இனி ஒரு ரூபாய் கூட செலவின்றி நாடு முழுக்க எந்த மருத்துவமனையிலும் சிகிச்சை பெறலாம்.. எப்படி?
சென்னை: இனி ஒரு ரூபாய் கூட செலவின்றி நாடு முழுக்க எந்த மருத்துவமனையிலும் சிகிச்சை பெற முடியும்.. மருத்துவ காப்பீடு விதிகளில் நடந்த மாற்றத்தால் ஜனவரி 25 முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. மருத்துவ காப்பீடு தொடர்பான என்ன விதிகள் மாறி உள்ளது. காப்பீடு நிறுவனங்கள் ஏற்றுக்கொண்ட முக்கியமான விஷயம் என்னவென்று பார்ப்போம்.
மருத்துவ காப்பீடு (எந்த நிறுவனத்தில் காப்பீடாக இருந்தாலும்) செய்துள்ள நோயாளிகள், எந்த மருத்துவமனைக்கு போனாலும் முன்கூட்டியே பணம் செலுத்தாமல் சிகிச்சை பெற வழிவகை செய்ய வேண்டும் என்றும் நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் சுகாதார காப்பீட்டுதாரர்களுக்கு 100 சதவீத பணமில்லா சிகிச்சையை வழங்க வேண்டும் என்று இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரையை மருத்துவ காப்பீடு நிறுவனங்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டு உடனடியாக இதை நடைமுறைப்படுத்தி உள்ளன. ஜனவரி 25 முதல் நாடு முழுவதும் பணமில்லா சேவை தொடங்கி உள்ளது.

நம் நாட்டில் மருத்துவ காப்பீடு தொடர்பாக போதிய விழிப்புணர்வு இன்னமும் போய் சேரவில்லை.. மருத்துவ காப்பீடு செய்தால் விபத்து மற்றும் திடீர் உடலக்குறைவு போன்ற அத்தியாவசியங்களில் போது தனியார் மருத்துவமனைகளில் கூட சென்று கட்டணமின்றி சிகிச்சை பெற முடியும். தற்போதைய நிலையில் காப்பீட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்த மருத்துவமனையில் மட்டுமே கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தாமல் சிகிச்சை பெற முடியும்.
அதேநேரம் காப்பீட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யாத மருத்துவமனைகளில் பாலிசிதாரர்கள் சிகிச்சை பெற்றிருந்தால், அவர்கள் முதலில் பில் தொகையைச் செலுத்த வேண்டும். பின்னர் காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து அந்தக் கட்டணத்தைத் திருப்பிச் செலுத்துமாறு ஆஸ்பத்திரி பில்லை காட்டி கிளைம் செய்ய வேண்டும். ஆனால் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் கேட்டதை விட குறைவான தொகையே பெரும்பாலும் கிடைக்கிறது.. அதுவும் உடனே கிடைப்பது இல்லை.. பெரும்பாலும் தாமதமாகவே கிடைக்கும்.
மேலும் நெட்வொர்க் மருத்துவமனைகளைத் தவிர வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற முதியவர்கள், சிகிச்சை பெற்றதற்கான பில்கள் மற்றும் சரியான ஆவணங்களை சேகரித்து சமர்ப்பிப்பதில் பெரும் சிரமத்தை சந்தித்து வந்தார்கள். இந்நிலையில் புதிய நடைமுறையின் காரணமாக சில மருத்துவமனைகளில் மட்டுமின்றி அனைத்து மருத்துவமனைகளிலும் இந்த வசதியை மருத்துவ காப்பீடு செய்தவர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும் .
அதேநேரம் மருத்துவ காப்பீடு செய்தவர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் இருக்கிறது. மருத்துவ காப்பீட்டு பாலிசியின் வரம்பு எவ்வளவோ அந்தத் தொகை மட்டுமே காப்பீட்டு நிறுவனங்கள் செலுத்தும். அதற்கு ஒரு ரூபாய் கூட கூடுதலாக செலுத்தாது. எனவே சிகிச்சைக்க ஆகும் செலவில் மீதமுள்ள தொகையை பாலிசிதாரர்கள் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும்.
அதேநேரம் இந்த நடைமுறையில் உள்ள நடைமுறையை கண்டிப்பாக அறிய வேண்டும். நெட்வார்க்கில் இல்லாத மருத்துவமனயில் சிகிச்சை பெற விரும்பும் நோயாளிகள், காப்பீட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடாத மருத்துவமனைகளில் பணமில்லா சிகிச்சைகளைப் பெற விரும்பும் பாலிசிதாரர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும்.
அதேநேரம் விபத்து உள்பட அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 48 மணிநேரத்திற்குள் காப்பீட்டு நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தாக வேண்டும். மேலும் மருத்துவ காப்பீட்டு பாலிசி எடுத்தவருக்கு,பாலிசியில் குறிப்பிடப்பட்ட சிகிச்சைக்கு மட்டுமே காப்பீடு கவர் ஆகும். அதாவது காப்பீட்டில் கவர் ஆகும் சிகிச்சைக்கு மட்டுமே இந்த பணமில்லா வசதி கிடைக்கும்.
நூறு சதவீத பணமில்லா சேவை தி ஜெனரல் இன்சூரன்ஸ் கவுன்சில் அறிவித்துள்ளதால் இனிமேல் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பணமில்லா சிகிச்சை பெற உங்களால் நிச்சயம் முடியும். கிராமப்புறங்கள் மற்றும் சிறு நகரங்களில் வசிப்பவர்கள் இந்த திட்டத்தால் பெரும் பலன் அடைவார்கள். அவர்கள் தான் அவசரத்திற்கு பணத்தை புரட்ட முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு இந்த திட்டம் பெரிய வரப்பிரசாதம் ஆகும்.












Click it and Unblock the Notifications