ONEINDIA EXCLUSIVE: பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு! சுகி.சிவம் வந்தால் கருப்புக் கொடி..இமக ஆவேசம்
சென்னை: திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆகஸ்ட் 24, 25ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது. இந்நிலையில் இந்து மதம் குறித்தும், குல தெய்வ வழிபாடு குறித்து தவறாக பேசி வரும் பேச்சாளர் சுகி.சிவம் மாநாட்டுக்கு வந்தால் இந்து மக்கள் கட்சி சார்பில் கருப்பு கொடி காட்டுவோம் எனவும், முருகன் சிலை குறித்து பேசிய அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தர்மா கூறியுள்ளார்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் அனைத்து உலோக முத்தமிழ் முருகன் மாநாடு வருகின்ற 24 மற்றும் 25ஆம் தேதி அருள்மிகு பழனி ஆண்டவர் கலை கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் ஐந்து ஆய்வரங்கங்களில், 1300 பேர் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க உள்ளனர். இதில் வெளிநாட்டினர் 39 பேர் ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்கின்றனர். இது தவிர 30க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.
மேலும் 4 நீதி அரசர்கள், 15 ஆதீனங்கள், 30 ஆன்மீக சொற்பொழிவாளர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டின் விழா மலர் மற்றும் ஆய்வு கட்டுரை மலர் என இரண்டு மலர்களாக வெளியிடப்படவுள்ளது. குறிப்பாக ஆன்மீக பேச்சாளரான சுகி.சிவம் கலந்து கொண்டு ஆன்மீக உரை ஆற்றவுள்ளார். இந்நிலையில் இந்து மதம் குறித்தும், குல தெய்வ வழிபாடு குறித்து தவறாக பேசி வரும் பேச்சாளர் சுகி.சிவம் மாநாட்டுக்கு வந்தால் இந்து மக்கள் கட்சி சார்பில் கருப்பு கொடி காட்டுவோம் என அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தர்மா கூறியுள்ளார். இதுதொடர்பாக ஒன் இந்தியா தமிழிடம் பேசிய அவர்,” திமுக தலைமையிலான ஆட்சி திராவிட மாடல் என்பதைப் போல, இந்துக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. குறிப்பாக ஆன்மீக பேச்சாளர் என தன்னை கூறிக் கொள்ளும் சுகி.சிவம் தொடர்ந்து இந்து மக்களுக்கு எதிராகவே பேசி வருகிறார்.
இந்து மதம் குறித்தும் குலதெய்வ வழிபாடு குறித்தும் தவறாக பேசி வருகிறார். இந்துக்களை வைத்து இந்துக்களை தவறாக சித்தரிக்க வேண்டும் என்பதற்காக சில பேச்சாளர்களை திமுக விலைக்கு வாங்கி பேச வைக்கிறது. அப்படி ஒருவர் தான் சுகி.சிவம். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட பெரியார் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு குலதெய்வ வழிபாடு குறித்து அவதூறாக பேசுகிறார். மேலும் பழனி கோயிலுக்கு இந்துக்கள் அல்லாதோர் வரக் கூடாது என நீதிமன்றமே தீர்ப்பளித்தது. ஆனால் ஏன் செல்லக் கூடாது என சுகிசிவம் கேள்வி எழுப்புகிறார். நாங்கள் மசூதிகளுக்கும் சர்ச்சுகளுக்கும் காவி உடை கொடியுடன் சென்றால் சுகி.சிவம் ஏற்றுக் கொள்வாரா?
இப்படியாக அமைதியாக இருக்கும் தமிழகத்தில் மதக் கலவரங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற வகையிலே சுகி.சிவம் பேசி வருகிறார். திமுக ஆட்சியில் இருந்தாலும் அதிமுக ஆட்சியாகவே இது இருக்கிறது. காரணம் சேகர் பாபு, கேகேஎஸ்எஸ்ஆர் உள்ளிட்ட 12 பேர் அதிமுகவில் இருந்து சென்றவர்கள் தான். அதனால் அதிமுக ஆட்சிக் காலத்தை போல திமுக ஆட்சிகளும் இந்துக்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
பல கோயில்களின் இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. பாடிகாட் முனீஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல கோயில்கள் மிகவும் சிக்கலை சந்தித்து வருகிறது. திண்டுக்கல் மலைக்கோட்டையில் கூட கோயில் இருக்கிறது. ஆனால் சுவாமிகள் சிலை இல்லை. இப்படி பல பிரச்சனைகள் இருக்கும்போது இந்து மக்களின் கவனத்தை திசைத் திருப்பவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது. குறிப்பாக சுகிசிவம் சாய்பாபா ஒரு இஸ்லாமியர் என பேசுகிறார். அவர் யாராக இருந்தாலும் நாங்கள் கடவுளாக ஏற்றுக் கொண்டுள்ளோம்.
குலதெய்வ வழிபாட்டை தவறாக சித்தரிக்கிறார். மோடி ஆட்சியை பற்றி தவறாக பேசுகிறார். பழனி மலை மேல் இருக்கும் சிலை முருகனின் சிலை அல்ல போகரின் சிலை என்கிறார். ஆனால் போகருக்கு அங்கு ஜீவசமாதி இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இருக்கும் வரலாற்றை திரித்து பேசி வருபவர் தான் சுகி சிவம். அப்படிப்பட்ட ஒருவரை முருகன் மாநாட்டுக்கே வரவழைத்து பேசுவது இந்துக்களின் மனதை புண்படுத்துவது போல் இருக்கிறது. எனவே தனது பேச்சுக்களுக்கு சுகி.சிவம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் முருகர் மாநாட்டில் அவர் பேசும்போது பக்தர்களுடன் இணைந்து கருப்புக்கொடி காட்டி அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்போம்" என்றார்.












Click it and Unblock the Notifications