சென்னையில் வாடகை வீடு பார்க்கறீங்களா?சர்னு ஏறிய வீட்டு வாடகை.. அதுக்குனு ஒரு அளவு வேணாமா? காரணமே வேற
சென்னை: சென்னையில் தங்கி வசிப்பவர்களுக்கே வீடு கிடைக்காமல் திண்டாட்டமாக உள்ளது. இப்போது ஒரு புது தகவல் வெளியாகி தமிழகத்தின் தலைநகரை வெலவெலக்க செய்துள்ளது.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, சென்னையின் நில மதிப்பு உயர்ந்துவிட்டதாக ரியல் எஸ்டேட் தரப்பில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது..

நில மதிப்பு உயர்வு: அதாவது, மெட்ரோ ரெயில் பாதை செல்லும் பகுதிகளை சுற்றியுள்ள இடங்களின் சொத்து மதிப்பு திடீரென 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரையும், மற்ற பகுதிகளை காட்டிலும் மெட்ரோ ஸ்டேஷன் பகுதிகளில், 50 சதவீதம் வரை சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.
குறிப்பாக, 2013-ம் ஆண்டு கீழ்ப்பாக்கத்தில் சதுரடி ரூ.11,600லிருந்து ரூ.13,200 ஆகிவிட்டதாம்.. வடபழனியில் சதுரடி ரூ.7,900யிலிருந்து ரூ.10 ஆயிரத்துக்கும், கோயம்பேட்டில் சதுரடி 7000 ரூபாயிலிருந்து கிட்டத்தட்ட 9 ஆயிரம் ரூபாய்க்கும், சைதாப்பேட்டையில் ரூ.9,500-லிருந்து 12 ஆயிரம் ரூபாயாகவும் தற்போது உயர்ந்துவிட்டதாம். ஆக, சராசரியாக இடத்தின் மதிப்பு 50 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிகிறது.
பூந்தமல்லி: அண்ணாசாலை பகுதியில், அதற்கு மேல் விலை கூடிவருகிறது. ஓஎம்ஆர் ராஜீவ்காந்தி சாலையிலும், 30 சதவீதம் அளவுக்கு நிலத்தின் மதிப்பு உயர்ந்துள்ளது. வடசென்னை, தென் சென்னையின் பல்வேறு இடங்கள் மாதவரம், சோழிங்கநல்லூர், பூந்தமல்லி, போரூர் போன்ற இடங்களில் சொத்து மதிப்பு திடீரென 40 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.
அன்று வளர்ச்சி பெறாத இடமாக கருதப்பட்ட வடசென்னையின் பகுதிகள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளதாகவும், திருவொற்றியூர், மாதவரம் பகுதிகளுக்கு மெட்ரோ ரெயில் சேவை வந்த காரணத்தினாலேயே, இந்த இடத்தின் மதிப்பு பல மடங்கு அதிகரித்து விட்டதாகவும் புள்ளிவிரங்கள் கூறியிருந்தன.
வீட்டு வாடகை: இந்நிலையில் தற்போது, சென்னையின் வீட்டு வாடகை 15 சதவீதம் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. இதுகுறித்து சொத்து ஆலோசகர்கள் தரப்பில் சொல்லும்போது, "சென்னையில் மாதவரம், கொளத்தூர், பெரம்பூர் உள்ளிட்ட மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் புதிய பிரீமியம் வீடுகளுக்கான வாடகை ரூ.75 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை உயர்ந்து விட்டது.
நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, ஆர்.ஏ. புரம் போன்ற பகுதிகளில் புதிய பிரீமியம் வீடுகளுக்கான வாடகை ரூ.75 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை உள்ளது. மயிலாப்பூர், மந்தைவெளியின் பழைய பகுதிகளில் கட்டிடங்கள் பழமையானவை என்பதால், வசதிகள் குறைவாகவே உள்ளன, எனவே, ரூ.30 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை வாடகை உள்ளது.
வாடகை வசூல்: ஆனால், மற்ற பகுதிகளில் 2 மற்றும் 3 படுக்கை அறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ. 15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை வாடகை வசூலிக்கப்படுகிறது.
இப்படி வீட்டு வாடகை உயர்த்துவதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.. இதில் பிரதான காரணமே சொத்து வரி உயர்த்தப்பட்டதுதான் என்கிறார்கள்.. கே.கே.நகர், அண்ணா நகர் போன்ற பகுதிகளில் பழைய சொத்துக்களை பெரிய அளவில் மறு சீரமைப்பு செய்வதால், உரிமையாளர்கள் தற்காலிகமாக வாடகை வீடுகளை தேடுகிறார்களாம். இதனாலும் வீட்டு வாடகை உயர்த்தப்படுகிறதாம்.
சிறந்த வேலைவாய்ப்பு: சென்னையில் சிறந்த வேலைவாய்ப்புகள், வீட்டில் இருந்து வேலை செய்தல், தனி குடும்பங்களின் அதிகரிப்பு போன்றவை காரணமாகவும், வீடுகளின் தேவை அதிகமாகி உள்ளது.. அதுமட்டுமல்ல, புறநகர் பகுதிகளிலிருந்து, மக்கள் சென்னைக்குள்ளே நோக்கி நகர்ந்து வருவதும் வீட்டு வாடகை உயர்வுக்கு காரணமாகிறதாம்.
சென்னையில் புலம் பெயர்ந்து வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் வீட்டு வாடகை உயர்த்தப்படுவதாகவும், வெளிநாடுகளில் உள்ளவர்கள் தங்கள் முதலீடுகளை வீடுகளில் செய்து வாடகைக்கு விடுவதும், பழைய வீடுகளை மேம்படுத்தி அதிக வாடகைக்கு விடுவதும் அதிகரித்துவிட்டதாம்.












Click it and Unblock the Notifications