சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

“தகைசால் தமிழராய்” தமிழ்நாட்டை தலைநிமிர வைத்த தோழர் - யார் இந்த நல்லக்கண்ணு?

Google Oneindia Tamil News

சென்னை: இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முதுபெரும் தலைவரும், இந்தியாவின் முன்னோடி அரசியல்வாதி தலைவரும், தலைசிறந்த பொதுவுடைமையாளருமான ஆர்.நல்லக்கண்ணுவுக்கு தலைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. அவரது வாழ்க்கை மற்றும் அரசியல் பயணம் குறித்து இப்போது காண்போம்..

"எங்கள் ஊரை காப்பாற்றிய கடவுள் என்று அவரை சொல்ல வேண்டும். அவர்தான் இந்த ஊரையே உருப்படியாக்கியவர். எல்லோரையும் ஒன்று என்றே அவர் நினைப்பார். நாங்கள் சாகும் வரை அவரை மறக்க மாட்டோம். இந்த சுற்று வட்டாரமே இன்று சாப்பிடுகிறது என்றால் அதற்கு அவர் தான் காரணம்." இது தூத்துக்குடி, திருநெல்வேலி சுற்றுவட்டாரத்தில் உள்ள பல தரப்பு மக்கள் கூறிய வார்த்தைகள்.

இவர்கள் இப்படி கடவுளுக்கு நிகராக போற்றிப் புகழும் அந்த நபர்தான் தோழர் நல்லக்கண்ணு. 1925 ஆம் ஆண்டு. தேசிய அளவில் இந்துத்துவம், சனாதன கொள்கையை அடிப்படையாக கொண்டு ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. அதே ஆண்டில் சாதி ஒழிப்பு, சமூகநீதி, பொதுவுடைமை ஆகியவற்றை முன்வைத்து பெரியார் தலைமையில் தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கம் உருவானது.

கேரள என்.சி.சி.யில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை.. இங்கு கம்யூனிஸ்டு பொங்காதது ஏன்? பாஜக பிரமுகர் ட்வீட் கேரள என்.சி.சி.யில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை.. இங்கு கம்யூனிஸ்டு பொங்காதது ஏன்? பாஜக பிரமுகர் ட்வீட்

தோழர் நல்லக்கண்ணு

தோழர் நல்லக்கண்ணு

இன்று இந்த அமைப்புகளின் வழித்தோன்றல்கள்தான் பாஜக என்ற பெயரில் மத்தியிலும், திமுக என்ற பெயரில் தமிழ்நாட்டில் ஆட்சி செய்து வருகின்றன. இந்த அமைப்புகள் உருவான அதே 1925 ஆம் ஆண்டு இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்தார் நல்லக்கண்ணு. ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், பள்ளிக் காலத்திலேயே ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

 சுதந்திர போராட்ட வீரர்

சுதந்திர போராட்ட வீரர்

காங்கிரஸ் கட்சியில் இளம் வயதிலேயே சேர்ந்த நல்லக்கண்ணு இந்திய விடுதலை போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1943 ஆம் ஆண்டில் தனது 18 வது வயதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் சேர்ந்து ஆர்.நல்லக்கண்ணு தோழர் நல்லக்கண்ணுவாக மாறினார். அன்று தொடங்கிய ஒடுக்கப்பட்ட, ஏழை, தொழிலாளர், உழைக்கும் வர்க்க, விளிம்பு நிலை மக்களுக்கான நல்லக்கண்ணுவின் போராட்டம் அவரது 96 வயதிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

பசி தீர்த்த பத்திரிகையாளர்

பசி தீர்த்த பத்திரிகையாளர்

நல்லக்கண்ணு கம்யூனிஸ்டு கட்சியில் சேர்ந்த நேரத்தில் இரண்டாம் உலகப்போர் காரணமாக இந்தியாவிலும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. பத்தினிக் கோட்டம் என்ற இடத்தில் உணவை பதுக்கி வைத்திருப்பதை அறிந்த நல்லக்கண்ணு, "ஜனசக்தி" என்ற பத்திரிகையில் அதுகுறித்து எழுதி அம்பலப்படுத்தினார். இதனை அரசு அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்று ஆயிரம் நெல் மூட்டைகளை வெளியில் கொண்டு வந்தார். இது பஞ்சத்தால் பசியில் வாடிய மக்களின் மனதில் ஆழமாக பதிந்ததன் விளைவே, "இந்த சுத்து வட்டாரமே இன்று சாப்பிடுகிறது என்றால் அதற்கு நல்லக்கண்ணுதான் காரணம்" என 80 ஆண்டுகள் கடந்த பிறகும் அப்பகுதியை சேர்ந்தவர்களை சொல்வது.

ஆயுள் தண்டனை

ஆயுள் தண்டனை

தொடர்ந்து தன்னை முழு நேர மக்கள் பணியாளராக அர்ப்பணித்துக் கொண்ட நல்லக்கண்ணு சுதந்திரம் கிடைத்த பிறகு கம்யூனிஸ்டுகள் மீது இந்திய அரசு தொடுத்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் தீரத்தோடு போராடினார். இதனால் அவர் உட்பட பல தலைவர்கள் மீது ஆயுதப் புரட்சியை தூண்டியதாகவும், அரசுகளை கவிழ்க்க முயன்றதாகவும் கூறி நெல்லை சதி வழக்கு போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 1952 ஆம் ஆண்டு இந்த வழக்கில் நல்லக்கண்ணு உள்ளிட்ட தலைவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவரும் வயது வெறும் 27 மட்டுமே.

