"நிஜ முகம்".. திமுக ஆட்சிக்கு வந்தாலே இப்படித்தான்.. வானதி சீனிவாசனிடம் இருந்து பறந்த பரபர அறிக்கை
பாலாஜி உத்தம ராமசாமி கைதுக்கு வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்
சென்னை: பேச்சுரிமை, கருத்து சுதந்திரம் குறித்து பேசும் திமுக, ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்காமல், பாஜகவினரை மட்டும் கைது செய்வது ஏன்? என்று பாஜக மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக எம்பி ஆ.ராசா, கடந்த சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக பாஜகவும், இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர்,.
மேலும் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எம்பி பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர்.. தமிழகம் முழுவதும் போலீசிலும் புகார் தந்து வருகின்றனர்.
பாஜகவும், இந்து முன்னணி உள்பட பல்வேறு இந்து அமைப்புகள், ஆ.ராசாவுக்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்தும் வருகின்றன...

பீளமேடு
இதனிடையே, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் வீடியோ ஆதாரத்துடன், பீளமேடு போலீசில் ஒரு புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், "கடந்த 18ம் தேதியன்று, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை கண்டித்து, இந்து முன்னணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், ஆ.ராசா, பெரியார் ஆகியோரை இழிவுபடுத்தி பேசிய பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தனர்.

ப்ரூப் பண்ணுங்க
இந்த புகாரின் பேரில் பாலாஜி உத்தம ராமசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். கைது செய்யப்படும்போது செய்தியாளர்களிடம் பேசிய பாலாஜி உத்தம ராமசாமி, "என்னை கைது செய்தது அதிகார துஷ்பிரயோகம்... ஒரு மதத்தை குறித்து அவதூறாக பேசிய அவர்களது எம்பியை கண்டிக்காமல் என்னை கைது செய்துள்ளனர். நான் என்ன தவறாக பேசினேன் என்பதை மாநில அரசு நிரூபித்தே ஆக வேண்டும். இதனை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வேன். நான் கூறிய கருத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன்" என்று ஆவேசமாக கூறினார்.

வானதி சீனிவாசன்
பாலாஜி உத்தம ராமசாமி கைதுக்கு தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.. அந்தவகையில், அக்கட்சியின் தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "திமுக துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில், இந்துக்களை இழிவாக பேசியது, இந்துக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்து விரோத முகம்
ஆ.ராசா எம்பியாக உள்ள, நீலகிரி மக்களவைத் தொகுதியில், 'இந்து முன்னணி' அழைப்பு விடுத்த முழு அடைப்பு போராட்டம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இதனால், தங்களது இந்து விரோத முகம் அம்பலப்பட்டு போனதை தாங்கிக் கொள்ள முடியாத விரக்தியில், கோவை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி அவர்களை திமுக அரசு கைது செய்துள்ளது. மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பேசிய, ஆ.ராசாவை கைது செய்யாமல், பெயரளவுக்குக் கூட கண்டனம் தெரிவிக்காமல், அதற்கு எதிர்வினையாற்றிய பாஜக மாவட்டத் தலைவரை கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

ஃபாசிசம்
ஜனநாயகத்தின் மீது துளியும் நம்பிக்கை இல்லாத, பாசிச அரசு என்பதை இதன் மூலம் மீண்டும் ஒருமுறை திமுக நிரூபித்திருக்கிறது. திமுகவினர் வாயை திறந்தாலே, ஜனநாயகம் பேச்சுரிமை, கருத்து சுதந்திரம் பற்றி வகுப்பெடுப்பார்கள். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எதிர் கருத்து சொன்னாலே கைது செய்து, அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.. திமுகவின் இந்த அதிகார மிரட்டலுக்கு பாஜக ஒருபோதும் அஞசாது. கைது செய்யப்பட்ட பாஜக மாவட்டத் தலைவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர் மீதான பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். பாசிச திமுக அரசை எதிர்த்து பாஜக தொடர்ந்து போராடும்" என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications