பாஜகவுக்கு அடி.. ஒன்று கூடிய தாக்கரே குடும்பம்! அடித்து ஆடிய மகாராஷ்டிரா.. ஸ்டாலின் கொடுத்த வார்னிங்
சென்னை: இந்தியை மூன்றாவது மொழியாக கற்பிப்பது தொடர்பாக மகாராஷ்டிராவில் போராட்டம் பிடித்ததை தொடர்ந்து அந்தத் திட்டம் கைவிடப்பட்டது இந்த நிலையில் தமிழ்நாடு முன்னெடுத்த இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் மாநில எல்லைகளைக் கடந்து சூறாவளியாக சுழன்று அடித்து வருவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்
மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கும் நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை இந்தி பொதுவான மூன்றாவது மொழியாக இருக்கும் எனவும், மூன்றாவது மொழியாக அதனை கற்பிக்க வேண்டுமென அரசாணையை மாநில அரசு வெளியிட்டது.
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்தன. தொடர்ந்து இன்றைய தினம் பிரம்மாண்ட பேரணி நடைபெறும் என நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே அழைப்பு விடுத்தார். அந்தக் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே கலந்து கொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் பிற அரசியல் கட்சிகளும் கலந்து கொள்ளும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மாநில அரசு தனது முடிவில் இருந்து பின் வாங்கியது. மேலும் முன்மொழிக் கொள்கை தொடர்பான அரசாணை ரத்து செய்யப்பட்டது. இதை அடுத்து இன்று போராட்டத்தின் வெற்றியை குறிக்கும் வகையில் பிரம்மாண்ட மாநாடு நடைபெற்றது. இதில் ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கிடையே தமிழ்நாட்டில் தொடங்கிய இந்து திணிப்பு போராட்டம் மாநில எல்லைகளைக் கடந்து சூறாவளியாக சுழன்று அடிப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்," இந்தித் திணிப்பை முறியடிக்க திராவிட முன்னேற்றக் கழகமும், தமிழ்நாட்டு மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்திவரும் மொழி உரிமைப் போர், மாநில எல்லைகளைக் கடந்து இப்போது மராட்டியத்தில் போராட்டச் சூறாவளியாகச் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டுப் பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இந்தியைக் கற்பித்தால்தான் நிதியை ஒதுக்குவோம் என்று சட்டத்துக்குப் புறம்பாகவும் அராஜகமாகவும் நடந்துகொள்ளும் பாஜக, தாங்கள் ஆட்சி செய்யும் மகாராஷ்டிராவில் மக்கள் எழுச்சிக்கு அஞ்சி இரண்டாம் முறையாகப் பின்வாங்கி இருக்கிறார்கள். இந்தித் திணிப்புக்கு எதிராகச் சகோதரர் உத்தவ் தாக்கரே அவர்கள் தலைமையில் இன்று மும்பையில் நடந்த வெற்றிக் கொண்டாட்டப் பேரணியின் எழுச்சியும், உரை வீச்சும் மிகுந்த உற்சாகம் தருகிறது.
"உத்தர பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் கற்பிக்கப்படும் மூன்றாம் மொழி என்ன?" என்றும், "இந்தி பேசும் மாநிலங்கள் பின்தங்கி இருக்கின்றன - இந்தி பேசாத முன்னேறிய மாநிலங்களின் மக்கள் மீது ஏன் இந்தியைத் திணிக்கிறீர்கள்?" என்றும் திரு.ராஜ் தாக்கரே அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, இந்தியையும் சமஸ்கிருதத்தையும் வளர்ப்பதையே முழுநேர முன்னுரிமையாக வைத்திருக்கிற ஒன்றிய அரசிடம் எந்த பதிலும் இருக்காது என்பதை நன்றாக அறிவேன்.
மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி - சமஸ்கிருதத்தைத் திணிக்கும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஒருங்கிணைந்த கல்வித் திட்ட (சமக்ர சிக்ஷா அபியான்) நிதி ரூ.2,152 கோடியை விடுவிப்போம் என்று தமிழ்நாட்டைப் பழிவாங்கும் போக்கை ஒன்றிய அரசு மாற்றிக் கொள்ளுமா? தமிழ்நாட்டுப் பள்ளிக் குழந்தைகளின் கல்விக்காகச் சட்டப்பூர்வமாக வழங்க வேண்டிய நிதியை உடனே விடுவிக்குமா?
இந்தி ஆதிக்கத்துக்கு எதிராகத் தமிழ்நாட்டு மக்கள் நடத்திவரும் போராட்டம் உணர்வுமயமானது மட்டுமல்ல, அறிவுப்பூர்வமானது! தர்க்கப்பூர்வமானது! இந்தியாவின் பன்மைக் கலாசாரத்தை பாதுகாப்பதற்கானது! வெறுப்பின்பாற்பட்டது அல்ல! இந்தித் திணிப்பால் ஏராளமான இந்திய மொழிகள் அழிந்த வரலாற்றை அறியாமலும், இந்தியாவை இந்தி நாடாக்கும் செயல்திட்டத்தைப் புரிந்துகொள்ளாமலும், "இந்தி படித்தால் வேலை கிடைக்கும்" என்ற பசப்பு வார்த்தைகளைக் கிளிப்பிள்ளைகளைப் போல ஒப்பித்துக் கொண்டிருக்கும் இங்குள்ள அப்பாவிகள் சிலர், இனியாவது திருந்த வேண்டும். மராட்டியத்தின் எழுச்சி அவர்களின் அறிவுக் கண்களைத் திறக்கும்!
தமிழுக்கு நிதி ஒதுக்கீட்டில் ஓரவஞ்சனை, கீழடி நாகரிகத்தை அங்கீகரிக்க மறுக்கும் ஆணவம் நீடிக்க விட மாட்டோம். தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பாஜக செய்துவரும் துரோகத்துக்கு பரிகாரம் தேட வேண்டும். இல்லையேல், அவர்களுக்கும் அவர்களது புதிய கூட்டாளிகளுக்கும் தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்! ஒன்றிணைவோம் வா! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications