சென்னை ஐடி ஊழியர் மரணம்! ஒரே ஒரு சிகரெட்டால் வந்த வினை! நடந்தது என்ன?
சென்னை: சென்னையில் ஐடி ஊழியர் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா, அவருக்கு என்ன நிகழ்ந்தது என்பது குறித்து கே.கே. நகர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
திருவண்ணாமலையை சேர்ந்தவர் நேதாஜி (34). இவர் ஐடி ஊழியர், சாலிகிராமம், விஜயராகவபுரத்தில் ஒரு வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை அவரது வீட்டில் இருந்து அளவுக்கு அதிகமான புகை வந்தது.

இதை அவருடைய அக்கம்பக்கத்து வீட்டினர் பார்த்து அதிர்ச்சியடைந்து கே.கே.நகர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த போலீஸார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது அங்கு எரிந்த நிலையில் ஐடி ஊழியர் சடலமாக கிடந்தார். இதையடுத்து அவரது உடலை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேதாஜியின் மரணம் தற்கொலையா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதுகுறித்து முதற்கட்ட விசாரணையில் சில விஷயங்கள் கிடைத்துள்ளன. அதாவது நேதாஜி குடும்ப பிரச்சினையால் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தாராம். இதனால் அவருக்கு மனஅழுத்தம் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்த மன அழுத்தத்தை போக்க அவர் தினமும் மது அருந்தும் பழக்கத்தை கொண்டிருந்தாராம். நேற்று அதிகாலை 3 மணிக்கு குடித்துக் கொண்டிருந்த அவர் சிகரெட்டையும் பற்ற வைத்துள்ளார். குடிபோதையில் சிகரெட்டை கையில் வைத்தபடியே கட்டிலில் போய் படுத்தாராம்.
ஒரு கட்டத்தில் சிகரெட் மெத்தையில் விழுந்ததில் மெத்தை தீப்பிடித்தது. போதையில் தீப்பிடித்தது கூட தெரியாமல் நேதாஜி தூங்கிக் கொண்டிருந்தார். அறையின் ஜன்னல்கள் மூடியிருந்ததால் அந்த புகை வெளியேற வழியில்லாமல் அறைக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருந்தது.
இந்த நிலையில் ஜன்னல் வழியே இருந்த இடைவெளிகளில் புகை வந்ததை அந்த பகுதியினர் கவனித்துவிட்டு கே.கே.நகர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் சென்று பார்த்த போது அங்கு லேசான காயங்களுடன் மயக்க நிலையில் இருந்த நேதாஜியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து நேதாஜியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications