இலங்கை அகதிகள் முகாம் இல்ல.. 317 கோடி செலவில் முதல்வர் ஸ்டாலின் மாற்றிய மறுவாழ்வு முகாம்!
சென்னை: திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் 'இலங்கை அகதிகள் முகாம்' என்பதை 'இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றினார். 'இந்தப் பெயர் மாற்றம் வெறும் பலகை அளவில் மட்டும் நின்றுவிடக்கூடாது' என்று அவர் யோசித்தார்.
அதன் நீட்சியாக, 'மறுவாழ்வு' என்ற வார்த்தைக்கு உண்மையான ஓர் அர்த்தத்தை அவர் கொடுத்திருக்கிறார். ஆம், இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக 317 கோடி ரூபாயை முதலமைச்சர் ஸ்டாலின் ஒதுக்கியிருக்கிறார்.
தமிழ்நாடு அரசு ஒதுக்கிய இந்த நிதியின் மூலம், திண்டுக்கல் மாவட்டம் தோட்டனூத்தில் இலங்கைத் தமிழ் அகதிகள் முகாமில் வசித்து வரும் மக்களுக்கு 8 மாதங்களில் 321 வீடுகளை முதலமைச்சர் ஸ்டாலின் கட்டிக் கொடுத்தார். அதற்கான திறப்புவிழாவும் சிறப்பாக நடைபெற்றது. அங்கு மேலும் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இலங்கை அகதிகளின் நலனுக்காக தமிழக அரசு தனியே ஒரு குழுவை உருவாக்கியுள்ளது. அதன் தலைவராக அமைச்சர் செஞ்சி மஸ்தான் இருக்கிறார். துணைத்தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமியும் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமாரும் உள்ளனர்.
இந்தக் குழுவில், மறுவாழ்வுத்துறை ஆணையர், இலங்கைத் தமிழர்களின் வாழ்நிலை குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற பாரிவேலன் மற்றும் இளம்பரிதி, OfERR (Organisation for Eelam Refugees Rehabilitation) என்ற அமைப்பின் எஸ்.சி.சந்திரஹாசன் ஆகியோர் உள்ளனர்.
குழுவில், 'மூத்த பத்திரிகையாளர்' என்ற அடிப்படையில், கோவி.லெனின் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், இலங்கைத் தமிழ் அகதிகளின் பல்வேறு முகாம்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, அரசுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

70 ஆயிரம் இலங்கை அகதிகள்
இலங்கைத் தமிழர்களின் மேம்பாட்டுக்காக அரசு எடுத்துள்ள முயற்சிகள் குறித்து கோவி.லெனினிடம் பேசினோம். "தமிழ்நாட்டில் மொத்தம் 108 இலங்கைத் தமிழர் முகாம்கள் இருக்கின்றன. இவர்கள் அனைவரும் 1983 ஆம் ஆண்டில் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் தொடங்கியபோது புலம்பெயர்ந்து தமிழகம் வந்தவர்கள்.
இதில், 30 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருபவர்களும் உள்ளனர். இவர்களுக்கு அரசு சார்பாக சில உதவிகள் கிடைத்து வருகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை இவர்களைத் தொப்புள் கொடி உறவுகளாகப் பார்க்கிறோம். ஆனால், இந்திய சட்டத்தின் பார்வையில் இவர்கள் சட்டவிரோத குடியேறிகள். அவர்களுக்கு பாஸ்போர்ட் அல்லது விசா என்பதே கிடையாது.
ஐ.நா-வின் குடியுரிமைச் சட்டத்தில் இந்தியா கையொப்பமிடவில்லை. ஆகவே, அகதிகளுக்குக் குடியுரிமை அளிப்பதில் சில சட்டச் சிக்கல்கள் உள்ளன. அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நாம் உதவிகளைச் செய்து வருகிறோம்.
தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் மட்டும் 70 ஆயிரம் அகதிகள் உள்ளனர். இவர்கள் அரசின் நேரடிக் கணக்குக்குள் வருபவர்கள். வெளியில் தனியாகத் தங்கி உள்ளவர்களைக் கணக்கிட்டால் 30 ஆயிரத்துக்குள் வருவார்கள். அப்படிப் பார்த்தால், ஒரு லட்சம் பேர் வரையில் தமிழ்நாட்டில் உள்ளனர்.

