முற்றிய போலீஸ் vs போக்குவரத்து துறை பிரச்சனை! இரு துறை செயலர்கள் அவசரமாக ஆலோசித்து சுமூக தீர்வு!
சென்னை: அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்க முடியாது என நடத்துநரிடம் காவலர் வாக்குவாதம் செய்ததை தொடர்ந்து காவல்துறை தரப்பில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட அரசு பேருந்துகள் மீது அபராதம் விதிக்கும் போக்கு அதிகரித்தது. இந்நிலையில் உள்துறை செயலாளர் அமுதா, போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டி ஆகியோர் இன்று ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் அரசுப் பேருந்தில் ஏறிய காவலரிடம் பயணச்சீட்டு வாங்குமாறு நடத்துநர் கேட்டதும், அதற்கு மறுப்பு தெரிவித்து, போக்குவரத்து ஊழியர்களுக்கு மட்டும் எங்கு வேண்டுமானாலும் ஏற்றி, இறக்கி விடுகிறீர்கள், நாங்களும் அரசு ஊழியர்கள் தான், டிக்கெட் எடுக்க முடியாது என காவலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியது. பின்னர் இது தொடர்பாக விளக்கம் அளித்த அரசு போக்குவரத்து கழகம், காவலர்கள் வாரண்ட் வைத்திருந்தால் மட்டுமே கட்டணமின்றி பயணிக்க முடியும் என்றும், இல்லையென்றால் கட்டாயமாகப் பயணச்சீட்டு வாங்கவேண்டும் என்றும் தெரிவித்தது.
இதையடுத்து இந்த விவகாரம் தற்போது காவல்துறைக்கும் போக்குவரத்து கழகத்துக்கும் இடையேயான மோதலாக வெடித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில், அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் மீது முறையாகச் சீருடை அணியவில்லை, சீட் பெல்ட் போடவில்லை எனப் பல்வேறு காரணங்களைக் காட்டி போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.
இதுவரை அரசுப் பேருந்துகளுக்கு எதிராக இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத நிலையில், காவலர் - நடத்துநர் இடையேயான வாக்குவாத சம்பவத்துக்குப் பிறகு காவலர்களுக்கு இலவச பயணம் கிடையாது என போக்குவரத்துக் கழகம் அறிவித்ததைத் தொடர்ந்து இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவது சலசலப்பை உண்டாக்கி உள்ளது.
காவல்துறை, பழிவாங்கும் செயலில் ஈடுபடுவதாக பொதுமக்கள் விமர்சித்து வருகின்றனர். இதே நிலை தொடர்ந்தால், இது காவல்துறைக்கும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் இடையிலான மோதலாக மாறிவிடும் ஆபத்து உள்ளது. அத்தகைய மோதல் ஏற்பட்டால் அது பொதுமக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது மட்டுமின்றி, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கையும் பாதிக்கக்கூடும். அதற்கு முன்பாக இந்த சிக்கலுக்குத் தீர்வு காணப்பட வேண்டும்.
காவலர்கள், போக்குவரத்துக் கழக பணியாளர்கள் இடையே அரசே மோதலை ஏற்படுத்தக்கூடாது. அரசுப் பேருந்துகளில் காவலர்களை இலவசமாகப் பயணிக்க அனுமதிப்பதன் மூலம் இந்த சிக்கலுக்கு மிக எளிதாகத் தீர்வு காண முடியும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.
மேலும், சட்ட விதிமீறல்களை காரணம் காண்பித்து அபராதம் விதிப்பதால் போக்குவரத்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து, தமிழக முதல்வர் இதற்கு சரியான தீர்வு அளிக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு ஊழியர்கள் சங்கம் சார்பில் கடிதம் எழுதினர்.
இந்நிலையில், காவல்துறை - போக்குவரத்துத்துறை இடையே சமரசம் ஏற்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின் பேரில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், உள்துறை செயலாளர் அமுதா, போக்குவரத்துத் துறை செயலாளர் பணீந்திர ரெட்டியுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
போக்குவரத்து கழகத்தினர் மற்றும் காவல்துறையினர் இடையே கடந்த சில நாட்களாக நடந்துவரும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில், இரு துறை செயலர்கள் இடையே இந்த ஆலோசனை இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரு துறை செயலாளர்கள் சந்திப்புக்கு பிறகு இந்த பிரச்சனைக்கு சுமூக தீர்வு காணப்பட்டதாக கூறப்படுகிறது. இரு தரப்புமே, பிரச்சனைகளை கைவிட வேண்டும் என்றும், அரசு தரப்பில் இந்த பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ஆணை வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.











Click it and Unblock the Notifications