தம்மாத்துண்டு கால்வாய் தான்.. உலக பொருளாதாரத்தையே தாங்குது! ஹார்மூஸ் நீரிணை ஏன் அவ்வளவு முக்கியம்?

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: உலக பொருளாதாரத்தின் முக்கிய நரம்பாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி கடந்த சில மாதங்களாக மீண்டும் மீண்டும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இந்த ஜலசந்தி வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் விளைவாக உலகளாவிய எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டதோடு, உலக பொருளாதாரத்திலும் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.

இந்த சூழ்நிலையைப் பற்றி யுனி கிரிடெட் நிறுவனத்தின் முதலீட்டு ஆய்வு பிரிவு சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கை சர்வதேச சந்தைகளில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. 'ஹார்முஸ் ஜலசந்தி அதிர்ச்சி' என்ற தலைப்பில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில், எண்ணெய் விலை உயர்வு, பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து முக்கியமான கணிப்புகளை முன்வைத்துள்ளது. இந்த ஜலசந்தி உலகளாவிய எரிசக்தி வர்த்தகத்தில் மிகவும் முக்கியமான பாதையாக உள்ளது.

iran us war

ஹார்முஸ் ஜலசந்தி

உலகளவில் தினசரி கடத்தப்படும் கச்சா எண்ணெயில் சுமார் 34 சதவீதம், அதாவது சுமார் 1.5 கோடி பேரல்கள் இந்த பாதை வழியாகவே கடந்து செல்கின்றன. குறிப்பாக சீனா மற்றும் இந்தியா போன்ற ஆசிய நாடுகளுக்கே இந்த எண்ணெயின் பெரும்பங்கு செல்கிறது. மொத்த விநியோகத்தில் 90 சதவீதம் வரை ஆசிய நாடுகளுக்கே சென்றடைகிறது என்பதால், இந்த பாதையில் ஏற்படும் சிக்கல்கள் நேரடியாக அந்த நாடுகளின் பொருளாதாரத்தை பாதிக்கக்கூடியவை.

எரிவாயு விநியோகம்

மேலும், இந்த ஜலசந்தி வழியாக தினமும் சுமார் 50 லட்சம் பேரல்கள் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளும், உலகளாவிய LNG விநியோகத்தில் 20 சதவீதம் இயற்கை எரிவாயுவும் கடந்து செல்கின்றன. இதனால் இந்த பாதையில் சிறிய தடையும் ஏற்பட்டாலும், அதன் தாக்கம் உலகளவில் உணரப்படுகிறது. சமீபத்தில் ஏற்பட்ட மோதல்களின் விளைவாக, கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக பாதிக்கப்பட்டதால், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலரைத் தாண்டியது.

எரிவாயு விலை

அதேபோல் எரிவாயு விலையும் 70 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விலை உயர்வு உலகளவில் பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்தவரை, அமெரிக்கா மற்ற நாடுகளை விட வலுவான நிலையில் இருக்கும் என ஆய்வு தெரிவிக்கிறது. இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி சுமார் 2 சதவீதம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஐரோப்பா நாடுகளின் நிலைமை வேறுபட்டதாக இருக்கும். அங்கு வளர்ச்சி வெறும் 0.8 சதவீதமாக மட்டுமே இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

உலக பணவீக்கம்

பணவீக்கம் 3 சதவீதத்தைத் தாண்டும் வாய்ப்பு உள்ளதால், ஐரோப்பிய மத்திய வங்கி ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வட்டி விகிதங்களை உயர்த்தும் வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில் அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி குறைப்பு நடவடிக்கையை 2026-ன் இறுதிக்காலம் வரை தள்ளிப் போடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எரிசக்தி இறக்குமதியை அதிகமாக நம்பியிருக்கும் ஜெர்மனி மற்றும் இத்தாலி போன்ற நாடுகள் இந்த நெருக்கடியால் அதிகமாக பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக ஜெர்மனியின் ரசாயன மற்றும் வாகன உற்பத்தித் துறைகள் அதிக அழுத்தத்தை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. அதேசமயம், சீனா உள்நாட்டு நிலக்கரியை அதிகம் பயன்படுத்துவதால், இந்த அதிர்ச்சியில் இருந்து ஓரளவு தப்பிக்கக்கூடிய நிலை உள்ளது.

கச்சா எண்ணெய் விலை

இந்த மோதல் நீண்ட காலம் தொடர்ந்தால், கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 130 டாலரைத் தாண்டும் அபாயம் இருப்பதாகவும், எரிவாயு விலையும் மேலும் உயரக்கூடும் என்றும் ஆய்வறிக்கை எச்சரிக்கிறது. இதனால் உலகளாவிய பணவீக்கம் 5 சதவீதத்தைத் தாண்டும் சூழல் உருவாகலாம். அப்படியானால் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை மேலும் உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

ப்ரெண்ட் கச்சா எண்ணெய்

இத்தகைய சவால்கள் இருந்தாலும், சில நம்பிக்கையூட்டும் அம்சங்களும் உள்ளன. இந்த மோதல் நீண்ட காலம் நீடிக்காது என்றும், கோடைக்காலத்துக்குள் ஒரு தீர்வு கிடைக்கும் என்றும் ஆய்வறிக்கை கணிக்கிறது. அப்படி நடந்தால், 2026-ன் இறுதிக்குள் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 90 டாலர் அளவில் நிலைபெறும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மொத்தத்தில் பார்க்கும்போது, ஹார்முஸ் ஜலசந்தியில் உருவான இந்த நெருக்கடி உலக பொருளாதாரத்தை நேரடியாக பாதிக்கும் முக்கிய காரணமாக மாறியுள்ளது. கப்பல் போக்குவரத்து முழுமையாக சீரடைந்து, நிரந்தர அமைதி நிலை ஏற்பட்டால் மட்டுமே உலக பொருளாதாரம் மீண்டும் நிலையான வளர்ச்சி பாதைக்கு திரும்பும் என்றே பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+