‘இலங்கைத் தமிழர் நலன் ஆலோசனைக் குழு’
இலங்கை அகதிகளைப் பொறுத்தளவில் அவர்களின் வாழ்வாதாரம் இரண்டுவிதமாக உள்ளன. ராஜீவ்காந்தி மரணத்துக்கு முன் அவர்களை நமது மக்கள் அரவணைத்தவிதம் என்பது வேறு. ராஜீவ்காந்தி மரணத்துக்குப் பின் அவர்கள் மீதான பார்வை என்பது வேறு. ராஜீவ் மரணத்தால் இந்த மக்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாக வேண்டிய நிலை இருந்தது என்பதே உண்மை.
ஆகவே, அவர்களின் நலன்சார்ந்த திட்டங்கள் என்பது முறைப்படுத்தப்படவில்லை. குடியுரிமையும் இல்லாத, வாக்குரிமையும் இல்லாத இந்த மக்கள் மீது யாருக்கு அக்கறை எழப் போகிறது? ஆனால், முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, 'இந்த மக்களின் நலன்கள் காக்கப்பட வேண்டும்' என்பதில் உறுதியாக இருந்தார்.

பொறியியல் படித்தும் பெயின்ட் வேலை
முதலில், இலங்கைத் தமிழ் அகதிகளின் அடிப்படை வாழ்வாதாரத்தை மேம்படுத்த விரும்பினார். மேலும், 'அந்த மக்களுக்கு முறையான வாழ்வுரிமை கிடைக்க வேண்டும்' எனவும் ஆசைப்பட்டார். அவர்களுக்கான குடியுரிமை என்பது நீண்டக் காலத்திட்டம். இதையொட்டித்தான், 'இலங்கைத் தமிழர் நலன் ஆலோசனைக் குழு'வை முதலமைச்சர் அமைத்தார்" என்கிறார் லெனின்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்தக் குழு, இலங்கை அகதிகளின் கல்வி உரிமை, இருப்பிட தரத்தை உயர்த்துவது, குடிநீர் மாற்றும் சாலை வசதி, மருத்துவ வசதி, வேலைவாய்ப்பு என அடிப்படைக் கட்டமைப்புகளைக் களஆய்வு செய்து அரசுக்கு ஆலோசனைகளைத் தரும். அதன் அடிப்படையில் அம்மக்களுக்கான தேவைகளை அரசு செய்து கொடுக்கும்.
இந்த முகாம்களில் உள்ள பிள்ளைகள் பொறியியல் கல்வி வரையில் படிக்கலாம். மருத்துவம் மட்டும் படிக்க முடியாது. ஏனெனில், அது ஒன்றிய அரசின் 'இந்திய மெடிக்கல் கவுன்சில்' அமைப்பின் கட்டுப்பாட்டில் வருகிறது. அதில், சில சட்டச் சிக்கல்கள் உள்ளன.
இதற்கு முன்பாக மு.கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் இந்த மக்கள் மருத்துவம் படிப்பதற்கான உரிமை இருந்தது. ஆனால், ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அது ரத்து செய்யப்பட்டுவிட்டது.
இம்முகாம்களில் உள்ள பல இளைஞர்கள் பொறியியல் படித்துள்ளனர். ஆனால், அவர்கள் பெயிண்ட் அடிக்கும் வேலைக்குத்தான் பெரும்பாலும் செல்கிறார்கள். காரணம், படிப்பு இருந்தாலும் தனியார் நிறுவனங்கள் இவர்களைப் பணிக்கு எடுப்பதில் தயக்கம் காட்டுகின்றன. இவர்களுக்குக் குடியுரிமை இல்லாததால் அரசு வேலை கொடுப்பதற்கும் வாய்ப்பில்லை" என்கிறார்.
''இவர்களின் மேம்பாட்டுக்காக முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?'' என்றோம். "இவர்களின் நல்வாழ்வுக்காகத் தமிழக அரசு 317 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இந்த நிதியை வைத்து வீடு கட்டித் தருவது, வேலைவாய்ப்பு அளிப்பது போன்றவை செயல்படுத்தப் பட்டுள்ளன.

