இன்னும் 10 மாசம் இருக்கே.. இப்பவே இப்படியா.. சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட அதிமுக!
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி கடந்த சில மாதங்களுக்கு முன் இறுதி செய்யப்பட்டது. தேர்தலுக்கு 1 வருடத்திற்கு முன்பே கூட்டணியை உறுதி செய்துவிட்டார்கள் , இனிமேல் தேர்தலுக்கான பணிகளை செய்வார்கள், களப்பணிகளை தொடங்குவார்கள் என்றுதான் இரண்டு கட்சி நிர்வாகிகளும் எதிர்பார்த்தனர். ஆனால் எதிர்பார்க்காத விதமாக அதிமுக - பாஜக கூட்டணிக்கு உள்ளேயே கடுமையான பூசல் ஏற்பட்டு உள்ளன.
தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ளன. ஆனால் அதற்குள் எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் ரீதியாக முக்கிய நெருக்கடி ஒன்று ஏற்பட்டு உள்ளது. அதிமுக - பாஜக கூட்டணிக்குள் ஏற்பட்டு உள்ள பூகம்பம்தான் அது. அடுத்தடுத்து நடந்த 2 சம்பவங்கள் அதிமுகவிற்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் நெருக்கடியை கொடுத்துள்ளன.

சம்பவம் 1
கடந்த வாரம் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் பாஜக தலைவர்கள், ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண், ஆர்எஸ்எஸ் முக்கியஸ்தர்கள், மடாதிபதிகள், ஜீயர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்களான செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்எல்ஏ ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இம்மாநாட்டில் அண்ணா குறித்து சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால், மேடையில் அமர்ந்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இதற்கு மாநாட்டில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதோடு வீடியோ காட்சி முடியும் வரை அதை சிலை போல அமர்ந்து பார்த்தனர். அதிமுகவினரின் இந்த செயல் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தியது. திமுக இதை முறையாக பயன்படுத்திக்கொண்டு அடித்து ஆடியது.
இது குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடங்கி முதல்வர் ஸ்டாலின் வரை கடுமையாக விமர்சித்திருந்தனர். மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த விமர்சனங்கள் அடங்கிய வீடியோவை பார்த்து ரசித்திருக்கிறார்கள் 'அண்ணா' பெயர் தாங்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி ஆகியோரின் செயல் கண்டனத்திற்கு உரியது என்று விமர்சனம் செய்து இருந்தனர்.
இதனால் எடப்பாடி பழனிசாமி அவசர அவசரமாக இதற்கு விளக்கம் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அண்ணாதுரையை அதிமுக ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்தார். கருணாநிதியின் மகனுக்கும், திமுகவுக்கும் அண்ணாவின் பெயரை உச்சரிக்க என்ன தகுதி இருக்கிறது? பேரறிஞர் அண்ணாவை எங்கள் கட்சியின் பெயரில், கொடியில் தாங்கி இருக்கும் நாங்கள்.. அவரை ஒரு நொடி கூட விட்டுக்கொடுக்க மாட்டோம். ஏனெனில் அவர் எங்கள் ரத்தத்தில் கலந்துவிட்டார், என்றெல்லாம் விளக்கம் கொடுத்தார். பாஜக முன்னிலையில் நடத்தப்பட்ட ஒரு மாநாட்டில் ஏற்பட்ட இந்த கசப்பான சம்பவம் எடப்பாடிக்கு நெருக்கடியை கொடுத்தது.
சம்பவம் 2
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்று கூறி இருந்தார். இது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முக்கியமாக அதிமுகவைச் சேர்ந்தவரே முதலமைச்சர் என்று கூறிய அமித்ஷா, எடப்பாடி பழனிசாமியின் பெயரை சொல்லாமல் தவிர்த்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். அதிமுகவுக்கு கீழ் பாஜக இருப்பதால், அதிமுகவைச் சேர்ந்தவரே முதலமைச்சராக இருப்பார் என்று கூறி இருந்தார். ஆனால் எடப்பாடி பெயரை குறிப்பிட அமித் ஷா மறுத்துவிட்டார். இதற்கும் அவசர அவசரமாக பதில் தர வேண்டிய கட்டாயம் எடப்பாடிக்கு ஏற்பட்டது.
நமக்கு கூட்டணி பலமானதாக அமையும். யாரும் கவலைப்பட வேண்டாம். முதற்கட்டமாக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். பாஜகவுடன் கூட்டணி அமைத்ததில் இருந்து ஸ்டாலின் பதற்றமாக இருக்கிறார். அதிமுக யாருடன் கூட்டணி வைத்தால் உங்களுக்கு என்ன?
பயம் வந்துவிட்டது ஸ்டாலினுக்கு.. பாஜகவுடன் கூட்டணி அமைத்ததை ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை. பாஜகவுடன் கூட்டணி அமைத்ததன் நோக்கம், நமது வேட்பாளருக்கு வாக்குகள் சிதறாமல் கிடைக்க வேண்டும். திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதற்காக கூட்டணி வைத்துள்ளோம். அதிமுகவை பாஜக கபளீகரம் செய்துவிடும் என்று சொல்கிறார்கள். அதிமுக பொன் விழா கண்ட கட்சி. அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்று பாயிண்டை எடுத்து வைத்து அமித் ஷாவிற்கு பதிலடி தரும் கட்டாயத்திற்கு எடப்பாடி தள்ளப்பட்டார்.
10 மாதம் இருக்கே
இன்னும் தேர்தலுக்கு 10 மாதங்கள் வரை இருக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட நேரத்தில்.. வரிசையாக பாஜக காரணமாக எடப்பாடிக்கு ஏகப்பட்ட பிரஷர் ஏற்பட்டு வருகிறது. பாஜக ஏதாவது ஒரு நடவடிக்கையை எடுக்க.. அதற்கு எடப்பாடி பழனிசாமி பதிலும், விளக்கமும் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது.












Click it and Unblock the Notifications