்டிக் காட்டி உள்ளது.












Click it and Unblock the Notifications