குடும்பத் தலைவருக்கு மாதம் ரூ.1500
இலங்கைத் தமிழ் அகதிகளுக்காக, சென்னையில் வேலைவாய்ப்பு முகாம் ஒன்றையும் நடத்தினோம். அதன்மூலம் தனியார் நிறுவனங்களில் பல இளைஞர்களுக்கு வேலை தருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான முதல் நிகழ்வு, கடந்த 2021 ஆம் ஆண்டு வேலூர் மாவட்டம் மேலமொணவூர் பகுதியில் நடைபெற்றது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக பல முகாம்களுக்குச் சென்று நான் ஆய்வு நடத்தி வருகிறேன். அவர்களின் வசிப்பிடம் தரமாக இல்லை. ஒரு கொட்டகையில் மொத்தக் குடும்பமும் வசிக்கின்றன. சில முகாம்களில் 20 குடும்பங்களுக்கு ஒரு கழிப்பறைதான் இருக்கின்றது. அங்கெல்லாம் சுகாதார பாதிப்புகள் அதிகமாகவே உள்ளன.
ஆய்வின்போது பலர் என்னிடம், தனி வீடாகக் கட்டித் தருமாறு கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல், சுகாதார மையம், நூலகம், சாலை வசதி எனப் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
இம்மக்களுக்கு குடும்ப அட்டையை தமிழக அரசு கொடுத்துள்ளது. அரசின் வண்ணத் தொலைக்காட்சி பெட்டியும் கொடுக்கப்பட்டுள்ளது. குடும்பத் தலைவருக்கு மாதம் 1,500 ரூபாயும் குழந்தைகளுக்கு 750 ரூபாயும் இளைஞர்களாக இருந்தால் 1000 ரூபாயும் உதவித் தொகையாக கொடுப்பதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்" என்கிறார்.
தொடர்ந்து பேசிய கோவி.லெனின், '' இது இலங்கைத் தமிழர்களின் பிரச்னை மட்டும் இல்லை. இதற்குப் பின்னால் இந்திய வம்சாவளிகளான தமிழர்களின் நலனும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, சிறிமாவோ-சாஸ்திரி ஒப்பந்தம் (1964) மற்றும் சிறிமாவோ-இந்திராகாந்தி ஒப்பந்தம் (1974) ஆகியவை மூலம், 6 லட்சம் இலங்கை வம்சாவளித் தமிழர்களை இந்தியாவுக்கு அழைத்துக் கொள்வதாக ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. ஆனால், அவ்வளவு மக்கள் இந்தியாவுக்கு வரவில்லை. சொந்த நாடு திரும்புவதில் வாழ்வியல் சார்ந்த பிரச்சனைகள் அவர்களுக்கு இருந்தன.
அந்தவகையில், இந்திய வம்சாவளியினர் அப்படியே குடிபெயர்ந்து ஈழப் பகுதிக்கு வந்தனர். அங்கு அவர்கள் இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்பட்டனர். இலங்கை ராணுவம் புலிகளுக்கு எதிராக போரைத் தொடர்ந்தபோது அதற்குப் பயந்து ஏராளமான மக்கள் தமிழ்நாடு வந்துவிட்டனர்.

30,000 இந்திய வம்சாவளி தமிழர்கள்
இப்போது அவர்களிடம் முறையான ஆவணங்கள் இல்லை. ஆகவே, அவர்களை மீண்டும் இந்தியக் குடிமக்களாக ஏற்பதில் பிரச்சினை உள்ளது. அதேபோல, தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்த இலங்கைத் தமிழர்களுக்கும் சொந்த ஊரும் தெரியாது, பிறந்த ஊரில் குடியுரிமையும் கிடையாது.
இதுதொடர்பாக தொடரப்பட்ட நீதிமன்ற வழக்கில், 'நளினி என்பவருக்குக் குடியுரிமைத் தரலாம்' எனத் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதனை அடிப்படையாக வைத்து சில முயற்சிகளை இந்தக் குழு செய்து வருகிறது" என்கிறார்.
இதே சிக்கல் குறித்து வழக்கறிஞர் மனுராஜ் சுந்தரம் சில கருத்துகளை முன்வைத்துள்ளார். அவர், ''குடியுரிமை (திருத்த) சட்டத்தை (CAA) எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட 232 மனுக்களை 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் 40 ஆண்டுகளாக வாழும் தாயகம் திரும்பிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிட்டத்தட்ட 30,000 பேர் குடியுரிமை இல்லாததால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான உரிமை இச்சட்டத் திருத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் பிரிட்டிஷ் காலத்தில் தேயிலைத் தோட்டத்துக்குக் கூலிகளாகக் கொண்டு செல்லப்பட்டவர்கள். அப்போது, அவர்கள் யாரும் முறையான ஆவணங்களைக் கொண்டு அழைத்துச் செல்லப்படவில்லை.
அதேபோல், இலங்கைத் தமிழர்களின் நலனும் பாதிக்கப்பட்டுள்ளது. 'ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் வசிக்க விரும்பும் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியது. அதன் ஒருபகுதியாக இலங்கைத் தமிழர்களுக்கான மறுவாழ்வு நலத்திட்டங்களை ஸ்டாலின் அரசு செய்து வருகிறது" என்கிறார்.
---
-
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி! -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி












Click it and Unblock the Notifications