போராளி

போராளி

தொழிலாளர் போராட்டங்கள் மட்டுமின்றி பட்டியலின, சிறுபான்மை மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், சமூக நீதிக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதற்கு எதிராகவும், சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு எதிராகவும் பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் நல்லக்கண்ணு. குறிப்பாக தாமிரபரணி ஆற்றை அழித்து அதை நம்பி இருந்த மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்கி வந்த மணல் கொள்ளை கும்பலுக்கு எதிராக போராடினார். நீதிமன்றத்தில் இதற்காக தானே வாதாடி சட்டப்போராட்டம் நடத்தி வெற்றிகண்டார். தாமிரபரணியில் மணல் அள்ளுவது உயர்நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டது.

 இப்படியும் ஒரு அரசியல்வாதி

இப்படியும் ஒரு அரசியல்வாதி

இன்று பலரும் அரசியல் என்றால் தேர்தல், வாக்கு, பிரச்சாரம், சட்டமன்றம், நாடாளுமன்றம் என்று மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சுமார் 80 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வரும் நல்லக்கண்ணு இதுவரை சட்டமன்ற உறுப்பினராகவோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ இருந்தது கிடையாது. அரசியலில் தேர்தல் என்பது ஒரு பகுதிதான். சட்டமன்றம், நாடாளுமன்றத்துக்கு இணையாக மக்கள் மன்றம் என்ற ஒன்று உள்ளது என்பதை ஆழமாக நம்பினார் நல்லக்கண்ணு. தனது தீரமிக்க போராட்டங்களாலேயே இன்று வரை அவர் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

மக்கள் மன்றம்

மக்கள் மன்றம்

அரசியலில் சில ஆண்டுகள் இருந்துவிட்டாலே சொந்த வீடு, சொந்தமாக கார் என்று செட்டில் ஆகிவிடும் நபர்களுக்கு மத்தியில் எளிமையில் சிகரமாக திகழ்ந்துகொண்டிருக்கிறார் நல்லக்கண்ணு. உண்மையான மக்கள் போராளிகளுக்கு வயது என்பது வெறும் எண் மட்டுமே என்பதற்கு நல்லக்கண்ணு ஓர் உதாரணம். இன்று வரை மக்களுக்கான பல போராட்டங்களில் அவரது முகத்தை நம்மால் காண முடியும். பெரிய போராட்டம், சிறிய போராட்டம் என்று பார்க்காமல் போராட்டத்தின் நோக்கத்தை மட்டுமே அறிந்து அதில் கலந்துகொள்ளும் மாமனிதர்.

பணத்தை விரும்பாதவர்

பணத்தை விரும்பாதவர்

மக்கள், கட்சி, அரசியல் என்றே தனது வாழ்நாளை கழித்த ஒப்பில்லா தலைவரான நல்லக்கண்ணு அவர்களின் 80 வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டி கொடுத்தது. அதை பெற்றுக்கொண்ட நல்லக்கண்ணு, அந்த நிதியை தன் சார்பாக மீண்டும் கட்சிக்கே திருப்பிக்கொடுத்தார். அதேபோல், தமிழ்நாடு அரசிடம் அம்பேத்கர் விருதை பெற்ற நல்லக்கண்ணு, அரசு வழங்கிய ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை இரண்டாக பிரித்து ஒரு பாதையை கட்சிக்கும் மீதியை விவசாய தொழிலாளர் சங்கத்துக்கும் அர்ப்பணித்தவர்.

இன்றும் கட்சி நிகழ்வில்

இன்றும் கட்சி நிகழ்வில்

விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவராக 25 ஆண்டுகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக 13 ஆண்டுகள் பதவி வகித்த நல்லக்கண்ணு, தற்போது மத்திய கமிட்டி உறுப்பினராகவும் தேசிய கட்டுப்பாட்டுக் குழுவின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இன்று (06-08-2022) திருப்பூர் தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 25 வது மாநில மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் தோழர் நல்லக்கண்ணுவும் கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு தமிழ்நாடு அரசு தலைசால் தமிழருக்கான விருதை அறிவித்தது அங்கிருந்தவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

விருதுக்கு பெருமை

விருதுக்கு பெருமை

கடந்த முறை 100 வயதை கடந்த மூத்த கம்யூனிஸ்டு தலைவர் சங்கரய்யாவுக்கு விருது வழங்கிய தமிழ்நாடு அரசு இன்று, அவரைப்போலவே தன் வாழ்க்கையை ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை உழைக்கும் வர்க்க மக்களுக்காக அர்ப்பணித்த மாபெரும் தலைவரான நல்லக்கண்ணுவுக்கு அறிவித்து இருக்கிறது. தமிழ்நாட்டிற்காகவும், தமிழன வளர்ச்சிக்காகவும் பாடுபட்டவர்களை கவுரவப்படுத்த கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட தகைசால் தமிழர் விருதின் வயது வெறும் 2 மட்டுமே. தோழர்கள் சங்கரய்யா, நல்லக்கண்ணு போன்ற மகத்தான தலைவர்கள் பெறுவதால் தகைசால் தமிழர் விருதின் மதிப்பு பெருகி இருக்கிறது.

English summary
History of Communist Party of India leader R.Nallakannu: இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முதுபெரும் தலைவரும், இந்தியாவின் முன்னோடி அரசியல்வாதி தலைவரும், தலைசிறந்த பொதுவுடைமையாளருமான ஆர்.நல்லக்கண்ணுவுக்கு தலைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. அவரது வாழ்க்கை மற்றும் அரசியல் பயணம் குறித்து இப்போது காண்போம்..
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X