ரயிலுக்குள் முதலிரவா? பூ அலங்காரத்துடன் படுக்கை.. புதுமண தம்பதியின் செயலால் பயணிகள் அதிர்ச்சி! வீடியோ
சென்னை: ரயிலின் முதல் வகுப்பு கூபே பெட்டியை முதலிரவு அறை போல டெக்கரேஷன் செய்து படுக்கைகளில் பூக்கள் தூவப்பட்டு இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், இடம் பெற்ற காட்சிகளில் சொகுசு ஹோட்டலின் 'ஹனிமூன் சூட்' போல பிரமாண்டமாக கூபே முழுவதும் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.
அறையின் கூரையில் சிவப்பு மற்றும் வெள்ளை நிற பலூன்களாலும், இருக்கைகளில் இதயம் போன்று ரோஜா இதழ்களாலும், அறையின் பிற பகுதிகள் மலர் மாலைகள் மற்றும் மலர்களாலும், ஏறும் படிக்கட்டுகளில் செயற்கை விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மேலும் அறையின் மேல் படுக்கையில் ''ஐ லவ் யூ'' என்ற எழுத்துக்களும் வீடியோவில் இடம் பெற்று இருந்தன.

டெக்கரேட்டரை வர வைத்து அலங்காரம்
சமூக வலைத்தளங்களில் பரவிய இந்த வீடியோ பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ரயில்வே நிர்வாகத்தை டேக் செய்து பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். இதையடுத்து, இது குறித்து விசாரணையை தொடங்கிய ரயில்வே நிர்வாகம், ரயிலின் டிக்கெட் பரிசோதகரை இடைநீக்கம் செய்துள்ளது. மகராஷ்டிரா மாநிலம் ஜல்னா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயிலின் ஏ.சி. வகுப்பு அறையில்தான் இந்த அலங்காரம் செய்யப்பட்டு இருந்ததை ரயில்வே கண்டறிந்தது.
கூபேவை புக் செய்த ஜோடி, ஆன்லைன் வழியாக பிரைவேட் டெக்கரேட்டரை வரவைத்து, ரயில் பெட்டியை அலங்காரம் செய்துள்ளனர். புதுமண தம்பதியினருக்காக ஏற்பாடு செய்வது போல இந்த அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அலங்கரிக்கப்பட்ட அந்த அறையின் வீடியோவை சமூக வலைதளங்களில் டெக்கரேஷன் செய்த தனியார் நிறுவனமே பகிர்ந்ததாக சொல்லப்படுகிறது. எனினும், பயணித்தவர்கள் யார்? என்ற விவரங்கள் தெரியவில்லை.
டெக்கரேஷன்களுக்கு அனுமதி உண்டா?
ரயில்வே விதிகளின் படி, இதுபோன்ற டெக்கரேஷன்களுக்கு அனுமதி உண்டா? என்று பயணிகள் பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் இது குறித்து ரயில்வே தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளது. ரயில்வே இது குறித்து கூறியிருப்பதாவது:-
What’s happening here 🥺😭🥺😭🥺😭 pic.twitter.com/PGW1TqmyWc
— Godman Chikna (@Madan_Chikna) July 7, 2026
கடந்த 6 ஆம் தேதி வண்டி எண்: 11002 நந்திகிராம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த தம்பதியினர், முதல் ஏசி கூபேவை அலங்கரிப்பதற்காக தனியார் அலங்கார நிறுவனத்தை இணையம் மூலம் தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். ரயில் ஜால்னா ஸ்டேஷனுக்கு வந்ததும், டெக்கரேஷன் நிறுவனத்தைச் சேர்ந்த நபர் உரிய அனுமதியின்றி முதல் ஏசி பெட்டிக்குள் நுழைந்து டெக்கரேஷன் பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த சம்பவம் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய அஜாக்கிரதையான செயல் ஆகும்.
விசாரணைக்கு உத்தரவு
எனவே அலட்சியமாக இருந்த ரயில்வே ஊழியர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக துறை ரீதியிலான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை முடிவுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலிரவு அறை போல ரயில் பெட்டி அலங்கரிக்கப்பட்டு இருக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலக பரவி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் வேடிக்கையாகவும் பதிவிட்டு இந்த பதிவை வைரல் ஆக்கி வருகிறார்கள். அதேவேளையில், ரயில் பெட்டிக்குள் வந்து இந்த அளவு டெக்கரேஷன் செய்யும் நேரம் வரை ரயில்வே ஊழியர்கள் கண்டுகொள்ளாமல் இருந்தார்களா? என்பது உண்மையாகவே சந்தேகத்தை எழுப்புவதாகவும் சில நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர்.














Click it and Unblock the Notifications